இறைவனிடம் கையேந்துவோம்!

பனிச்சரிவின் இடையே பனிப்பாறைகள் மூடிவிடாத காற்றுஇடைவெளி இருந்த காரணத்தால்தான் ஹனுமந்தப்பா ஆறு நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சாதாரண நிலப்பகுதியில் ஒரு மண்சரிவுக்கு இடையே அல்லது சுரங்கங்களில் ஏற்படும் மண்சரிவுகளுக்கு இடையே சிக்கியவர்கள் பல நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவங்கள் உண்டு என்றாலும், சியாச்சின் போன்ற இடத்தில் இது நடந்திருப்பது தெய்வச் செயல் என்றுதான் கூறவேண்டும்.
Updated on
2 min read

சியாச்சின் மலையில் நேரிட்ட பனிச்சரிவில் சிக்கி, ஆறு நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ள லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா நலமாக வேண்டும் என்று இந்தியா முழுவதும் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறது. அவருக்காக உடல் உறுப்புகள் தேவைப்பட்டால் தரவும் பலர் தயாராக இருக்கின்றனர்.
 பனிச்சரிவின் இடையே பனிப்பாறைகள் மூடிவிடாத காற்றுஇடைவெளி இருந்த காரணத்தால்தான் ஹனுமந்தப்பா ஆறு நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சாதாரண நிலப்பகுதியில் ஒரு மண்சரிவுக்கு இடையே அல்லது சுரங்கங்களில் ஏற்படும் மண்சரிவுகளுக்கு இடையே சிக்கியவர்கள் பல நாள்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவங்கள் உண்டு என்றாலும், சியாச்சின் போன்ற இடத்தில் இது நடந்திருப்பது தெய்வச் செயல் என்றுதான் கூறவேண்டும்.
 சியாச்சினில் முறையான ஆடைகள், உரிய பூட்ஸுகள் அணியாதிருந்தால் விரல்கள் செயலிழந்து (காங்கரின்) வெட்டப்பட நேரிடும். சியாச்சினில் எப்போதும் மலையேற்றச் சூழல் இருக்காது. பல மாதங்களுக்கு உறைபனியும், மைனஸ் 60 டிகிரி வரை கடுங்குளிரும், மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் வீசும் பனிக்காற்றும் காணப்படும். உலகிலேயே மிக உயர்ந்த இடத்தில் இருக்கும் ராணுவ தளம் இதுதான். சுமார் இருபதாயிரம் அடி உயரத்தில் இங்கே நமது வீரர்கள் எல்லைக் காவலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
 கடந்த 30 ஆண்டுகளில் 869 பேர் சியாச்சினில் இறந்துள்ளனர் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இன்னும் பல நூறுபேர்களின் விரல்கள் அல்லது கால்கள் பனியில் மரத்துப் போனதால் வெட்டப்பட்டுள்ளன. சியாச்சின் பனிச்சரிவில் 10 வீரர்கள் புதையுண்ட இந்தச் சம்பவம், நமது ராணுவ வீரர்கள் இந்திய எல்லையைக் காக்க எத்தகைய தியாகங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உணரச் செய்திருக்கிறது. பனிச்சரிவுக்குள் காணாமல் போனவர்களை மீட்பது அரிது என்று சொல்லப்பட்ட போதிலும்கூட, விடாமுயற்சியுடன் தேடுதல் வேட்டை நடத்திய இந்திய ராணுவம் மற்ற ஒன்பது வீரர்களின் சடலங்களையும் மீட்டுள்ளது.
 சியாச்சின் மலையில் இந்திய ராணுவ தளம் அமைக்கப்பட்டு எப்போதும் வீரர்கள் காவல் காப்பதன் காரணம், உயரமான சியாச்சின் பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிவிடக் கூடாது என்பதால்தான். இமயமலையின் காரகோரம் தொடரின் கிழக்குப்பகுதியில் அமைந்த சியாச்சினில் இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோடு முடிவடைகிறது. இந்தப் பகுதியை தனது எல்லையாக வரைபடத்தில் பாகிஸ்தான் மாற்றம் செய்ததைத் தொடர்ந்துதான் நமது ராணுவத்தை அங்கே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
 1949-இல் கையெழுத்தான கராச்சி ஒப்பந்தமும், 1972-இல் செய்துகொள்ளப்பட்ட சிம்லா ஒப்பந்தமும், சியாச்சின் மலைப் பகுதி யாரைச் சார்ந்தது என்பதை தெளிவுபடுத்தவில்லை. 1984-இல் இந்தியா சியாச்சினைக் கைப்பற்றி அங்கே நிரந்தரமாக ராணுவப் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 சியாச்சின் மலையிலிருந்து சற்று கீழே, 5 கி.மீ. தொலைவில் உள்ள கியாங் லா மலையில் பாகிஸ்தான் ராணுவமும் முகாமிட்டுள்ளது. சியாச்சின் போன்ற உயரமான, கண்காணிப்புக்கு வலுவான ஓர் இடத்தை பாகிஸ்தான் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காகவே நாம் இத்தனை வீரர்களை இழந்துகொண்டிருக்கிறோம். நாம் மட்டுமல்ல, பாகிஸ்தானும் தனது வீரர்களை இழக்கவே செய்கிறது.
 இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் ராணுவத்தை விலக்கிக்கொள்வதன் மூலம் ராணுவ வீரர்களின் இழப்பைத் தவிர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கார்கில் போருக்குப் பிறகு, பாகிஸ்தான் மீதான நம்பகத்தன்மை குறைந்ததால், சியாச்சின் ராணுவ தளம் தொடர்ந்து நீடிக்க வேண்டியதாயிற்று. சியாச்சினை விட்டு இந்திய ராணுவம் இறங்கினால், பாகிஸ்தான் அங்கே ஏறி அமர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறது. ஆகவேதான், அண்மையில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சரிடம், சியாச்சினில் இருந்து ராணுவ வீரர்கள் திரும்ப அழைத்துக்கொள்ளப்படுவார்களா என்று கேட்டபோது, அது ஒரு தீர்வாகாது என்று குறிப்பிட்டார்.
 எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான் வீரர்கள் நடத்தும் துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர்கள் பலியாகிறார்கள் என்பதற்காக, எல்லையில் வீரர்களை நிறுத்தாமல் இருக்க முடியுமா? அதுபோலவே, பனிமலையில் இயற்கை இடர்பாடுகளால் ராணுவ வீரர்கள் இறக்கிறார்கள் என்பதற்காக முக்கியமான இடத்தை விட்டு வெளியேறவும் முடியாது.
 பாகிஸ்தான் வசம் சியாச்சின் போய்விட்டால், அதன் வழியே கார்கிலில் நடந்ததுபோல, இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவலை பாகிஸ்தான் ராணுவம் ஊக்குவிக்கும் என்பது உறுதி. மும்பை தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் நிதியுதவி செய்தது என்பதை தற்போது ஹெட்லி வாக்குமூலத்தால் அறியவரும்போது, பாகிஸ்தான் தரும் எந்த வாக்குறுதியை நம்பி, சியாச்சின் ராணுவ தளத்தைக் கைவிட முடியும்?
 போரைக் காட்டிலும் இயற்கைச் சீற்றங்கள் காரணமாக ராணுவ வீரர்கள் இவ்வாறு உயிரிழப்பது வேதனை தருவதாக இருந்தாலும் இந்தியா வேறு வழியில்லாமல்தான் சியாச்சினில் ராணுவப் பாதுகாப்பைத் தொடர்கிறது. சியாச்சின் செல்லும் ராணுவ வீரர்கள் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள், அவர்களுக்கு கூடுதல் படிகள், சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அவர்களது தியாகம் விலை மதிக்க இயலாத ஒன்று. சிலரால், சில சம்பவங்களால் மட்டுமே தியாகத்தின் மதிப்பை உணர நேர்கிறது.
 லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா பூரண குணமாகி நலம்பெற "தினமணி' இறைப்பரம்பொருளை இறைஞ்சுகிறது!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com