கடலாண்மைக் கட்டமைப்பு!

இந்தியாவுக்கு இருக்கும் தனிச் சிறப்பு அது ஒரு மூன்று புறமும் கடல் சூழ்ந்த தீபகற்பமாக இருப்பதுதான். ஏறத்தாழ 7,500 கி.மீ. நீளமுள்ள கடற்கரையைக் கொண்ட இந்தியா, இத்தகைய இயற்கையான அமைப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய பலவீனம். மேற்கத்திய நாடுகள் கடல் வாணிபம் குறித்து சிந்திப்பதற்கு முன்பே நமது சிந்து சமவெளி நாகரிகம் அதில் தேர்ச்சி பெற்றிருந்தது.
Updated on
2 min read

இந்தியாவுக்கு இருக்கும் தனிச் சிறப்பு அது ஒரு மூன்று புறமும் கடல் சூழ்ந்த தீபகற்பமாக இருப்பதுதான். ஏறத்தாழ 7,500 கி.மீ. நீளமுள்ள கடற்கரையைக் கொண்ட இந்தியா, இத்தகைய இயற்கையான அமைப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய பலவீனம்.
 மேற்கத்திய நாடுகள் கடல் வாணிபம் குறித்து சிந்திப்பதற்கு முன்பே நமது சிந்து சமவெளி நாகரிகம் அதில் தேர்ச்சி பெற்றிருந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோமாபுரி, கிரேக்கம், கிழக்காசிய நாடுகள் போன்றவற்றுடன் நமது இந்திய அரசர்கள், அதிலும் குறிப்பாக தமிழக மன்னர்கள், வணிகத் தொடர்பை வைத்துக்கொண்டிருந்தனர். கிழக்காசிய நாடுகளில் நமது கலாசாரமும் மதமும் பரவியிருந்தன என்றால் நிச்சயமாக கடல் மார்க்கம் நமக்கு பரிச்சயமானதாக இருந்ததுதான் காரணம்.
 சமீபத்தில் மும்பையில் நடந்த இந்திய கடலாண்மை மாநாட்டில் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி இது குறித்த தனது கருத்துகளை வெளிப்படுத்தினார். நமது உள்நாட்டுக் கட்டமைப்புத் திட்டத்திற்கு கடலாண்மை குறித்த சிந்தனை வலுசேர்க்கும் என்றும் அதை நாம் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றும் அவர் கூறியிருப்பது உண்மையிலும் உண்மை.
 இந்தியாவுக்கு அதன் கடற்கரையும் துறைமுகங்களும் ஏற்படுத்தித் தந்திருக்கும் இயற்கையான வலிமை முறையாக பயன்படுத்தப்படாமலே இருக்கிறது. கடற்கரையின் நீளம் மட்டுமல்லாமல், இந்தியா அனைத்து கடல் வழிப் போக்குவரத்து பாதைகளாலும் இணைக்கப்பட்டிருக்கும் முக்கியமான இடத்தில் இருக்கிறது. கீழை நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையேயுள்ள எந்தக் கடல் வழிப் போக்குவரத்தும் இந்து மகாசமுத்திரத்தின் வழியாகத்தான் நடந்தாக வேண்டும் எனும்போது இந்தியாவின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ளலாம்.
 கடந்த சில வருடங்களாக பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தங்களது துறைமுகங்களை பலப்படுத்தி, பெரிய அளவில் சரக்குப் பெட்டக முனையங்களை (கன்டெய்னர் டெர்மினல்ஸ்) ஏற்படுத்தியபோதுதான் இந்தியா விழித்துகொண்டது. ஏறத்தாழ 50 ஆண்டுகளாகக் கடலாண்மை சிந்தனையோ, துறைமுகங்களின் கட்டமைப்பு வசதிகளை அதிநவீனப்படுத்தும் முயற்சியோ இல்லாமல் இருந்துவிட்டதால் இயற்கை நமக்கு அளித்த கடற்கரை வளத்தைப் பொருளாதார மேம்பாட்டுக்கு நாம் பயன்படுத்தத் தவறிவிட்டோம்.
 இந்தியா தனது கடலாண்மை சூழ்ச்சி முறையை வலுப்படுத்தியாக வேண்டும் என்கிற கருத்தை கடந்த பிப்ரவரி மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்த சர்வதேச கப்பல் மறுஆய்வு கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். கடலாண்மை குறித்த சவால்களை இந்தியா எப்படி எதிர்கொள்கிறது என்பதன் மூலம்தான் கடலைப் பயன்படுத்தி பொருளாதார வெற்றியடைவது சாத்தியம். இதற்காக "சாகர்மாலா' என்கிற திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழில் சொல்வதாக இருந்தால் "கடல்மாலை' என்று பொருள். அதாவது, இந்தியாவின் எல்லாத் துறைமுகங்களையும் இணைப்பது.
 துறைமுகம் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிப்பது; கடல்சார்ந்த பொருளாதாரத்தை வலுப்படுத்துவது; துறைமுகங்களை நவீனப்படுத்துவது; அவற்றை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுடன் இணைப்பது; துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்டு நகரங்களையும், தொழிற்பூங்காக்களையும், சேமிப்புக் கிடங்குகளையும், சரக்குப் பெட்டக முனையங்களையும் ஏற்படுத்துவது ஆகியவைதான் சாகர்மாலா திட்டத்தின் குறிக்கோள். இது எந்த அளவுக்கு முனைப்புடன் செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் உள்நாட்டுப் பொருளாதாரம் வலுவடையும் என்கிற கருத்தை பிரதமரே கூறியிருப்பதால் புதிய வேகம் பிறந்திருக்கிறது.
 மும்பை மாநாட்டில் பேசும்போது, கடலாண்மை சார்ந்த வளர்ச்சிக்காக ரூபாய் ஒரு லட்சம் கோடி ஒதுக்கி இந்தியாவின் துறைமுகங்களின் கொள்திறனை 2025-க்குள் இரட்டிப்பாக்குவது என்று அரசு முடிவெடுத்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடலாண்மைக் கட்டமைப்பை மேன்மைப்படுத்துவதற்காகப் போர்க்கால நடவடிக்கையில் முனைப்புக் காட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
 மத்திய கப்பல் துறைமுக அமைச்சகம், புதிதாக எட்டு துறைமுகங்களை ஏற்படுத்தவும், இப்போதிருக்கும் 12 துறைமுகங்களுக்கு ரயில் வசதியை மேன்மைப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது. இதற்கு முன்னால் பணம் செலவிடப்பட்டிருக்கிறதே தவிர, துறைமுகங்களை நவீனப்படுத்துவது முறையாக செய்யப்படவேயில்லை. கடற்கரையோரமாக பல சிறிய துறைமுகங்களை உருவாக்குவதும், சிங்கப்பூர், மலேசியா போல சர்வதேச அளவிலான சரக்குப் பெட்டக முனையங்களை ஏற்படுத்துவதும் பேச்சுடன் நின்றுவிடாமல் செயல்பட்டால் மட்டுமே கடலாண்மைக் கட்டமைப்பை உறுதி செய்ய முடியும்.
 அதேபோல, அண்டை நாடுகளான வங்க தேசம், மியான்மர் போன்ற நாடுகளுடன் இணைந்து நீர்வழிப் போக்குவரத்துக்கான செயல்பாடுகளை இந்தியா முன்னெடுத்துச் செல்லுதல் அவசியம். துறைமுகங்களிலிருந்து எந்த அளவுக்கு நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க முடியுமோ அந்தளவுக்கு அதிகரிப்பதன் மூலம் சரக்கு இடப்பெயர்வுக்கான கட்டணத்தில் மிகப்பெரிய சேமிப்பை ஏற்படுத்த முடியும்.
 கடலாண்மைக் கட்டமைப்பை உருவாக்குவதால் இன்னொரு மிக முக்கியமான பயனும் உண்டு. இந்து மகாசமுத்திரத்தில் ஏனைய நாடுகளின் ராணுவ நடமாட்டத்தை நாம் கண்காணிக்க முடியும். இந்தியாவின் பொருளாதார வலிமை நமது கடலாண்மை செயல்பாட்டிலும் கட்டமைப்பிலும்தான் இருக்கிறது. இதை உணர்ந்து முனைப்புடன் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com