முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு இந்தியா முழுவதும் அனல் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. கோடையின் வெம்மை தாளாமல் மடிவோர் எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டிருக்கிறது. தமிழகத்தின் பல ஊர்களில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. இத்தகைய சூழலில், தேர்தல் ஆணையம் அனல் காற்றை மனதில் கொண்டு, பிரசார நேரத்தை இரவு 1 மணி வரை நீட்டிப்பதுதான் சரியாக இருக்கும்.
இரவு 10 மணி வரை மட்டுமே பிரசாரம் என்ற விதிமுறை ஏற்படுவதற்கான காரணம் மக்கள் - அதாவது வாக்காளர்கள் - நலன்தான். அந்த மக்கள் நலன் அனல் காற்றால் பாதிக்கப்படும்போது, விதிமுறைகளைத் தளர்த்துவதிலும், மாற்றி அமைப்பதிலும் தவறே கிடையாது.
வாக்குப் பதிவுக்கு இன்னும் 27 நாள்கள் உள்ளன. முதன்மைக் கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. தாங்கள் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்களை அறிவித்தபோதிலும், மற்ற கட்சிகள் இன்னும் முழுமையாகத் தொகுதிகளையும் வேட்பாளர்களையும் முடிவு செய்யவில்லை. இன்னும் இரு நாள்களில் அனைத்து வேட்பாளர்
களும் அறிவிக்கப்பட்ட பிறகு, அனல் காற்றுடன் தேர்தலும் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும். அப்போது அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் தங்கள் பிரசாரத்தை படுமும்முரமாக நடத்துவார்கள்.
தற்போது இரவு 10 மணியுடன் தேர்தல் பிரசாரத்தை முடிக்க வேண்டியது கட்டாயம் என்பதால், ஒரு கூட்டத்தை மட்டுமே மாலையில் நடத்த முடியும். மற்ற கூட்டங்களை முற்பகல், பிற்பகல் என்று பிரித்துக்கொள்ள நேரிடும். ஆனால், தமிழ்நாட்டில் முற்பகல், பிற்பகல் என்று பிரித்தறிய முடியாதபடி வெயில் கொளுத்துகிறது. இந்தக் கூட்டங்களுக்குத் தொண்டர்கள் தாமாக வந்தாலும், அழைத்து வரப்பட்டாலும், அவர்கள் இந்த வெயிலில் படும் அவதி சொல்லி மாளாது.
முதல்வர் ஜெயலலிதா பேசிய விழுப்புரம் பொதுக்கூட்டத்தில், 2 பேர் அனல் காற்றால் இறந்ததை தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட சில தலைவர்கள் அரசியலாக்க முற்பட்டனர். மக்களை வெயிலில் உட்கார வைத்ததும், மயங்கி விழுந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முடியாததும்தான் மரணத்துக்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார்கள். ஜெயலலிதா பிரசாரத்தை முதலிலேயே தொடங்கிவிட்டிருக்கிறார். இனிதான் மற்றவர்கள் பிரசாரத்தைத் தொடங்க இருக்கின்றனர். அவர்கள் நடத்தப்போகும் பிரசாரக் கூட்டத்திலும் அனல்காற்று வீசும், அங்கும் சிலர் சுருண்டு விழுவார்கள். அது குறித்து அவர்கள் சிந்திக்கத் தவறிவிட்டனர்.
இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யும்போது, பொது இடங்களில் ஒலிமாசு ஏற்படுவதால், மக்கள் உறக்கம் பாதிக்கப்படும். மாணவர்களின் படிப்புக்கு ஊறுசெய்வதாக இந்த பிரசாரங்கள் அமையும். ஆகவேதான் பிரசாரத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என்று தேர்தல் பிரசார நேரத்தை தேர்தல் ஆணையம் நிர்ணயித்தது.
ஆனால், இன்று தமிழகத்தின் சூழல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. தேர்தல் பிரசார அலுவலகங்களை பல கட்சிகள் இன்னும் திறக்கவே இல்லை. அப்படியே திறந்தாலும் அங்கு ஒலி
பெருக்கிகள் வைக்கப்படவில்லை. பள்ளித் தேர்வுகள் அனைத்தும் முடிந்துவிட்டன. பகல் முழுவதும் அனல் காற்றின் காரணமாகப் புழுங்கித் தவிக்கும் மக்கள், இரவு 10 மணிக்குப் பிறகும் தூக்கமில்லாமல், மின்விசிறி கீழிறக்கிவிடும் வெப்பஅலையைச் சகிக்க முடியாமல் ஏற்றுக்கொண்டு, தூங்க முயன்றும் தூக்கம் வராமல் தவிப்
பவர்களாகவே இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் குறைந்தபட்சம் பொதுக் கூட்டங்களை இரவு 1 மணி வரை நடத்திக் கொள்ள அனுமதித்தால், மக்களுக்கு- அதாவது 100% வாக்களிக்கப் போகிற வாக்காளர்களுக்கு- தேர்தல் ஆணையம் நன்மை செய்ததாக ஆகும்.
மதுபானக் கடைகளை தேர்தல் ஆணையம் கண்காணிப்போம் என்கிறது; மது உற்பத்தி ஆலைகளைக் கண்காணிப்போம் என்
கிறது; அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டு பண நடமாட்டத்தைக் கண்காணிக்கிறது; தண்ணீர் பந்தல், நீர்-மோர் பந்தல் அமைக்கவும், முன்அனுமதி பெற வேண்டும் என்று கறாரான உத்தரவு போடுகிறது. வழக்கத்துக்கு மாறாக ரீ-சார்ஜ் செய்கிறார்களா? வங்கியில் வழக்கத்துக்கு மாறாக அதிகப் பணம் எடுப்பவர் யார் என்றெல்லாமும் கண்காணிக்கிறது.
ஆனால், அனல் காற்றை தேர்தல் ஆணையம் ஏன் கருத்தில் கொள்வதில்லை என்று வியப்பாக இருக்கிறது. பல மாவட்ட ஆட்சியர்கள் வெயில் நேரத்தில் வெளியே வராதீர்கள், ஓய்வெடுங்கள் என்று அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்கும் வேளையில், அரசியல் காரணத்துக்காக மக்கள் அனல் காற்றில் அலையத்தான் வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இன்னும் 27 நாள்களில் தேர்தல்! பிரசாரம் இல்லா நாள் எல்லாம் பின்தங்கிய நாளே!
நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் பிரசாரத்துக்குத் தடை விதித்து, அந்த மூன்று மணி நேரத்தை, இரவு 10 மணியிலிருந்து நள்ளிரவு 1 மணிவரை நீட்டிக்க முடியுமேயானால், தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் தொண்டர்கள் படும் துயரம் குறையும். தலைவர்களும்கூடத் தங்கள் பொதுக் கூட்டத்தை மாலையில் இரண்டு, மூன்று இடங்களில் நடத்திக்கொள்வார்கள்.
அரசியல் கட்சிகளும், பிரசாரமும் இல்லாமல் அமைவது தேர்தலாக இருக்காது. தங்களது கொள்கைகளையும், செயல் திட்டங்களையும் வாக்காளர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை வேட்பாளர்களுக்கு உண்டு. அதற்கு வழிவகை செய்து கொடுப்பதும்கூடத் தேர்தல் ஆணையத்தின் கடமைதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.