ஆய்வுகளை ஆய்வு செய்கிறோமா?

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (சி.எஸ்.டி.) ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டு அளவைக் குறைத்துவிட்டதாகவும், ஆராய்ச்சி நிறுவனங்கள் "சுயநிதி ஆராய்ச்சித் திட்டங்களை' தாங்களே வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளதால், இந்திய அறிவியல் ஆய்வுப் பணிகளுக்கு பின்னடைவு ஏற்படும் என்று சில நாள்களாக ஆராய்ச்சியாளர்களின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Updated on
2 min read

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (சி.எஸ்.டி.) ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டு அளவைக் குறைத்துவிட்டதாகவும், ஆராய்ச்சி நிறுவனங்கள் "சுயநிதி ஆராய்ச்சித் திட்டங்களை' தாங்களே வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளதால், இந்திய அறிவியல் ஆய்வுப் பணிகளுக்கு பின்னடைவு ஏற்படும் என்று சில நாள்களாக ஆராய்ச்சியாளர்களின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
 ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொண்ட கருப்பொருள் சமூகப் பயன்பாடு உள்ளதாக இருப்பதுடன், ஆய்வின் போக்கு குறித்து மாதம்தோறும் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்தத் துறையால் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
 தனியார் நிறுவனங்களின் நிதியுதவியில் ஆராய்ச்சிகள் நடைபெறுவது என்பது புதிதல்ல. இந்தியத் தொழில் துறையின் பெருநிறுவனங்களும், ஃபோர்டு ஃபவுண்டேஷன் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் பல கோடி ரூபாய் நிதியுதவி அளித்து இந்தியாவில் பல ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றன. ஆகையால், ஆராய்ச்சிக்கு நிதியுதவியை தனியாரிடம் பெறுவது புதிது அல்ல.
 ஆராய்ச்சிக்கான கருப்பொருளைத் தீர்மானிப்பது தனியார் நிறுவனங்களாக இல்லாமல், ஆராய்ச்சி நிறுவனங்களைத் தீர்மானிக்கக் கோருகிறது அரசு. இந்தியத் தொழில் துறைக்கும் சமூகத்துக்கும் பயனளிக்கும் ஆராய்ச்சிக்கான கருப்பொருளை ஆராய்ச்சி நிறுவனங்களே தீர்மானித்து, அதற்கான நிதியை தொழில் நிறுவனங்களைத் தேடிப் பெறும்படியான சுயநிதி ஆராய்ச்சித் திட்டங்களை மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை தற்போது வலியுறுத்துகிறது. அதாவது, அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு அவர்கள் சொல்வதைச் செய்வதோடு, சமூகத்துக்கு தேவையான ஆய்வுகளை நீங்களே தீர்மானித்து, நிதியையும் நீங்களே அந்த ஆய்வினால் பயன்பெறக்கூடிய அமைப்புகளிடம் கேட்டுப் பெறுங்கள் என்கிறது மத்திய அரசு.
 மேலும், 2014-15ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு ரூ.7,288 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது முந்தைய ஆண்டின் நிதிஒதுக்கீட்டைவிட ரூ.1,179 கோடி அதிகம். அப்படியிருக்கையில், நிதிப் பற்றாக்குறை காரணமாக சுயநிதி ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும்படி இளம் ஆராய்ச்சியாளர்கள் தள்ளப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை.
 அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை, மத்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆய்வுகள் (சி.எஸ்.ஐ.ஆர்.) ஆகியன உள்ளன. மேலும், ராணுவ ஆராய்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஒ.), இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.சி.எம்.ஆர்.) என பல்வேறு அமைப்புகளுக்கும் நிதியுதவியை அறிவியல் தொழில்நுட்பத் துறை அளித்து வருகிறது. இத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாகச் செலவிடப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 9,000 பேர் ஆய்வு முனைவர் பட்டங்கள் (பி.எச்டி.) பெறுகிறார்கள். ஆனால், இவற்றால் தொழில் துறைக்கோ அல்லது மக்கள் பயன்பாட்டுக்கோ அல்லது சமூகவியல் பயன்பாட்டுக்கோ என்ன பயன் என்றால், சொல்லும்படியாக எதுவுமே இல்லை.
 2013-14ஆம் ஆண்டின், அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஆண்டறிக்கையில் தரப்பட்டுள்ள தகவலின்படி, நடைபெற்றுக்கொண்டிருக்கும் 264 ஆராய்ச்சித் திட்டங்கள் குறித்து ஒரு குழு ஆய்வு மதிப்பீடு செய்ததில், இரண்டு திட்டங்கள் பாராட்டுக் குரியவை, 13 திட்டங்கள் மிக நன்று, 57 திட்டங்கள் நன்று, 86 திட்டங்கள் பரவாயில்லை, 104 திட்டங்கள் திருப்தி அளிக்கவில்லை என்று மதிப்பீடு செய்துள்ளது. இது எதைக் காட்டுகிறது என்றால், ஆராய்ச்சியாளர்கள் ஈடுபாடு இல்லாமல் இருப்பதையும், ஆராய்ச்சி உதவித் தொகை என்பது ஊதியத்துக்கான ஒரு வழியாகக் காணப்படுவதையும், பேராசிரியர் உள்ளிட்ட வேறு தொழில்களில் அமர்வதற்கான சான்றிதழாகவும் மட்டுமே கருதப்படுவதைத்தான் காட்டுகிறது.
 இந்தியாவில் ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதி மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜி.டி.பி.) 0.9% மட்டுமே. சீனாவில் இது 2%-ஆக இருக்கிறது. அதேபோன்று, இந்தியாவில் சமர்ப்பிக்கப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. ஆனால், சீனாவில் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
 இதெல்லாம் சரி. ஆனால், இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் எத்தனை பேர், மூன்று ஆண்டுகளுக்குள் தங்கள் ஆய்வை முடிக்கின்றார்கள்? மேலும் இரண்டு ஆண்டுகளுக்குக் கால அவகாசம் கோருவதும், அந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மாதம்தோறும் நிதியுதவி பெறுவதும், முடிவில் பெயருக்கு ஏதோ ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையைக் கடனே என்று வழங்குவதும்தான் பெரும்பாலும் நடந்து கொண்டிருக்கிறது.
 ஆகவே, இந்தியா ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் தரவில்லை, நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளைவிட, மக்கள் வரிப் பணத்திலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியை ஆராய்ச்சியாளர்கள் வீணடிக்கிறார்கள், உப்புச்சப்பு இல்லாத ஆய்வுப் பொருள்களை எடுத்துக்கொண்டு காலம் கடத்துகிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.
 ஆராய்ச்சிக்குக் கிடைக்கும் உதவித் தொகைக்காக ஆராய்ச்சி செய்யாமல், உளப்பூர்வமான ஈடுபாட்டுடன் தொழில் துறை மேம்பாட்டுக்கும், அறிவியல் சமூக மேம்பாட்டுக்கும் பயனுறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், இந்த ஆராய்ச்சி முறையாக நடைபெறுகிறதா என்பதை நிறுவனங்கள் கண்காணித்து, ஆய்வாளர்கள் குறைகளுக்குப் பொறுப்பேற்கவும், ஆராய்ச்சி நடைபெறாதபோது உதவித் தொகையை நிறுத்துவதுமான நடைமுறைதான் இன்றைய தேவை.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com