பாகிஸ்தான் - இந்தியா இடையிலான அமைதிப் பேச்சு வார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. ரத்து என்பதை சொல்வதற்குப் பதிலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார்கள். இந்தியாவுக்கு இது புதிது அல்ல. ஆனாலும், இந்தியா தனது முயற்சியை விட்டுவிடவும் முடியாது.
பாகிஸ்தானில் நிலைமை ஒன்றும் மெச்சும்படியாக இல்லை. கடந்த குருத்தோலை ஞாயிறன்று கிறிஸ்தவர்கள் மீது குறிவைத்து நடத்தப்பட்டத் தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆப்கானிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை தனது மண்ணில் வளர விட்டதற்கு பாகிஸ்தானுக்குக் கிடைத்திருக்கும் எதிர்வினை இது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தனது பலவீனத்தை மறைப்பதற்குத்தான் பாகிஸ்தான் இந்தியா மீது பழி சுமத்தியிருக்கிறது.
காஷ்மீர் மாநிலத்துக்குள்ளும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற, பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது நடத்தும் தாக்குதலை இந்திய அரசு அம்பலப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் அதற்கான சான்றுகளை ஆவணங்களைக் கேட்கும். அவற்றைக் கொடுத்தால் அது சரியான ஆவணங்கள் அல்ல என்று மறுக்கும்.
இந்த முறை சற்று வித்தியாசமாக நடந்துகொண்டது பாகிஸ்தான். விசாரணை நடத்துவதற்காக ஒரு குழுவை (ஜே.ஐ.டி.) அனுப்பியது. அவர்களை வைத்தே இந்தியாவைக் குறை சொல்ல வைத்தது; இந்தத் தாக்குதல் குறித்து இந்தியாவுக்கு முன்னதாகவே தெரியும். இருந்தும் இந்தத் தாக்குதலை நடத்தவிட்டு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது என்றார்கள். இந்திய பாதுகாப்புப் படையினர் யாரும் சாட்சியம் அளிக்கவில்லை என்றார்கள்.
பதான்கோட் விமானதளத்தில் எங்களைப் புறவாசல் வழியாக உள்ளே அழைத்துச் சென்றார்கள், அங்கே 55 நிமிடம் மட்டுமே இருக்கச் செய்தார்கள் என்று ஒன்றின் மேல் ஒன்றாகக் குறை சொல்லிக்கொண்டே இருந்தது இந்த விசாரணைக் குழு. கடைசியாக, இந்திய விசாரணைக் குழுவுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று பாகிஸ்தான் முடிவு எடுத்துள்ளது.
பதான்கோட் விமானப்படை தளத்தின் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் எல்லை கடந்துவந்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த அனைத்து ஆவணங்களும் முறைப்படி பாகிஸ்தான் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த மசூத் அஸாருக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பு இருப்பது பற்றிய ஆவணங்களையும் அளித்துள்ளார்கள். விசாரணைக் குழு வந்து செல்லவும் அனுமதித்தாகிவிட்டது. இப்போது, இந்திய விசாரணைக் குழுவை அனுமதிக்க மாட்டோம் என்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம், சமாதானப் பேச்சு வார்த்தை நடப்பதைப் பாகிஸ்தான் விரும்பவில்லை என்பதுதான்.
இரு நாடுகளும் பரஸ்பரம் தங்கள் விசாரணைக் குழுக்களை அனுப்பி, தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வது என்கின்ற இருதரப்பு நிபந்தனைகளின் அடிப்படையில்தான் பாகிஸ்தான் விசாரணைக் குழு இந்தியாவுக்குள் அனுமதிக்கப்பட்டது. அவர்கள் வந்து திரும்பிய பிறகு, இந்தியாவை அனுமதிக்க மாட்டோம் என்பது, பாகிஸ்தானின் கபட நாடகத்தைத்தான் அம்பலப்படுத்துகிறது.
வேடிக்கை என்னவென்றால், உலக நாடுகள் பாகிஸ்தானை எந்தக் கேள்வியும் கேட்பதில்லை. ஆனால், இந்தியாவுக்குப் போதனை செய்கின்றன. அண்மையில், அமெரிக்காவில் அதிபர் ஒபாமா தலைமையில் நடைபெற்ற அணு ஆயுத பாதுகாப்பு மாநாட்டில், அணு ஆயுதங்கள் பயங்கரவாத அமைப்புகளிடம், குறிப்பாக தற்போது மும்முரத் தாக்குதலை நடத்தி வரும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) அமைப்பிடம் கிடைத்துவிடக் கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டது. இதே மாநாட்டில், இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுடைய அணு ஆயுதங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒபாமா கூறுகிறார்.
இதற்கு இந்தியா பதிலடியாக, தாக்கப்படாத நிலையில் அணு ஆயுதம் பயன்படுத்தக் கூடாது என்பதே இந்தியாவின் கொள்கை என்பதை சொல்ல வேண்டியதாயிற்று. ஆனாலும், இந்த மாநாட்டில் இந்தியாவைத்தான் அமெரிக்கர்கள் குறை கூறினார்கள். ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வில், அணு ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் இந்தியாவிடம் குறைகள் உள்ளன. பாகிஸ்தான், ரஷியாவைவிட பலவீனமான பாதுகாப்பை இந்தியா கொண்டுள்ளது என்று சொல்கிறார்கள். அதாவது, அணு ஆயுதம் திருடுபோனால், பயங்கரவாதிகளிடம் சிக்கினால், அது இந்தியாவிலிருந்து மட்டுமே திருடுபோயிருக்க முடியும் என்று கூறுவதற்கு அடித்தளம் போடுகிறார்கள்.
இவர்கள் பாகிஸ்தான் சென்று ஆய்வு நடத்தியிருந்தால், அங்கே அணு ஆயுதங்களை எந்த அளவுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். இந்தியா எத்தனை அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்று சர்வதேச அணு ஆயுதக் கண்காணிப்பு அமைப்பிடம் சொல்லிவிட முடியும். பாகிஸ்தானில் உண்மையாகவே எத்தனை அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்பதைச் சொல்ல முடியாது. ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள் சிக்குமானால் அது பாகிஸ்தானின் கொடையாக மட்டும்தான் இருக்க முடியும். இது தெரிந்தும் உலக நாடுகள் பாகிஸ்தானைக் குறை சொல்வதில்லையே, ஏன் என்று தெரியவில்லை?
மற்றவரை நாம் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? இந்தியக் கிரிக்கெட் அணி தோற்றால் காஷ்மீர் என்.ஐ.டி. வளாகத்தில் கொண்டாடுவார்கள் என்கின்றபோது, அஃப்சல் குரு போராட்டம் நியாயமானதே என்கின்றபோது, இந்திய அரசியல்வாதிகளே இந்தியாவுக்கு எதிராகத் தோள்தட்டி நிற்கும்போது, மற்ற உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இல்லாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.