முதல்வர் மனது வைத்தால்...

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாஸி) நடத்தும் 39-ஆவது புத்தகக் கண்காட்சி திங்கள்கிழமை நிறைவுக்கு வந்திருக்கிறது. பதிமூன்று நாள்கள் நடைபெற்ற இந்தப் புத்தகக் கண்காட்சியில் ஏறத்தாழ ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானதாகத் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாஸி) தெரிவிக்கிறது.
Updated on
2 min read

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாஸி) நடத்தும் 39-ஆவது புத்தகக் கண்காட்சி திங்கள்கிழமை நிறைவுக்கு வந்திருக்கிறது. பதிமூன்று நாள்கள் நடைபெற்ற இந்தப் புத்தகக் கண்காட்சியில் ஏறத்தாழ ரூ.15 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானதாகத் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாஸி) தெரிவிக்கிறது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள பல்வேறு பதிப்பகங்கள் பங்கேற்ற இந்தக் கண்காட்சியில் 700 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னை தீவுத்திடலில் நடந்த இந்தக் கண்காட்சிக்கு சுமார் 10 லட்சம் பேர் வருகை தந்தனர்.

வழக்கமாக ஜனவரி மாதத்தில் நடைபெற வேண்டிய புத்தகக் கண்காட்சி சென்னையில் பெய்த பெருமழை காரணமாக இப்போது நடத்தப்பட்டது. கோடிக்கணக்கான முதலீடு மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட அந்த அவலமும், கிடைத்தற்கரிய பல பழைய, அரிய நூல்களின் மூலப் பிரதிகளும், பதிப்புகளும் அழிந்துவிட்ட சோகமும் வார்த்தையில் விவரிக்க முடியாதவை. மழை வெள்ளத்தால் பெருமளவில் பல பதிப்பகங்கள் பாதிக்கப்பட்டு, புத்தகங்கள் வீணாகிய நிலையில், அவர்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதே மிகப்பெரிய ஆறுதல்.

கடந்த ஆண்டுகளில் புத்தகக் கண்காட்சிகள் நடந்த மைதானங்கள் கிடைக்காததால் இந்த ஆண்டு சாதாரணமாகக் கேளிக்கைக் கண்காட்சி நடைபெறும் தீவுத் திடலைப் புத்தகக் கண்காட்சிக்குத் தேர்ந்தெடுத்தார்கள். வெப்பமில்லாத மார்கழி மாத இறுதியில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி இந்த முறை அனல் கக்கும் கோடையில் நடத்தப்பட்டது. அதனால், கண்காட்சிக்கான இடத் தேர்வும், தேர்வு செய்யப்பட்ட நாள்களும் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை என்பதுதான் உண்மை.

இதெல்லாம் போதாதென்று, சென்னையில் கோடை மழை பெய்ததால் முதல் வார விற்பனை கடுமையாகப் பாதித்துவிட்டது. கண்காட்சிக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவுத்திடல் சதுப்பு நிலம் என்பதால் மழை நீரால் சேறாகி, மக்களைச் சிரமப்படுத்தியது. கண்காட்சிக் கூடாரம் சரியாக அமைக்கப்படாததால் சுமார் 30 அரங்குகள் மழைப் பாதிப்புக்கு உள்ளாகின. கண்காட்சியில் பங்குபெற்ற பதிப்பகத்தினருக்கு சோதனை மேல் சோதனை.

கண்காட்சிக்குத் தேர்வு செய்யப்பட்ட நாள்களும் பள்ளிகள் தொடங்கும் காலம். பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில், கல்லூரியில் சேர்ப்பதற்காக அலைந்து கொண்டிருக்கும் நேரம். எல்லாப் பள்ளி, கல்லூரிகளிலும் இளைஞர்களும் பெற்றோரும் குழு

மியிருக்கும் இன்றையச் சூழலில் இவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆகஸ்ட் மாதம் வரை ஆகும்.

மேலும், குழந்தைகளின் புதிய பள்ளி அல்லது கல்லூரிக் கல்விக் கட்டணம், அல்லது புதிய வகுப்புக்கான புத்தகங்கள் மற்றும் சிறார்களுக்கு பள்ளி உடைகள் வாங்குவது தொடர்பான வேலை, அதற்கான செலவுகளால் பொது நூல்கள் வாங்கப் பணம் ஒதுக்க இயலாத சூழல் என எல்லாமும் சேர்ந்து புத்தகக் காட்சிக்கு வருவோர் எண்ணிக்கை, வாங்கும்திறன் எல்லாவற்றையும் மட்டுப்படுத்திவிட்டது.

இந்தச் சூழலைப் பார்க்கும்போது, தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வெளியே ஒரு நிரந்தரக் கண்காட்சி அரங்கம் மிகப் பெரியதாக அமைக்கப்படாத அவலத்தை நாம் உணர முடிகிறது. கோவையில் கொடீஸியா என்ற அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பே மிகப் பிரம்மாண்டமான காட்சி வளாகத்தை உருவாக்கியது. தற்போது மதுரையில் மெடீஸியா, அதேபோன்று மிகப்பெரிய பரப்பில் காட்சி வளாகம் அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது.

ஆனால், சென்னையில் இன்னும்கூட, மிகப் பிரம்மாண்டமான வளாகம் (சென்னையின் நடுவே நேரு உள்விளையாட்டு அரங்கம் தவிர்த்து) வேறு ஏதும் இல்லை. பபாஸி போன்ற, பெருலாபம் இல்லாத அமைப்புகளால் தனியார் வளாகங்களில் புத்தகக் காட்சி நடத்துவது சாத்தியமில்லாதது. இத்தனை காலமாக புத்தகக் கண்காட்சி நடத்தி வரும் இந்த அமைப்பு, ஊருக்கு வெளியே தனக்கான ஒரு நிரந்தர வளாகத்தை அரசிடம் கேட்டுப் பெற முடியவில்லை என்றால், அதற்காக யாரைக் குறை சொல்வது?

தமிழகத்தில் பதிப்புத் துறை மற்றும் புத்தக விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் சென்னையில் அமைந்துள்ளன; கிளைகள் அமைத்துள்ளன. சென்னைதான் புத்தக விற்பனைக்கான முதன்மைஇடமாக விளங்குகிறது. சென்னையில் ஆண்டு

தோறும் கிறிஸ்துமஸ், பொங்கல் திருநாள் இடையே நடத்தப்படும் புத்தகக் கண்காட்சியில் மட்டுமே பல பதிப்புத் துறைகள் ஓராண்டுக்கான விற்பனையைப் பார்க்க முடிகிறது.

சென்னை புத்தகக் காட்சி மட்டுமே விற்பனைக்கான வாய்ப்பை விரிக்கிறது. சென்னை முழுவதுமே வெள்ளத்தில் மிதந்தபோது, ஒரு சில பதிப்பகங்களில், புத்தம் புதிய புத்தகங்கள் வாசகர்களைக் காணாமலேயே ஜலசமாதி பெற்றன. இந்த வேதனைகளையும், இழப்புகளையும் சில பதிப்புத் துறையினர் வெளிப்படையாக தெரிவித்த போதிலும், யாரிடமும் எந்தச் சலனமும் ஏற்படவில்லை. அந்த இழப்பைச் சரிசெய்துவிடலாம் என்று எண்ணியவர்களும், அன்று வெள்ளத்தில் பாதிக்கப்படாதவர்களும்கூட இப்போது மருகி நிற்கிறார்கள்.

வண்டலூருக்கு மற்றொரு புறநகர் பேருந்து நிலையம் அமைக்கவிருக்கும் திட்டம் இருப்பதாலும், அப்பகுதியில் பேருந்து, ரயில் போக்குவரத்து வசதிகள் இருப்பதாலும், ஒரு நிரந்தரமான கண்காட்சி வளாகத்தை அடுத்த 10 ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு விரிவான பரப்பில் தமிழக அரசு அமைக்க வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா மனது வைத்தால் இதைச் செய்வது

ஒரு பொருட்டே அல்ல. அவர் மனதுவைத்தால் மட்டுமே இது சாத்தியம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com