எத்தனால், எதனால்?

சில நாள்களுக்கு முன்பாக, ஒடிஸா மாநிலம், பாரதீப்பில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, எத்தனால் உள்ளிட்ட உயிரி எரிபொருள் உற்பத்தியைப் பெருக்க அதிக கவனம் செலுத்துவதாகவும், 2022-ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருள் இறக்குமதியை 10% குறைக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
Updated on
2 min read

சில நாள்களுக்கு முன்பாக, ஒடிஸா மாநிலம், பாரதீப்பில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, எத்தனால் உள்ளிட்ட உயிரி எரிபொருள் உற்பத்தியைப் பெருக்க அதிக கவனம் செலுத்துவதாகவும், 2022-ஆம் ஆண்டில் பெட்ரோலியப் பொருள் இறக்குமதியை 10% குறைக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
 எத்தனால் கலந்த பெட்ரோல் தொடர்பான கருத்தரங்கில் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிடும்போது, 120 கோடி லிட்டர் எத்தனால் வாங்குவதற்காக ஆயில் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இது இந்தியாவின் மொத்த பெட்ரோல் பயன்பாட்டு அளவில் 5% ஆகும் என்று கூறியுள்ளார்.
 பெட்ரோலியப் பொருள்களுடன் எத்தனால் 5% முதல் 10% வரை கலந்து பயன்படுத்துவதன் மூலம் மிகப்பெருமளவு அன்னியச் செலாவணியை இந்திய அரசு மிச்சப்படுத்த முடியும். இதற்கான முயற்சிகள் 2003-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தாலும்கூட, இன்னமும் முழு அளவில் நடைமுறைக்கு வரவில்லை. தற்போதுதான் இந்தத் திட்டம் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
 எத்தனால் மற்றும் உயிரி எரிபொருள் (பயோ கார்பன்) பயன்பாடு உலக நாடுகளில் பத்து ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்துவிட்டது. அமெரிக்காவில் தற்போது விற்பனையாகும் பெட்ரோலில் 10% எத்தனால் கலக்கப்பட்டிருக்கிறது. பிரேசில் இதில் முன்னோடியாக, அதிகளவில் உயிரி எரிபொருளை பெட்ரோலியப் பொருள்களுடன் கலந்து பயன்படுத்துகிறது. மிகப்பெரிய மக்கள்தொகை மற்றும் வாகன எண்ணிக்கை அதிகம் கொண்ட இந்தியாவில் இன்னமும் முழுமையாக நடைமுறைக்கு வராததற்கு முனைப்பின்மைதான் காரணம்.
 மக்காச்சோளம் உள்ளிட்ட சில பயிர்களிலிருந்தும் எத்தனால் பெற முடியும் என்றாலும், இந்தியாவில் எத்தனால் ஏறக்குறைய நூறு சதவீதம் சர்க்கரை ஆலைகளில்தான் கிடைக்கிறது. அதிக எண்ணிக்கையில் சர்க்கரை ஆலைகள் இருப்பதால், இந்திய பெட்ரோலியத் தேவையில் 5%-ஐ வழங்குவது சர்க்கரை ஆலைகளுக்குச் சாத்தியமானதே. இதனால், அவர்களுக்கு நிலைத்த வருவாய் கிடைக்கும்.
 ஒருபுறம் எத்தனால் கலப்புப் பெட்ரோலுக்கு அதிக கவனம் தந்தாலும்கூட, மத்திய அரசு ஜெட்ரோபா உயிரி எரிபொருளுக்கு (ஆமணக்கு எண்ணெய்) அதிகம் முக்கியத்துவம் தந்தால், விவசாயிகள் அதனால் நேரடியாக பயன்பெறுவர். முன்பு இந்திய ரயில்வே இதில் அதிக அக்கறை செலுத்தியது; இந்தியாவின் பல ரயில்வே கோட்டங்களில், ஆங்காங்கே ஆமணக்கு எண்ணெய் கலந்து டீசலைப் பயன்படுத்தி ரயில் என்ஜின்களை இயக்கியது. தற்போதும் சில வழித்தடங்களில் உயிரி எரிபொருள் கலந்த டீசல் பயன்பாட்டில் உள்ளது.
 ஆனாலும், ரயில்வே துறை தனது வழித்தடங்கள் அனைத்தையும் மின்தடங்களாக மாற்றிக்கொண்டே வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மின்தடங்களாக மாற்றுவது ஒருபுறம் இருக்க, இதற்கான மின்கட்டணமும் அதிகம்; மின்சாரத்துக்காக நிலக்கரி (ஃபாஸில் ஃப்யூயல்) பயன்படுத்தப்படுவதால் புவிவெப்பத்தைக் குறைக்க முடியாத சூழலும் அதிகம். ஏன் ரயில் என்ஜின்கள் அனைத்தும் மின்சாரத்தில் இயங்குவதாக மாற்றப்படுகின்றன? ஏன் அனைத்து வழித்தடங்களையும் மின்தடங்களாக மாற்றுகிறார்கள்? இந்தியாவில் ஆமணக்கை பெருமளவு கொள்முதல் செய்ய வேண்டிய ரயில்வே, எல்லா வழித்தடங்களையும் மின்தடமாக மாற்றுவதால், ஆமணக்கு சாகுபடி பரப்பு விரிவடையவே இல்லை.
 சரக்கு வாகனப் போக்குவரத்தில் ஆமணக்கு எண்ணெய் கலந்த டீசல் பயன்பாடு பெருகுமேயானால், இந்தியா இறக்குமதி செய்யும் பெட்ரோலியப் பொருள்களின் அளவு பிரதமர் குறிப்பிட்டுள்ள 10% விட அதிகமாக குறையும். விவசாயிகளும் நேரடியாக பயன்பெறுவர்.
 ஆமணக்கு வித்தில் 40% வரை எண்ணெய் இருக்கும். எண்ணெய் பிழிவுக்குப் பிறகு அதன் பிண்ணாக்கு கால்நடைகளுக்கான சிறந்த தீவனமாக பயன்படும். எண்ணெய் மூலம் வருவாயும், புண்ணாக்கு மூலம் கால்நடை வளர்ப்புச் செலவு குறைதலும் விவசாயிக்கு ஆதரவானவை. இருந்தும்கூட இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படாமல் இருப்பது நமது கவனக்குறைவைத்தான் காட்டுகிறது.
 ஆமணக்கு எண்ணெய் கலந்த டீசல் பயன்பாட்டை பல இடங்களில் வலியுறுத்திப் பேசியவர் மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இந்தியாவில் உள்ள மானாவாரி நிலப்பரப்பில் பாதிக்கும் மேற்பட்டவை ஆமணக்குப் பயிரிடத் தகுதியானவை. இந்த நிலப்பரப்பில் ஆமணக்கு சாகுபடி செய்வதன் மூலம் இந்தியாவின் உயிரி-எரிபொருள் தேவை நிறைவாகும் என்பதோடு விவசாயிகளுக்கு நிரந்தரமான வருவாய்க்கு வழி ஏற்படும் என்ற கருத்தை அவர் வலியுறுத்தி வந்தார்.
 தமிழக அரசும்கூட ஆமணக்கு உற்பத்தி மற்றும் இதன் விற்பனையில் வரிவிலக்கு ஆகியவற்றை அறிவித்திருந்தது. இருப்பினும்கூட, தற்போது ஆமணக்கு உற்பத்தி குறைந்துகொண்டே வருகிறது. சரக்கு வாகனங்கள் அனைத்திலும் ஆமணக்கு எண்ணெய் கலந்த டீசல் பயன்பாட்டுக்கு வந்தால், இந்தியாவுக்குப் பெரும் நன்மை உண்டு. இயற்கை மற்றும் புவிவெப்பக் குறைப்புக்கும் உதவி செய்வதாக அமையும்.
 ஆமணக்கு எண்ணெய்யைக் கலக்கின்றபோது, என்ஜின்கள் இயங்குவதற்கான தீப்பொறி உடனடியாக கிடைப்பதில்லை என்ற புகார் முதலில் இருந்தது. இப்போது அதையெல்லாம் தொழில்நுட்பம் கடந்து வந்துவிட்டது. இனியும் சரக்கு வாகனப் போக்குவரத்தில் ஆமணக்கு எண்ணெய்யை அமலுக்கு கொண்டுவரத் தாமதித்தல் கூடாது. பிரதமரின் அறிவிப்பு எத்தனால் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். அரசும் இதற்கான முனைப்பை அதிகரிக்க வேண்டும்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com