"முத்ரா' வங்கித் திட்டம் மூலம், தச்சு வேலை செய்பவர், இஸ்திரி வண்டி வைத்திருப்பவர், அன்றாடம் தெருத் தெருவாகக் காய்கறி விற்பவர், செருப்புத் தைக்கும் தொழிலாளி என்று சொந்தமாகத் தொழில் செய்து பிழைப்பவர்கள் கடனுதவி பெறவும், அதன் மூலம் செழிப்படையவும் வழிகோலப்பட்டது. அந்தத் திட்டம் ஒரு வருடமாகியும் இன்னும்கூட அடித்தட்டு மக்களைச் சென்றடையவில்லை. அதற்கான வழிமுறைகளை வங்கிகள் மேற்கொள்ளவுமில்லை. முழுமையாக விளம்பரம் செய்யப்படவும் இல்லை. திட்டத்தின் குறிக்கோள் நன்றாக இருந்தும், செயல்படுத்துவதில் முறையான திட்டமிடல் இல்லாததால் முடங்கிக் கிடக்கிறது.