இன்னொரு உலகப்போர் மூளுமேயானால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். உலகளாவிய அளவில் மட்டுமல்ல, இந்தியாவின் ஒற்றுமையைச் சிதைக்கவும், உள்நாட்டுப் போரை ஏற்படுத்தவும் தண்ணீருக்கான தேவை ஏற்படுத்தக்கூடும்.
காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் தமிழகம் தனது உரிமைக்காகக் குரலெழுப்பியபோதெல்லாம், அதுபற்றிக் கவலைப்படாத தேசிய ஊடகங்கள் இப்போது பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களுக்கு இடையே சட்லஜ் - யமுனை இணைப்புக் கால்வாய் தொடர்பான சர்ச்சை எழுந்திருப்பதை அக்கறையுடனும், பரிதவிப்புடனும் விவாதிக்க முற்பட்டிருக்கின்றன. இப்போதாவது மாநிலங்களுக்கு இடையேயான உறவைச் சிதைத்து தேச ஒற்றுமையைத் தங்களுக்கான போராட்டம் சிதைக்கக்கூடும் என்கிற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறதே, அது வரைக்கும் மகிழ்ச்சி.
மார்ச் 22-ஆம் தேதி உலகத் தண்ணீர் தினம். அதற்கு முந்தைய நாள் மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில், தண்ணீருக்கான போராட்டத்தைத் தடுப்பதற்கு அரசு 144 உத்தரவைப் பிறப்பித்தது என்பது பலருக்கும் தெரியாது. மகாராஷ்டிரத்தின் லத்தூர் மாவட்டம் கடுமையான வறட்சியை எதிர்கொள்கிறது. குடிக்கத் தண்ணீர் கிடையாது. ஏறத்தாழ ஒன்றரை லட்சம் பேர் அந்த மாவட்டத்தை விட்டு வெளியூர்களுக்குக் குடிபெயர்ந்து விட்டிருக்கிறார்கள். எங்கேயாவது சொட்டுத் தண்ணீர் இருந்தாலும் தாகத்தில் தவிக்கும் மக்கள் அதற்காக அடித்துக் கொள்கிறார்கள்.
இது ஏதோ மகாராஷ்டிரத்தின் நிலைமை என்று ஒதுக்கிவிட முடியாது. அடுத்த சில ஆண்டுகளில் இந்த நிலைமை இந்தியா முழுமைக்கும் பரவக்கூடும். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. போதாக்குறைக்கு இமயமலையில் பனிச்சிகரங்கள் அதிவேகமாக உருகத் தொடங்கி இருக்கின்றன. இது குறித்தெல்லாம் எந்தவித சிந்தனையோ, கவலையோ இல்லாமல் நாம் இருந்து வருகிறோம் என்பதுதான் மிகப்பெரிய சோகம். ஜாட் இனத்தவரின் போராட்டத்தின்போது அவர்கள் கையாண்ட, மனிதாபிமானமே இல்லாத முதல் உத்தி, இந்தியத் தலைநகருக்கு வரும் தண்ணீர்த் தடங்களையும் குழாய்களையும் அடைத்தது. தலைநகர் தவியாய்த் தவித்துவிட்டது. குடியரசுத் தலைவர் மாளிகைவரை, தண்ணீருக்காகத் தவித்த அவலத்தை தேசம் எதிர்கொண்டது.
இப்போது ஹரியாணாவை வறட்சியால் தாக்கும் அபாயகரமான முடிவை பஞ்சாப் மாநிலம் மேற்கொண்டுள்ளது. 1966-இல் பஞ்சாப் மாநிலம் பிரிக்கப்பட்டு ஹரியாணா உருவானபோது சட்லஜ் நதியின் தண்ணீரைப் பங்கிடுவது தொடர்பாகப் பிரச்னை எழுந்தது. 1976-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் தலையீட்டிற்குப் பிறகு, பஞ்சாபும் ஹரியாணாவும் சட்லஜ் நதி நீரை சமமாகப் பிரித்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. பாக்ரா நங்கள் அணைப் பகுதியிலிருந்து 214 கி.மீ. நீளமுள்ள சட்லஜ் - யமுனை இணைப்புக் கால்வாய் வெட்டுவது என்றும் அதன் மூலம் தண்ணீரைப் பகிர்ந்து கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
ஹரியாணா தனது பகுதியிலான 92 கி.மீ. கால்வாயை வெட்டித் தயாராக இருக்கிறது. ஆனால், பஞ்சாப் இன்னும் கால்வாய்க்கான நிலத்தைக்கூடக் கையகப்படுத்தவில்லை. அது போதாதென்று, சட்டப் பேரவையில் முன்பு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தையே ரத்து செய்வதாகத் தீர்மானம் இயற்றி இருக்கிறது. தமிழகத்திற்குக் கேரளம் செய்த அதே வஞ்சனையை இப்போது பஞ்சாப், ஹரியாணாவிற்கு செய்ய முற்பட்டிருக்கிறது. ÷கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா பாயும் இந்தியாவில் நமது தேவைக்கு அதிகமான தண்ணீர் இருக்கிறது. ஆனால், இந்தியா முழுமைக்குமான அறிவியல்பூர்வமான விநியோகம் இல்லாத நிலை ஒருபுறம், இன்னொருபுறம் வறட்சியும், வெள்ளப் பெருக்கும் பேரழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன. சட்லெஜையும் யமுனையையும் இணைப்பதற்கே படாதபாடு படும்போது, கங்கை - காவேரி இணைப்பு என்பதெல்லாம் எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.
கடந்த ஆண்டு நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கு விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம், எப்படி நிலத்தடி நீரின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, கட்டணம் வசூலிப்பது போன்றவற்றை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என்று கூறிவிட்டது.
அதிகரித்துவிட்ட நகர்ப்புற வாழ்க்கை தண்ணீருக்கான தேவைகளை அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான் என்றாலும், அதைவிட உண்மை நகர்ப்புறங்களில் வசிக்கும் வசதி படைத்தவர்களால் தண்ணீர் வீணாக்கப்படுவது. தண்ணீர் பயன்பாட்டுக்குக் கட்டணம் வசூலித்துக் கட்டுப்படுத்த உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளால் முடியவில்லை. கடுமையாக நடந்து கொண்டால் அதுவே அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்துமோ என்கிற அச்சம் அவர்களுக்கு.
மொத்தத் தண்ணீர் பயன்பாட்டில் 85% விவசாயத்திற்குத்தான் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதிகமாகத் தண்ணீர் தேவைப்படாத பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்க நாம் எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இருக்கும் ஏரிகளையும், குளங்களையும் குடியிருப்புகளாக மாற்றிவருவது போதாது என்று வரைமுறையே இல்லாமல் ஆழ்துளைக் கிணறுகளையும் அனுமதிக்கிறோம்.
தமிழகம் தவிர ஏனைய மாநிலங்களில் குறைந்தபட்சம் மழைநீர் சேகரிப்பு குறித்தாவது விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதா என்றால் இல்லை. உபயோகப்படுத்துவதைவிட அதிகமான தண்ணீர் வீணாக்கப்படுகிறது. இப்படியே நிலைமை தொடர்ந்தால், அது விபரீதங்களுக்கு வழிகோலக்கூடும். தண்ணீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை நாடு தழுவிய அளவில் ஏற்படுத்தியாக வேண்டியது காலத்தின் கட்டாயம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.