வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

ஆபத்து, பேராபத்து!

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதுபோல, தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்படுகிறது. 13 மாநிலங்களையும், 2 யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய 2015 - 16க்கான தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பின் முதற்கட்ட முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையில் வியக்கத்தகு மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:34 pm

ஆசிரியர்

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதுபோல, தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு ஒன்றும் நடத்தப்படுகிறது. 13 மாநிலங்களையும், 2 யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய 2015 - 16க்கான தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பின் முதற்கட்ட முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையில் வியக்கத்தகு மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
 மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டிருக்கும் ஒரு மாநிலம் பிகார். சிசு மரண எண்ணிக்கை, ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளின் மரணம், சராசரி மகப்பேறு எண்ணிக்கை ஆகியவை கணிசமாகக் குறைந்திருக்கின்றன. மருத்துவமனைப் பிரசவங்களின் எண்ணிக்கை 19.9%-ஆக இருந்த நிலைமை மாறி இப்போது 63.8% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறும் முன்னேற்றம், பிகார் போன்ற கல்வியறிவில் பின்தங்கிய மாநிலத்திலேயே ஏற்பட்டிருக்கிறது என்றால், தேசிய அளவிலான மாற்றத்தை உணரலாம்.
 சிசு மரண எண்ணிக்கை கணிசமாகக் குறைவதும், 21 வயதுக்கு மேல் பெண்கள் திருமணம் செய்து கொள்வதும், கருத்தரிப்பதும், பெருவாரியான பிரசவங்கள் பாதுகாப்பாக மருத்துவமனைகளில் நடைபெறுவது போன்றவை மிகவும் பின்தங்கிய மாநிலங்களில்கூட அதிகரித்து வருவது அரசின் தொடர்ந்த பிரசாரத்திற்கும், முனைப்புக்கும் கிடைத்த வெற்றி என்பதில் ஐயமில்லை.
 தேசிய சுகாதார முனைப்பு (நேஷனல் ஹெல்த் மிஷன்), மாநில அளவிலான பல்வேறு முயற்சிகள், தடுப்பூசி குறித்த பரவலான விழிப்புணர்வு, கிராமப்புறங்கள் வரையில் மருத்துவ வசதிகள், எல்லாவற்றிற்கும் மேலாக, கிராமப்புற செவிலியர்களின் விடாமுயற்சி ஆகியவைதான் இந்த அளவு முன்னேற்றத்தை உறுதிப்படுத்தி இருக்கின்றன. கல்வியறிவு அதிகரித்து வருவதும், பொருளாதார முன்னேற்றத்தின் பலன் அடிமட்டம்வரை பிரதிபலிக்கத் தொடங்கி இருப்பதும்கூடக் காரணம் என்று கூறலாம்.
 இதுபோலப் பல வரவேற்புக்குரிய முன்னேற்றங்கள் அடித்தட்டு சமுதாயம்வரை ஏற்பட்டிருப்பதைப் பாராட்டும் அதேநேரத்தில், மக்களின் ஆரோக்கியத்தை பாழ்படுத்தும் புதிய பல நோய்கள் உருவெடுத்து வருவது கவலையளிக்கிறது. இந்தப் புதிய நோய்கள், தொற்று நோயாக இல்லாமல், பழக்கவழக்கம் சார்ந்ததாக இருக்கின்றன என்பதுதான் வேதனை தரும் செய்தி.
 ஆரோக்கியமில்லாத உணவுப் பழக்கங்களும், உடல் நலத்தைப் பாதிக்கும் வாழ்க்கை முறைகளும்தான் இந்த நோய்களுக்கான மூல காரணம் எனும்போது, சமுதாயம் கல்வியறிவில் மேம்பாடு அடைந்ததிலும், பொருளாதார வளர்ச்சியை அடைந்ததிலும் பயனில்லை என்கிற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
 தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி, ஆந்திர மாநிலத்திலுள்ள மக்களில் நான்கில் மூன்று பகுதியினர் பருமனாகவும், உடல் எடை கூடியவர்களாகவும் இருப்பதாகத் தெரிகிறது. பத்து விழுக்காடு ஆண்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்களாகவும், சர்க்கரை நோயாளிகளாக இருப்பவர்களாகவும் தெரிகிறது. பொருளாதாரத்தில் மேம்பட்டிருக்கும் பல மாநிலங்களிலும் இதேநிலைமைதான் காணப்படுகிறது. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலுமே, பாதிக்குப் பாதி ஆண்கள் மது அருந்துகின்றனர் என்கிறது அந்த அறிக்கை. அதன் விளைவாகவும், முறையான வாழ்க்கைமுறை இல்லாததாலும், உணவுப் பழக்கங்களாலும், ஆண்களிடம் மலட்டுத்தன்மை அதிகரித்து வருவதாகவும் அந்தப் புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன.
 மது அருந்துதல், சிகரெட் புகைத்தல் போன்ற பழக்கங்களால் ஏற்படும் புற்று நோய், நுரையீரல் பிரச்னைகள், கல்லீரல், சிறுநீரகப் பாதிப்பு போன்றவை மட்டுமல்லாமல், "துரித உணவு' என்கிற பெயரில் அறியப்படும் பிட்ஸா, பர்கர், அரை வேக்காட்டில் தயாரிக்கப்படும் ஃப்ரைட் ரைஸ், ரசாயனச் சேர்க்கைகள் மட்டுமல்லாமல் அதிகமான கொழுப்புச் சத்துடன் கூடிய மெக்டொனால்ட், கென்டுகி ஃபிரைடு சிக்கன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவன மாமிச உணவுகள், கோக கோலா, பெப்ஸி தொடங்கிய சர்க்கரையை அதிகரிக்கும் பானங்கள் ஆகியவற்றின் தாக்கத்தாலும் மிகப்பெரிய உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக அந்தக் கணிப்பு தெரிவிக்கிறது. மேலே குறிப்பிட்ட அத்தனை கெடுதல்களும், இளைய தலைமுறையைச் சேர்ந்த படித்த, வேலைபார்க்கும் பெண்களையும் பாதிப்பதாக அந்தக் கணிப்பு எச்சரிக்கிறது.
 குழந்தைகள், இளம் பருவத்தினர் இடையேயான உடல் பருமன் பிரச்னைகளை சாதாரணமானது என்று தள்ளிவிட முடியாது. சமீபத்தில் வெளியாகி இருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்றின்படி, இந்தியாவிலுள்ள 5 முதல் 19 வயதுவரையிலான குழந்தைகளில் 22 சதவீதத்தினர் உடல் பருமனாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. உலகில் மிக அதிகமான ஊட்டச்சத்துக் குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை உள்ள இந்தியாவில், இப்படியொரு முரண் காணப்படுவதை ஆச்சரியத்துடன் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
 சிறு வயது முதலே குழந்தைகளுக்கு மாமிச உணவுப் பழக்கத்தை ஏற்படுத்துவது, அடிக்கடி ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகளைப் பழக்கப்படுத்துவது போன்ற பெற்றோர்களின் செயல்கள்தான் இதற்கு முக்கியமான காரணம் என்றும், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் குழந்தைகளை ஈடுபடுத்த அவர்கள் தவறுகிறார்கள் என்றும் அந்த உலக சுகாதார நிறுவன அறிக்கை குற்றம் சாட்டுகிறது.
 ஒருபுறம் தொற்று நோய்களைத் தடுப்பதிலும், சிசு மரணத்தைத் தடுப்பதிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். இன்னொரு புறம், ஆரோக்கியமான இளைய தலைமுறைக் குழந்தைகளை வளர்க்காமல் இருக்கிறோம். இப்படியே விட்டுவிட்டால் இதன் விளைவுகள் விபரீதமாக இருக்கப் போகிறது!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.