அவசரப்படுகிறோமே, ஏன்?

விமானப் போக்குவரத்து, மருந்து உற்பத்தி, உணவுப்பதப்படுத்தல், பாதுகாப்புத் துறை, ஒற்றை வணிகஇலச்சினைப் பொருள்களின் சில்லறை வணிகம் என பல பிரிவுகளுக்கு 100% அன்னிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசு, அதிரடி தள்ளுபடி போல, அதிரடி அனுமதி அளித்துள்ளது.
Updated on
2 min read

விமானப் போக்குவரத்து, மருந்து உற்பத்தி, உணவுப்பதப்படுத்தல், பாதுகாப்புத் துறை, ஒற்றை வணிகஇலச்சினைப் பொருள்களின் சில்லறை வணிகம் என பல பிரிவுகளுக்கு 100% அன்னிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசு, அதிரடி தள்ளுபடி போல, அதிரடி அனுமதி அளித்துள்ளது.

சந்தைப் பொருளாதாரத்தை ஆரத்தழுவுவது, உலகமய ஜோதியில் கலந்துவிடுவது என்று 1991-இல் தீர்மானித்துவிட்ட பிறகு அன்னிய முதலீட்டையும் அதன் விளைவுகளையும் தவிர்க்க முடியாது.

இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு என்பது கடந்த 25 ஆண்டுகளாக மெல்ல மெல்ல பல நிலைகளில் முதலீட்டு விகிதம் உயர்ந்து கொண்டே வந்து இப்போது 100%}ஐ எட்டியிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில், மெல்லத் திறந்தது கதவு. இப்போது பா.ஜ.க. ஆட்சியில் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது.

அன்னிய நேரடி முதலீடு என்பது உலகியல் நடைமுறை. சீனா உள்பட அனைத்து உலக நாடுகளும் ஏற்றாக வேண்டிய கட்டாயத்தை உலக வர்த்தகப் பிணைப்பு உருவாக்கியுள்ளது. ஆகவே, எந்த அளவுக்குக் கதவுகளைத் திறந்து வைக்கிறோம் என்பதைக் காட்டிலும், உள்ளே எவ்வளவு வருகிறது, வெளியே எவ்வளவு போகிறது என்பது குறித்த பாரபட்சமற்ற, கவனமான கண்காணிப்பும் கணக்கீடும்தான் இன்றைய தேவை. அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் மத்திய அரசு கவனம் செலுத்தியாக வேண்டும்.

இந்தியாவில் தற்போது ஜெட்ஏர்வேஸ், விஸ்தாரா போன்றவை வெளிநாட்டு விமான நிறுவனங்களுடன் இணைந்து கூட்டாகச் செயல்படுகின்றன. உள்நாட்டு விமானச் சேவையில் மட்டுமே 100% முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளதால், இவர்களே தனி நிறுவனங்களைத் தொடங்கலாம். புதிய நிறுவனங்களும் வரக்கூடும். ஏற்கெனவே, உள்நாட்டு விமானச் சேவையில் குறுந்தொலைவு சேவைகளை அதிகரிக்கவும், விமான நிலையங்களின் எண்ணிக்கையைப் பெருக்கவும் புதிய விமானப் போக்குவரத்துக் கொள்கையை அரசு அறிவித்திருப்பது இணக்கமான சூழலை உருவாக்கியுள்ளது.

இருப்பினும், இதுநாள்வரை புதிய விமான நிலையங்களை உருவாக்கும் திட்டங்களுக்கு மட்டுமே (கிரீன்ஃபீல்டு புராஜக்ட்) 100% அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுவந்த நிலையில், தற்போது ஏற்கெனவே உள்ள விமான நிலையங்களையும் தரம் உயர்த்தும் பணிகளுக்கு (பிரவுன்ஃபீல்டு புராஜக்ட்) 100% அன்னிய முதலீட்டை அனுமதித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதனால், விமான நிலையங்கள் தனியார் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும்.

தற்போது மும்பை மற்றும் தில்லி விமான நிலையங்களின் தரம் உயர்த்தல் பணிகள் இந்திய -அயல்நாட்டு கூட்டு நிறுவனத்தின் திட்டமாக இருக்கிறது. தற்போது முழுக்க முழுக்க ஓர் அயல்நாட்டு நிறுவனம் ஒரு விமான நிலையத்தை, உதாரணமாக தமிழகத்தில் திருச்சி, மதுரை இரு இடங்களையும் மேம்படுத்தும் பணியைப் பெறுமானால், அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் விமான நிலையம் போய்விடும்.

பயணிகளிடம் வசூலிக்க வேண்டிய மேம்பாட்டுக் கட்டணத்தை நிர்ணயிப்பதும், ஊழியர்களைப் பணியமர்த்துவதும் அவர்கள் கட்டுப்பாட்டில் நடைபெறும். இயந்திரங்களை அதிகம் பயன்படுத்துவார்கள். வேலைவாய்ப்புக்கான வாய்ப்பு அதிகரிக்காது. கட்டுமானப் பணிகளுடன் வேலைவாய்ப்பு முடிந்துபோகும்.

அதேபோன்று, தனித்த இலச்சினை வணிகப்பொருள் விற்பனையில் 100% அன்னிய நேரடி முதலீடு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திறந்துவிடப்பட்டாலும், இந்த நிறுவனங்கள் தங்கள் உற்பத்திப் பொருள் மதிப்பில் 30 சதவீதத்தை இந்தியாவின் சிறுதொழிற்கூடங்களில் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இருந்ததால் பலரும் ஆர்வம் காட்டவில்லை.

தற்போது அந்த நிபந்தனை மூன்று ஆண்டுகளுக்கு வலியுறுத்தப்படாது என்று தளர்த்தப்பட்டுள்ளது. அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, மொத்தத்தில் 30% கொள்முதல் செய்திருந்தால் போதும் என்றும் தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது, நான்காம் ஆண்டு முதல் 10% அல்லது 15% என்று உள்நாட்டு கொள்முதலை மெல்லத் தொடங்கலாம். இத்தகைய சலுகைகள் நிச்சயமாக ஆப்பிள், லீஎகோ போன்ற கணினித் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக இங்கேயே உற்பத்தி செய்து மற்றும் கடை விரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும். இதனால் ஆப்பிள், லிஎகோ நிறுவனங்களின் கணினி, செல்லிடப்பேசி விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால், வேலைவாய்ப்புக்கு எந்த அளவுக்கு வாய்ப்பிருக்கும் என்பது தெரியவில்லை.

விமானம், தனிஇலச்சினை பொருள்கள், பாதுகாப்புத் துறை இவற்றுக்கு 100% அன்னிய முதலீட்டை திறந்துவிட்டதால் நமக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவிடாது என்பது உண்மையே. ஆனால், மருந்து தயாரிப்பில் 100% முதலீட்டுக்கு வழி திறந்திருப்பது எத்தகைய விளைவுகளைத் தரும் என்பதை தற்போதைக்கு தீர்மானிப்பதற்கில்லை.

ஏற்கெனவே உள்ள நிறுவனங்களில் (பிரவுன்ஃபீல்டு புராஜக்ட்) 74% வரை அரசு அனுமதிக்கு காத்திராமல் நேரடியாக முதலீடு செய்ய முடியும். அதற்கு மேற்பட்ட முதலீட்டுக்கு மட்டுமே அரசின் அனுமதி தேவை. ஏற்கெனவே, நமது இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களை வசப்படுத்திக்கொண்டு ஆதிக்கம் செலுத்தும் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது, பாலும் தெளிதேனும், பாகும் பருப்பும் கலந்து கொடுத்ததைப் போன்றது; கபளீகரம் செய்துவிடுவார்கள்.

இந்தியர்களின் கடின உழைப்பும் அற்ப சேமிப்பும் கொள்ளையடிக்கப்படும் இரு நிலைகள்: கல்வி, மருத்துவம். இரண்டிலும் கட்டுப்பாடு இல்லாத நிலை தொடருமானால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எத்தனை விழுக்காடு உயர்ந்தால்தான் என்ன? அன்னிய முதலீடு தேவைதான். ஆனால், கட்டுப்பாடும், கண்காணிப்பும் இல்லாத அன்னிய முதலீடு என்பது ஆபத்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com