தொழிலாளர் சேமநல நிதி (இ.பி.எப்.) கணக்கில் இதுநாள் வரை கோரப்படாமல் இருக்கும் தொகையை முதியோர் நல நிதியத்துக்கு அளிக்க மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கைக்கு தொழிலாளர் சங்கங்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சேமநல நிதியில், பல்வேறு தொழிலாளர்கள் பி.எஃப். சந்தாவாக செலுத்தி, 7 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு கோரப்படாமல் இருக்கும் தொகை ரூ.27,000 கோடி! இதைத்தான் முதியோர் நல நிதியத்துக்கு வழங்குவது குறித்து நிதி அமைச்சகம் அறிவிக்கை அளித்துள்ளது. இந்த அறிவிக்கையில், கோரப்படாத சிறுசேமிப்புத் திட்டங்களில் கிடக்கும் நிதியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது வங்கி மற்றும் அஞ்சலகங்களில் உள்ள சேமிப்பு கணக்குகளை குறித்தது. இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் 1.33 கோடி சிறுசேமிப்புக் கணக்குகளில் ரூ.3,652 கோடி ரூபாய் கோரப்படாத தொகையாக உள்ளது.
சேமநல நிதியை வேறு பயன்பாட்டுக்குத் திருப்பிவிடுதல், சட்டத்துக்கு எதிரானது என்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர். தொழிலாளர் சேமநல நிதிச் சட்டத்தின் படி, சேமிப்பு நிதியை ஒரு திட்டத்துக்காக திருப்பிவிடுவதற்கு இந்நிறுவன மத்திய அறநிலைக் குழுவின் (சென்ட்ரல் போர்டு ஆஃப் டிரஸ்டி) அனுமதி வேண்டும், அவ்வளவே. இந்தக் குழு, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர், சேமநல நிதி அலுவலக உயர் அதிகாரிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் ஆகியோரைக் கொண்டது. மத்திய நிதித் துறையின் அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்போர் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் மட்டுமே. அதனால், இது நடைமுறைக்கு வரும் என்றே தோன்றுகிறது.
இதுபோன்ற கணிசமான அளவுக்கு கோரப்படாத நிதி, தனியார் வங்கிக் கணக்குகளிலும் உள்ளது. தனியாரின் ஓய்வூதியத் திட்டத்திலும் உள்ளது. இவ்வாறு கோரப்படாத நிதியை வேறு திட்டத்துக்கு திருப்புதல் தவறுதான் என்று முடிவு செய்தால், தனியார் வங்கிகளும், தனியார் ஓய்வூதியத் திட்ட நிறுவனங்களும் அதைத் தங்கள் பயன்பாட்டுக்கே வைத்துக்கொள்வர். அதைவிட, அரசின் நலத்திட்டங்களுக்காக இந்த நிதியைத் திருப்பிவிடுவதுதான் சரியாக இருக்கும்.
குறிப்பாக, முதியோர் நல நிதியம் போன்றவற்றுக்கு அளிக்கப்படுவது சமூகப் பாதுகாப்புக் கடமைகளில் ஒன்று என்பதால், அதில் தவறு காண முடியாது. மேலும், முதியோர் நலத்தைப் பேணுவதும், கூடுதலாக முதியோர் காப்பகங்கள் அமைத்து, முறையாக நடத்துவதும் காலத்தின் கட்டாயம்.
எல்லா வங்கிகளிலும் சேமிப்புக்கு 8%-க்கும் குறைவாக வட்டி வழங்கிய காலத்திலும்கூட, சேமநல நிதிக்கு மட்டும் அரசு 9% வட்டி வழங்கியது. இந்தக் கூடுதல் தொகை மக்கள் பணம்தானே! அப்படியிருக்க, கோரப்படாமல் இருக்கும் தொகையை அரசு மக்கள் நலனுக்காக திருப்புவதில் குற்றம் காண வேண்டியதில்லை. தொழிற்சங்கங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், இதையே சிறப்பான செயல்திட்டமாக மாற்றுவதற்கு யோசனைகளைக் கூற முயற்சிக்கலாம்.
முதியோர் நலத் திட்டத்துக்கு திருப்பப்படவுள்ள ரூ.27,000 கோடி எவ்வாறு செலவிடப்படுகின்றது என்பதை சேமநல நிதி மத்திய அறநிலைக் குழுவின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் கண்காணிப்பின் கீழும், அதேபோன்று வங்கிகளில் கிடக்கும் கோரப்படாத தொகை எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை ரிசர்வ் வங்கி நியமிக்கும் வங்கி அதிகாரிகள் குழுவின் கண்காணிப்பின் கீழும் நடைபெறச் செய்யலாம். இதனால், அவர்கள் துறை சார்ந்த பணம் முறையாக செலவிடப்படுகிறது என்பதைக் காணவும், தவறுகள் தெரிய வந்தால் அதைக் கண்டிக்கவும் தடுக்கவும் முடியும். இதைவிடுத்து, கோரப்படாமல் கிடக்கும் பெருந்தொகையை வெறுமனே கணக்கில் வைத்துக்கொண்டு இருப்பதால் யாருக்கும் லாபமில்லை.
வங்கிகள் சேமிப்புக் கணக்கு அல்லது வைப்புநிதிக் கணக்கு தொடங்கும்போது, "நாமினி' நியமிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. ஒருவருடைய மறைவுக்குப் பிறகு அல்லது 12 ஆண்டுகள் காணாமல் போய்விட்டாரெனில், அந்தத் தொகையை யாருக்கு வழங்குவது என்பதை இந்த "நாமினி' படிவம் தீர்மானிக்கிறது.
"நாமினி' குறிக்கப்பட்டிருந்தாலும், இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கான அலைச்சல் ஒருபுறம் இருக்க, அதற்காக கொடுக்க வேண்டிய லஞ்சத் தொகையைவிட கணக்கில் இருக்கும் தொகை குறைவாக இருக்கும் என்றால், இதைப் பெறுவதில் யாரும் அக்கறை காட்டுவதில்லை. இதனால்தான், பி.எஃப். மற்றும் வங்கிக் கணக்குகளில் கோரப்படாத தொகைகள் பெருகுகின்றன.
"நாமினி' படிவத்தைப் பூர்த்தி செய்வது எந்த அளவுக்கு முக்கியமாக கருதப்படுகிறதோ, அதேபோன்று, தனது தொகை கோரப்படாமல் 7 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தால், அதனை முதியோர் நலத் திட்டம் அல்லது அரசின் வேறு ஏதேனும் ஒரு திட்டத்துக்கு எடுத்துக்கொள்ளலாம், அல்லது தனது "நாமினி'யின் வங்கிச் சேமிப்புக் கணக்குக்கு நேரடியாக மாற்றிவிடலாம் என்று விருப்பம் தெரிவிக்கும் நடைமுறை வருமேயானால், இவ்வாறாக கோரப்படாமல் இருக்கும் கணக்கில் தொகை என்பது மிகச் சில ஆயிரங்களாக மட்டுமே இருக்கும்.
இதுபோல கோரப்படாத தொகையை தொழிலாளர் சேமநல நிதி, அஞ்சலகங்கள், வங்கிகள் போன்றவற்றில் போலி ஆதாரங்களின் அடிப்படையில் ஊழியர்கள் முறைகேடு செய்திருப்பது பலமுறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அவர்களில் சிலரைத் தொழிற்சங்கங்கள் காப்பாற்றவும் செய்திருக்கின்றன. இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதுபோன்ற முறைகேடுகள் தடுக்கப்படும். அதனால் இது குறைகாண முடியாத நல்ல முடிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.