அவசரக்கோல அறிவிப்பு!

இணைய வர்த்தகம் மூலம் பொருள்களைச் சந்தைப்படுத்துகிற நிறுவனங்களில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ள மத்திய அரசு, அதற்கான வழிகாட்டு நெறிமுறையையும் அறிவித்துள்ளது. இனிமேல், தன்னிடம் பதிவு செய்துகொண்ட ஒரு நிறுவனத்தின் பொருளை, இணைய வர்த்தகத்தின் மூலமாக வாங்கும் நுகர்வோருக்கு கொண்டு சேர்க்கும் சேவையை மட்டுமே செய்ய வேண்டும்.
Updated on
2 min read

இணைய வர்த்தகம் மூலம் பொருள்களைச் சந்தைப்படுத்துகிற நிறுவனங்களில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ள மத்திய அரசு, அதற்கான வழிகாட்டு நெறிமுறையையும் அறிவித்துள்ளது. இனிமேல், தன்னிடம் பதிவு செய்துகொண்ட ஒரு நிறுவனத்தின் பொருளை, இணைய வர்த்தகத்தின் மூலமாக வாங்கும் நுகர்வோருக்கு கொண்டு சேர்க்கும் சேவையை மட்டுமே செய்ய வேண்டும்.
 பல்வேறு வணிக இலச்சினைப் பொருள் (மல்டி பிராண்ட்) விற்பனையில் 100% அன்னிய முதலீடு இந்தியாவில் அனுமதிக்கப்படாத நிலையில், மத்திய அரசின் இந்த வழிகாட்டு நெறிமுறை, பல இலச்சினைப் பொருள் விற்பனையைப் புறவாசல் வழியாக அனுமதிப்பதாக அமையுமா என்றால் அதுவும் இல்லை. மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது அப்படித் தோன்றினாலும், புதிய விதிமுறைகள் அன்னிய முதலீட்டாளர்களை யோசிக்க வைக்கும்.
 இப்போது வீட்டில் இருந்தபடியே, செல்லிடப்பேசி அல்லது செயலிகளின் மூலம் அனைத்தையும் வாங்கவும் விற்கவும் முடிகிறது. இந்தியாவில் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.36,850 கோடி) அளவுக்கு இணைய வழியாகப் பொருள்கள் வாங்கப்படுகின்றன. இது இந்தியாவின் மொத்த வர்த்தகத்தில் 1% தான் என்றாலும், இன்னும் இரு ஆண்டுகளில் இதன் அளவு அதிவேகமாக உயரும் என்பது உறுதி. 2020-இல் இணைய வர்த்தகத்தின் அளவு 69 பில்லியன் டாலராக (ரூ.4,62,300 கோடி) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 இந்திய வர்த்தகம் என்பது மிகப் பெரியது. 127 கோடி மக்களைக் கொண்டிருக்கும் தேசத்தில், 50 கோடி பேர் இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள். எல்லாவற்றையும் இணையத்தின் மூலமே வாங்க முற்படுவது நாளுக்கு நாள் அதிகரிக்கப்போகிறது. அவ்வாறு பரந்துபட்ட சந்தை உருவாகும்போது, புதிய புதிய முறைகேடுகள் நடைபெறக்கூடும். இந்த நிறுவனங்கள் பல்வேறு போலி நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் தங்கள் பொருள்களை மக்களிடம் திணிக்க முற்படுவார்கள்.
 இந்தியாவில் ஏற்கெனவே அமேசான், இ-பே, ஃபிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற நிறுவனங்கள் இணைய வர்த்தகத்தில் கோலோச்சுகின்றன. தற்போது இணைய வர்த்தகம் தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கக் காரணம், இந்த நிறுவனங்கள் நேரடி வர்த்தகத்தில் ஈடுபடுவதால் போட்டி போட்டுக்கொண்டு விலைக் குறைப்பு செய்வதைக் கட்டுப்படுத்துவதும், வரி ஏய்ப்புகளைத் தடுப்பதும்தான். 2014-ஆம் ஆண்டில் அமேசான் நிறுவனம் முறைதவறிய வணிக உத்திகளைக் கையாளுவதாக ரிசர்வ் வங்கியே புகார் கூறியது. தங்கள் மூலமாகப் பொருள்களை விற்கப் பதிவு செய்து கொண்டுள்ள நிறுவனங்கள் என்று சிலவற்றை அமேசான் குறிப்பிட்டாலும், அது தனது பொருள்களையே நேரடியாக விற்பனை செய்கிறது என்பதுதான் அந்தப் புகார்.
 கர்நாடகத்தில் இது தொடர்பாக நடத்தப்பட்ட திடீர் ஆய்வுகளில், கிடங்கில் இருந்தவை அனைத்தும் விற்பனையாகி விநியோகத்துக்கு அனுப்பப்படவுள்ள பொருள்கள் (ஆர்டர் ஃபுல்பில்மென்ட்) என்று அமேசான் கூறியது. இது தொடர்பாக பல்வேறு சட்டச் சிக்கல்களும் ஏற்பட்டன. இதேபோன்று, ஃபிளிப்கார்ட் நிறுவனமும் தனக்கான ஒரு துணை நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் பொருள்களை விற்பதாகப் புகார் வந்தது. இத்தகைய வணிகத்தில் ஏதாவது ஓர் இடத்தில் வரி செலுத்தாமல் தப்பிவிடுவதாகப் புகார்கள் எழுந்தன.
 ஆகவேதான், மத்திய அரசு தற்போது இணைய வர்த்தகத்தில் நுகர்வோருக்குச் சந்தைப்படுத்தி விற்பது (பிசினஸ் டு கஸ்டமர்), ஒரு நிறுவனத்துக்கு இன்னொரு நிறுவனம் விற்பனை செய்வது (பிஸினஸ் டு பிஸினஸ்) என தனியாகப் பிரித்துக்காட்டி, வழிகாட்டு நெறிமுறையை வகுத்துள்ளது. இதில் 100% முதலீட்டில் இணைய வர்த்தகம் செய்யும் (பிஸினஸ் டு கஸ்டமர்) நிறுவனம், தனது விற்றுமுதலில் 25%-க்கு மேலாக ஒரு நிறுவனம் அல்லது குழுமத்தின் பொருள்களை விற்பனை செய்திருக்கக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த நிபந்தனை? அவர்கள் யாரிடம் பொருள்கள் வாங்குகிறார்கள், எவ்வளவு வாங்குகிறார்கள் என்பதில் அரசு தலையிடுவானேன்?
 இந்தக் கட்டுப்பாடு 100% அன்னிய நேரடி முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே. இந்திய முதலீட்டாளர்களுக்கு 51% பங்கு அளித்து, பன்னாட்டு நிறுவனங்கள் 49% பங்கு வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு இது பொருந்தாது. அதனால், இதை பயன்படுத்தி இந்தியா போன்ற பல மாநிலங்கள் உள்ள நாட்டில் பல நூறு நிறுவனங்களை உருவாக்கிட முடியும். அதைக் கண்காணித்துத் தடுப்பது அசாத்தியம்.
 இன்னொரு கேள்வி. விலையை அதிரடியாகக் குறைத்து விற்கும் நடவடிக்கைகளில் அரசு ஏன் குறுக்கிட வேண்டும்? நிர்ணயிக்கப்பட்ட விலைக்குக் கூடுதலாகப் பொருள்களை விற்கக்கூடாது என்பதில் மட்டும்தான் அரசு கவனம் செலுத்த வேண்டும். வணிகப் போட்டியில், குறைந்த விலைக்கு விற்பதால் நுகர்வோருக்கு லாபம் கிடைக்கும் என்றால் அதை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்?
 வரி ஏய்ப்பைத் தடுப்பதற்காக மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது சரிதான். ஆனால், அதுவே வேறுபல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
 விதிமுறைகளை எளிமையாக்கி இணைய வர்த்தகத்தை ஊக்குவிப்பதுதான் நோக்கம் என்றால், இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் அதைச் செய்யாது. இணைய வர்த்தகத்திற்கும் புதிய சிக்கல்களை ஏற்படுத்துவதுடன், நுகர்வோருக்கும் சாதகமானதாக இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் இல்லை. அதிகாரிகளின் தலையீட்டை அதிகரித்து, இணைய வணிகர்களை நூதன முறையில் அரசை ஏமாற்றத் தூண்டும் இப்படியொரு வழிகாட்டுதல் நெறிமுறையை அரசு கொண்டுவந்திருக்கவே வேண்டாம்!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com