தேவை, செயல்முனைப்பு!

அடுத்த 16 ஆண்டுகள், ஈரானில் குழப்பமான அரசியல் சூழல் காணப்பட்டதால், இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்பும், நட்பும் வலுவிழந்து காணப்பட்டது. 1993-இல் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், ஈரானின் முக்கியத்துவத்தை உணர்ந்து அந்த உறவை வலுப்படுத்தும் எண்ணத்துடன் டெஹ்ரானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
Updated on
2 min read

இந்தியாவுக்கும் ஈரானுக்குமான உறவு கடந்த சில ஆண்டுகளாக வலுவிழந்து விட்டிருக்கிறது என்றாலும், தொடர்புகள் அறுந்துவிடவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இந்திய - ஈரான் உறவை மேம்படுத்தப் பல வாய்ப்புகள் ஏற்பட்டும்கூட, அவை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை.
 1950-இல் சுதந்திர இந்தியாவும் ஈரானும் ராஜீய உறவை ஏற்படுத்திக் கொண்டன. 1956-இல் ஈரான் மன்னர் மொகம்மது ரெசா ஷாவும், 1959-இல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவும் அரசுமுறைப் பயணமாக தில்லிக்கும், டெஹ்ரானுக்கும் பயணம் செய்து அந்த உறவை பலப்படுத்தினார்கள்.
 அதற்குப் பின்னர் 15 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பிரதமர் இந்திரா காந்தியின் ஈரான் விஜயம் நடைபெற்றது. அந்த நெருக்கம், 1977-இல் அமைந்த ஜனதா ஆட்சியில் வலுப்பட்டது. பிரதமர் மொரார்ஜி தேசாய் 1977-லும், மன்னர் ஷா 1978-லும் பரஸ்பரம் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டனர்.
 அடுத்த 16 ஆண்டுகள், ஈரானில் குழப்பமான அரசியல் சூழல் காணப்பட்டதால், இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்பும், நட்பும் வலுவிழந்து காணப்பட்டது. 1993-இல் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், ஈரானின் முக்கியத்துவத்தை உணர்ந்து அந்த உறவை வலுப்படுத்தும் எண்ணத்துடன் டெஹ்ரானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். பிறகு, மீண்டும் தொய்வு. 2001-இல் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் ஈரான் விஜயமும், அதைத் தொடர்ந்து 2003-இல் ஈரான் அதிபர் மொகம்மது கடாமியின் விஜயமும் மீண்டும் உறவுக்குப் புத்துயிர் அளித்தன.
 இடையில், 2008-இல் தில்லிக்கு ஈரான் அதிபர் மஹ்மூத் அகமதிநிஜாதும், 2012-இல் டெஹ்ரானில் நடந்த அணிசாரா நாடுகள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் விஜயம் செய்தாலும், உறவில் பெரிய நெருக்கம் ஏற்பட்டுவிடவில்லை. இந்தப் பின்னணியில் கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியின் ஈரான் நாட்டு அரசுமுறைப் பயணம் நடைபெற்றிருக்கிறது.
 கடந்த ஆண்டு மே மாதம் ஈரான் நாட்டுடன் இந்தியா சபாஹார் துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள முடிவெடுத்ததும், ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. கடந்த ஆண்டு கடைசியிலேயே பிரதமர் மோடி ஈரானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இடையில் ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானியை உஃபாவில் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார் என்றாலும், ஈரானுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை.
 ஏறத்தாழ ஒரு வருடம் கடந்துவிட்டது. இடையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மோடி ஆகிய மூவரும், அநேகமாக இராக் தவிர, ஈரானின் அத்தனை அண்டை நாடுகளுக்கும் இந்தியாவின் சார்பில் அரசுமுறைப் பயணங்கள் மேற்கொண்டனர். ஈரான் இப்போதுதான் கவனத்தைப் பெற்றிருக்கிறது.
 இதற்கு, ஈரானுடனான சில பிரச்னைகளில் தீர்வு எட்டப்படாமல் இருந்ததுதான் காரணம் என்கிறார்கள். குறிப்பாக, சபாஹார் துறைமுகத்தில் ஈரானிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் தலையீடு, இந்திய நிறுவனங்களால் கைவிடப்பட்ட எண்ணெய் வயல்களைத் திருப்பித் தருவது, கச்சா எண்ணெய், பெட்ரோலிய வாயு ஆகியவற்றின் விலை நிர்ணயம் ஆகியவை முக்கியமான காரணங்கள். ஓர
 ளவுக்கு இந்தப் பிரச்னைகளில் முடிவு எட்டப்பட்ட நிலையில், இப்போது பிரதமரின் விஜயம் வெற்றிகரமாக நடந்தேறி இருக்கிறது.
 இந்தியாவும் ஈரானும் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டாலும்கூட, அதில் 500 மில்லியன் டாலர் செலவில் சபாஹார் துறைமுகத்தை மேம்படுத்தி செயல்படுத்துவதுதான் மிக முக்கியமான ஒப்பந்தம். இப்போது இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தான், ஈரான், மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையில் வர்த்தகத் தொடர்பு மேற்கொள்ள வேண்டுமானால், பாகிஸ்தான் வழியாக மட்டுமே நடைபெற்றாக வேண்டும். அதைப் பாகிஸ்தான் பல்வேறு வழிகளில் முடக்கி வருகிறது.
 சபாஹார் துறைமுகம் இந்தியாவின் ஒத்துழைப்புடன் செயல்படுமானால், கடல்வழி மார்க்கமாக இந்தியாவில் உற்பத்தியாகும் பொருள்களை ஈரானுக்கும், அங்கிருந்து தரைவழி மார்க்கமாக, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய நாடுகளுக்கும் எடுத்துச் சென்றுவிட முடியும். இந்தியா ஏற்கெனவே ஆப்கானிஸ்தானில் சரான்ஜ் - டெலாரம் நெடுஞ்சாலையை அமைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சபாஹாரிலிருந்து ஜாஹேதனுக்கு ரயில் பாதை அமைக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
 சபாஹார் துறைமுகம் பாகிஸ்தானின் க்வதார் துறைமுகத்திலிருந்து 100 கி.மீ. தூரத்தில்தான் இருக்கிறது. அந்த துறைமுகத்தை பாகிஸ்தானுக்காக சீனா மேம்படுத்திவரும் நிலையில், இந்தியா சபாஹார் துறைமுகத்தை மேம்படுத்த ஈரானுடன் ஒப்பந்தம் செய்திருப்பது ராஜீய ரீதியிலான மிகப்பெரிய வெற்றி என்பதில் சந்தேகமில்லை.
 அதேநேரத்தில் நாம் சில நிதர்சன உண்மைகளை உணர்ந்து செயல்பட்டாக வேண்டும். நாம் ஒப்புக்கொள்ளும் இதுபோன்ற பணிகள் எதிலுமே குறிப்பிட்ட காலக்கெடுவைக் கடைப்பிடிப்பதில்லை. சீனாவுடனும், உலக நாடுகளுடனும் போட்டிபோட்டு சர்வதேச அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமானால், குறிப்பிட்ட காலக்கெடுவில் நாம் மேற்கொண்ட திட்டங்களை நிறைவேற்றும் செயல்முனைப்பு நமக்கு இருந்தாக வேண்டும். உலக நாடுகள் அனைத்துமே ஈரானையும், ஈரானின் எண்ணெய் வளத்தையும் குறிவைக்கும் நிலையில், இந்த வாய்ப்பை இந்தியா எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதில்தான் நமது வெற்றி அடங்கி இருக்கிறது!
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com