நடத்தையா, கண்ணியமா?

சென்னை உயர்நீதிமன்றம் அமல்படுத்தியுள்ள வழக்குரைஞர்கள் சட்டப் பிரிவு 34(1)-திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் பரவலாக வழக்குரைஞர்கள் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
Updated on
2 min read

சென்னை உயர்நீதிமன்றம் அமல்படுத்தியுள்ள வழக்குரைஞர்கள் சட்டப் பிரிவு 34(1)-திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் பரவலாக வழக்குரைஞர்கள் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஒரு வழக்குரைஞரை அவர் பணியாற்றத் தகுதியற்றவர் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் "வழக்குரைஞர் சட்டம் 1961, பிரிவு 34"-ல் ஏற்கெனவே உள்ளது. அதன்படி, தவறு இழைத்த, அல்லது தகுதியற்ற வழக்குரைஞர் குறித்த விவரத்தை நீதிமன்றம் பார் கவுன்சிலுக்கு பரிந்துரைக்கும். பார் கவுன்சில் அந்த வழக்குரைஞர் மீது நடவடிக்கை எடுக்கும். ஆனால், பார் கவுன்சில் பல விவகாரங்களில் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாத சூழல்கள் அதிகமாகிக்கொண்டே வந்ததன் விளைவுதான் நீதிமன்றமே இந்த விவகாரத்தை எடுத்துக்கொள்ள நேர்ந்தது என்கிற உண்மையை நாம் ஏற்றாக வேண்டும்.

நீதிமன்ற அவமதிப்புக்குரிய செயல்களில் ஈடுபடும் வழக்குரைஞர்கள் மீது, வழக்குரைஞர்கள் சட்டத்தின் 34-ஆவது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இந்த நிலையில், அந்தப் பிரிவின்கீழ் அதிகாரம் வரையறுக்கப்படாவிட்டாலும், நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குலைக்கும் விதத்தில் செயல்படும் வழக்குரைஞர்களைத் தண்டிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் ஆர்.கே.ஆனந்த் வழக்கில் தெளிவுபடுத்தியது.

தெளிவான விதிமுறைகளும், அதிகாரங்களும் வரையறுக்கப்படாத நிலையில், அதைக் காரணம் காட்டி நீதிபதிகளின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடுப்பார்கள் என்பதால் கடைசிப் பத்தியில், அடுத்த நான்கு மாதங்களுக்குள் அனைத்து நீதிமன்றங்களும் தகுந்த விதிமுறைகளை வகுக்கும்படி ஜூலை 29, 2009-இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த முனைந்திருக்கிறது.

தற்போது, சென்னை உயர்நீதிமன்றம் அமல்படுத்தியுள்ள திருத்தத்தில் நீதிபதிகள், நீதித்துறை சார்ந்தவர்களைப் பற்றி எந்த ஆதாரமும் இல்லாமல் புரளி பேசுவதோ அல்லது புகார் மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்புவதோ குற்றமாகக் கருதப்படும்; தீர்ப்பைத் திரித்து அல்லது மறைத்து, மாற்றியமைத்தல் தவறு; நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்குரைஞர்கள் பேரணி, போராட்டம் நடத்துவதோ அல்லது அதில் பங்கேற்பதோ குற்றம்; நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் நீதிமன்றத்துள் மது அருந்தி வந்து வாதம் செய்தல், நீதிபதியைக் கோபப்படுத்தும் வகையில் பேசுதல் குற்றம் உள்ளிட்ட பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் எதுவுமே தவறானதாகத் தெரியவில்லை.

வழக்குரைஞர்களைப் பொருத்தவரை, இது நீதிபதிக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்து, ஒரு வழக்குரைஞரை முடக்கிவிடுவதற்கான நோக்கம் கொண்டிருக்கிறது என்பதாக எதிர்வாதம் முன்வைக்கப்படுகிறது. வழக்குரைஞர்கள் சட்டத்தில் திருத்தம் என்பது சுயக்கட்டுப்பாடு (செல்ஃப்-ரெகுலேட்டரி) சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, தண்டிப்பதாக அமையக்கூடாது என்பதுதான் வழக்குரைஞர்கள் வாதம்.

இந்த சட்டத் திருத்தம் சென்னை உயர்நீதிமன்றம் மட்டுமே செய்திருக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின்பேரில் இத்தகைய சட்டத் திருத்தங்கள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களில் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில், சென்னை உயர்நீதிமன்றம் மட்டும் ஏன் விதிவிலக்காக வேண்டும்?

இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கெளல் விளக்கம் தரும்போது, "இது தன்னிச்சையான முடிவு அல்ல, இது தொடர்பாக ஜூன் 2015 முதல் நான்கு முறை, 3 நீதிபதிகள் கொண்ட குழு விவாதித்துள்ளது, இந்தக் கூட்டங்களில் மெட்ராஸ் பார் அசோசியேஷன்ஸ், மகளிர் வழக்குரைஞர்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் உள்பட பல அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்குகொண்டுள்ளனர். ஆகையால், விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பது தங்களுக்குத் தெரியாது என்று வழக்குரைஞர்கள் கூறுவதை ஏற்க முடியாது' என்று கூறியுள்ளார்.

இவ்வளவுக்குப் பிறகும் தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞர்களின் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தச் சட்டத் திருத்தம் என்பது, வழக்குரைஞர்கள் சட்டம் பிரிவு 35-ன் மூலம் பார் கவுன்சிலுக்கு உள்ள அதிகாரத்தைப் பறிக்கிறது என்ற கருத்தையும் வழக்குரைஞர்கள் சொல்கிறார்கள். இருப்பினும், இந்தத் திருத்தம், நீதிமன்ற வளாகத்துக்குள் ஒரு வழக்குரைஞர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதாகவே இருப்பதால், இது பார் கவுன்சில் அதிகாரத்தைப் பறிப்பதாகச் சொல்ல முடியாது என்ற கருத்தும் சில வழக்குரைஞர்களால் முன் வைக்கப்படுகிறது.

கேரள உயர்நீதிமன்றத்தில், நீதிமன்றத்தை அவமதிப்பு செய்த ஒரு வழக்குரைஞரை பார் கவுன்சில் தடை செய்தாலும் செய்யாவிட்டாலும், கேரள நீதிமன்றத்தில் வாதாட அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பு அளித்தபோது, அந்தத் தீர்ப்பை சரியென்று நிலைநாட்டியது உச்சநீதிமன்றம், "இந்தத் தீர்ப்பு ஒரு வழக்குரைஞரின் நடத்தை குறித்தது அல்ல; நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் காப்பதற்கான உத்தரவு" என்றது உச்சநீதிமன்றம். இப்போது தமிழ்நாட்டில் வழக்குரைஞர்கள் நடத்தும் போராட்டத்திலும் இதே கேள்விதான் எழுந்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் அண்மைக் காலமாக தனது புகழையும், பெருமையையும், கண்ணியத்தையும் இழந்து வருகிறது என்பதை உணர்ந்தால், இரு தரப்பினருமே மீண்டும் கலந்துபேசி, எந்த விதிமுறைகளை இறுக்கமாக்கலாம், எதைச் சற்று தளர்த்தலாம் என்பதைப் பேசுவது சாத்தியம். நடவடிக்கையே கூடாது என்பது சரியான வாதம் அல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com