கரையான் புற்றாகும் காங்கிரஸ்!

காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கும் பெரிய மாநிலம் என்று எடுத்துக் கொண்டால் அது கர்நாடகம் மட்டுமே. சமீபத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, தனது அமைச்சரவையிலிருந்து 14 அமைச்சர்களை நீக்கிவிட்டு புதிதாக 13 அமைச்சர்களை நியமித்தார்.
Updated on
2 min read

காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கும் பெரிய மாநிலம் என்று எடுத்துக் கொண்டால் அது கர்நாடகம் மட்டுமே. சமீபத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, தனது அமைச்சரவையிலிருந்து 14 அமைச்சர்களை நீக்கிவிட்டு புதிதாக 13 அமைச்சர்களை நியமித்தார். அது மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கி, பல சட்டப் பேரவை உறுப்பினர்களும், முக்கியமான தலைவர்களும் அவரது தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது.

சாதாரணமாக அமைச்சரவை மாற்றத்தில் அதிருப்தி ஏற்படும்போது, காங்கிரஸ் தலைவர்களும், சட்டப் பேரவை உறுப்பினர்களும், பதவி பறிபோன அமைச்சர்களும் தில்லிக்கு விரைவதும், காங்கிரஸ் தலைமையிடம் முறையிடுவதும்தான் வழக்கம். ஆனால், இந்த முறை கர்நாடகத்தில் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள் என்பது மட்டுமல்ல, சில நகரங்களில் பொதுச் சொத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் அதிருப்தியாளர்கள் தயங்கவில்லை.

சில நாள்களுக்கு முன்னர், சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வரும், முக்கியமான காங்கிரஸ் தலைவருமான அஜீத் ஜோகி "காங்கிரஸ் அஸ்தமனத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது' என்று வெளிப்படையாக அறிவித்ததுடன் தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும் தெரிவித்தார். காங்கிரஸில் பிளவு ஏற்படுமானால் ஆந்திரம், மேற்கு வங்கம் போல, சத்தீஸ்கரையும் காங்கிரஸ் நிரந்தரமாக மறந்துவிட வேண்டியதுதான்.

சிறிய வட கிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்

தில் காங்கிரஸ் தனது ஆட்சியை இழந்துவிட்டது. உத்தரகண்ட் மாநிலத்தில் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசு அதிருப்தியாளர்களால் சிக்கலை எதிர்கொள்ள நேர்ந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில், ஹரியாணாவில் காங்கிரஸ் பேரவை உறுப்பினர்கள், கட்சிக் கட்டுப்பாட்டை சற்றும் சட்டை செய்யாத நிலைமையைப் பார்க்க முடிந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியிலான பலவீனமும், கட்சித் தலைமையின் கட்டுப்பாடு தளர்ந்து விட்டிருப்பதும்தான் காரணம்.

கடந்த மே, 2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த சட்டப் பேரவைத் தேர்தல்களில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத் தவிர, காங்கிரஸால் எந்தவொரு பெரிய மாநிலத்திலும் வெற்றி பெற முடியவில்லை. தான் ஆட்சியிலிருந்த மகாராஷ்டிரம், ஹரியாணா, அஸ்ஸாம், கேரளம் போன்ற மாநிலங்களில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும் முடியவில்லை. பிகாரில் நிதீஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் கூட்டணியில் இணைந்து கொண்டதால்தான் காங்கிரஸ் சில இடங்களில் வெற்றி பெற முடிந்தது என்பதால் அதைப் பெரிய சாதனையாக எடுத்துக் கொள்ள முடியாது.

சத்தீஸ்கரில் அஜீத் ஜோகி, அஸ்ஸாமில் ஹிமந்த பிஸ்வ சர்மா, உத்தரகண்டில் விஜய் பகுகுணா என்று ஒருவர் பின் ஒருவராக மாநிலத் தலைவர்கள் பலர் கட்சித் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது என்பது தொற்றுநோய்ப்போலப் பரவிக் கொண்டிருக்கிறது. மாநிலத் தலைமைகள் பலவீனப்பட்டுக் கொண்டுவரும் நிலையில், மத்தியத் தலைமை எத்தனை நாள்களுக்குக் கட்சியை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள முடியும் என்கிற கேள்வி கட்சியின் அடுத்தக் கட்டத் தலைவர்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் எழும்பியிருக்கிறது.

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி படுகொலைகளும் அதனைத் தொடர்ந்து எழுந்த அனுதாப அலையும் இல்லாமல் போயிருந்தால், காங்கிரஸ் இப்போது சந்திக்கும் நிலைமையை 15 ஆண்டு

களுக்கு முன்பே எதிர்கொண்டிருக்கும். 2004-இல் தி.மு.க.வுடன் ஏற்பட்ட கூட்டணி காங்கிரஸுக்கு மறுவாழ்வு கொடுத்து, அடுத்த 10 ஆண்டுகள் ஆட்சியில் தொடர வழிகோலியது.

இந்த இடைப்பட்ட காலத்தில் கட்சித் தலைமையும், நிர்வாகத் தலைமையும் வேறுவேறாக இருந்தும்கூட, சோனியா காந்தியின் தலைமையில் கட்சியின் அடிமட்ட அமைப்புகள் பலப்படுத்தப்

படாமல் போனதன் விளைவைத்தான் இப்போது காங்கிரஸ் எதிர்கொள்கிறது.

மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியும் அதன் தலைவர்களுக்குத் தனிப்பட்ட செல்வாக்கும் ஏற்படும்போது, காங்கிரஸ் தனது முக்கியத்துவத்தை இழந்துவிடுகிறது. இதுதான் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா, மேற்கு வங்கம், பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் பலவீனப்பட்டதற்குக் காரணம்.

தனது மாநிலத் தலைவர்கள் வளர்ச்சி அடைவதை சந்தேகக் கண்ணுடன் பார்த்த காங்கிரஸ் தலைமை, எல்லா மாநிலங்களிலும் கோஷ்டியை உருவாக்கி, அந்த கோஷ்டி மோதல்கள் மூலம் தனது தேசியத் தலைமையைப் பாதுகாத்து வருகிறது. குறுகியகால பலனை அளித்த இந்தப் பிரித்தாளும் அரசியல் ராஜதந்திரம் இப்போது எதிர்வினையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

"தில்லி மாநகராட்சிக்கு நடந்த இடைத் தேர்தலில் சில இடங்

களில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, அந்த வெற்றிக்குக் காங்

கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திதான் காரணம் என்று சொல்லும்போது, அஸ்ஸாமிலும், மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும், தமிழகத்திலும் சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்

பாளர்கள் படுதோல்வி அடைந்ததற்கு அவர் காரணமில்லை என்று சொன்னால் எப்படி?' என்கிற கேள்வியை பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் எழுப்பவில்லை, காங்கிரஸில் அதிருப்தியாளர்களே எழுப்புகிறார்கள்.

காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனைக்கு உள்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதிலும், கட்சி அதிரடி மாற்றங்களுக்குத் தயாராகாவிட்டால், அதற்கு வருங்காலம் கிடையாது என்பதிலும் சந்தேகமில்லை. திக்விஜய் சிங் போன்ற மூத்த தலைவர்கள், காங்கிரஸுக்கு உடனடி அறுவை சிகிச்சை நடத்தப்பட வேண்டும் என்றும், கேப்டன் அமரீந்தர் சிங் உள்ளிட்டவர்கள் ராகுல் காந்தி தலைமை ஏற்க வேண்டும் என்றும், இன்னும் சிலர் பிரியங்கா வதேரா கட்சியைத் தலைமையேற்று நடத்த வேண்டும் என்றும் ஆளாளுக்கு ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள்.

அந்த மாற்றம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களை முறைப்படுத்தி, முறையாகத் தேர்தல் நடத்தி, கட்சித் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை மாவட்டங்களிலும், மாநிலங்களிலும், தேசிய அளவிலும் ஏற்பட்டால் மட்டுமே, காங்கிரஸின் வருங்காலம் உறுதி செய்யப்படும். ஒருவேளை அதனால் நேரு குடும்பத் தலைமை அகற்றப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ள இன்றைய தலைமை துணியாவிட்டால் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், பிரியங்கா வதேராவும் வலம் வருவார்களே தவிர, காங்கிரஸ் பலமான கட்சியாக தொடர முடியாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com