வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தவறொன்றுமில்லை!

ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு சந்தாதாரர் தனது தொகுப்பு நிதியிலிருந்து பணத்தை எடுக்கும்போது, 60% தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என்று நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் அறிவிப்புக்குப் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளுடன், தொழிற்சங்கங்களும் எதிர்களத்தில் இறங்கியிருக்கின்றன.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:41 pm

ஆசிரியர்

ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு சந்தாதாரர் தனது தொகுப்பு நிதியிலிருந்து பணத்தை எடுக்கும்போது, 60% தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என்று நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் அறிவிப்புக்குப் பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளுடன், தொழிற்சங்கங்களும் எதிர்களத்தில் இறங்கியிருக்கின்றன.
 இந்தத் திட்டம் 2016, ஏப்ரல் 1-ஆம் தேதி முதலாக, ஓய்வூதியத் திட்டத்தில் செலுத்தும் சந்தாத் தொகையிலிருந்து தொடங்குகிறது என்பதும், இந்த வரிவிதிப்பும்கூட தொகுப்பு நிதிக்கு கிடைத்துள்ள வட்டித் தொகை மீதான வரி என்பதை நிதித் துறை அமைச்சகம் விளக்கம் அளித்தும்கூட, இன்னும் பலருக்குத் திருப்தி ஏற்படவில்லை.
 நிதியமைச்சர் இத்தகைய முடிவை எடுக்க என்ன காரணம்? ஓய்வூதியத் தொகுப்பு நிதியிலிருந்து எடுக்கப்படுகிற, அதாவது அரசின் வரிவிலக்கு சலுகையை மறைமுகமாக பயன்படுத்திக்கொள்கிற, பணமதிப்பு எவ்வளவு என்பதைப் பற்றியெல்லாம் யாரும் கேட்கவில்லை. எல்லாருடைய கேள்வியும் ஒன்றாகவே இருக்கிறது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலக (இ.பி.எ.ப்.ஓ.) ஓய்வூதியத் திட்டத்தில், இதுநாள் வரை எல்லாமும் (சேமிப்பு, ஓய்வூதியம், பணம் எடுத்தல் ஆகிய மூன்றுமே) வரிவிலக்கு பெற்றிருந்த நிலைமையில் ஏன் மாற்றம் கொண்டு வருகிறீர்கள் என்பதுதான்.
 இன்று ஓய்வூதியத் திட்டங்களை அரசு நிறுவனமாகிய இ.பி.எப்.ஓ. மட்டுமே வழங்கவில்லை என்பதையும், இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட வங்கித் துறை நிறுவனங்கள் இத்தகைய தேசிய ஓய்வூதியத் திட்டத்தை (என்.பி.எஸ்.) வழங்குகின்றன என்பதையும் நாம் கவனித்தாக வேண்டும்.
 இந்த நிறுவனங்கள் தங்கள் வணிகத்தைப் பெருக்க, அனைத்து பெருநிறுவன ஊழியர்களையும் தங்களது ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கின்றன. இதன் ஊழியர்கள் அரசு ஊழியர்கள் போல அல்லாமல், குறைந்தபட்சம் ரூ.50,000 வரை சம்பளம் பெறுகிறவர்கள் என்பது, இன்றைய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்குப் புரியும். மேலும், களத்தில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் ஓய்வூதியத் திட்டங்கள் இருப்பதால் ஒவ்வொரு நிறுவனமும் ஒருவிதமான சலுகையை அறிவித்து, சந்தாதாரர்களை அல்லது பெருநிறுவனங்களைக் கவர்கின்றன.
 அத்துடன், ஓய்வூதிய சந்தாத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு தனியார் ஓய்வூதிய திட்டம் அளிப்போரால் சட்டப்படி இயலும். இவர்கள் தங்கள் முதலீட்டை சந்தைக்கு ஏற்ப முதலீடு செய்து பெருக்கிக் கொள்கிறார்கள். முதலீட்டின் பெருக்கத்துக்கு ஏற்ப, ஒரு சிறு தொகையை சந்தாதாரருக்கும் இவர்களால் அளிக்க முடிகிறது.
 ஆனால், இதையெல்லாம் இ.பி.எப்.ஓ. செய்ய முடியாது. வருங்கால வைப்புநிதி அலுவலகம் தனது நிதியில் 5 முதல் 15% வரை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என்று அரசு அனுமதித்த போதிலும்கூட, தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக அதையும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். இவர்களது முதலீடு என்பது பொதுத்துறை நிறுவனங்களுக்கு அளிக்கும் குறைந்த வட்டிக்கான கடன் மட்டுமே!
 தனியார் நிறுவன ஓய்வூதியத் திட்டங்களில் இடம்பெற்றுள்ள சந்தாதாரர்களுக்கும் சேமிப்பு, வட்டித்தொகை, பணம் எடுத்தல் ஆகிய மூன்று கட்டங்களிலும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? ஓய்வூதியத் திட்டத்தில் இவர்கள் செலுத்தும் அதிக அளவு சந்தாத்தொகைக்கு ஒவ்வோர் ஆண்டும் வருமான வரி விலக்கும் பெறுகிறவர்கள், திட்டத்தின் முடிவில் எடுக்கும் தொகைக்கு, அதுவும் வட்டித் தொகையின் மீதான வரியைச் செலுத்த ஏன் இந்த அளவுக்கு எதிர்ப்பு?
 இந்த எதிர்ப்பு நியாயமானதாக இருந்தால், தற்போது வங்கிகளில் சேமிப்புப் பத்திரம், வைப்பு நிதி (பிக்ஸட் டெபாசிட்) வாங்கும் அனைவருக்கும் இதே நியாயத்தை வழங்க வேண்டும் அல்லவா? அதாவது, இந்த சேமிப்புத் தொகையின் மீதான வட்டித் தொகைக்கு வரிப்பிடித்தம் செய்யக்கூடாது அல்லவா? ஆனால், நடைமுறையில் என்ன நடக்கிறது?
 வருமான வரித் துறைக்கு கணக்கு காட்டுவதால் என் சேமிப்புக்கான வட்டித் தொகையில் வரிப் பிடித்தம் செய்யாதீர்கள் என்று படிவம் 15எச் ஒவ்வோர் ஆண்டும் வாடிக்கையாளர் வழங்கும் நிலை உள்ளதே! இந்த படிவத்தைத் தராவிடில், வங்கியே இந்த வட்டித் தொகை மீதான வரியைப் பிடித்தம் செய்து விடுகிறதே!
 ஓய்வூதியத் திட்டத்தில் நாம் செலுத்தும் சந்தாத் தொகையும் தொடர் சேமிப்புக்கு (ரெகரிங் டெபாஸிட்) நிகரானது. ஓய்வூதியத் திட்டத்தின் தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுக்கும்போது, அதற்கான வட்டிக்கு வரிப் பிடித்தம் கூடாது என்பது நியாயமான வாதம் என்றால், இந்தியாவில் எந்தவொரு வைப்புநிதி (பிக்ஸட் டெபாசிட்) திட்டத்தில் கிடைக்கும் வட்டித் தொகைக்கும் வரி விதிக்கக்கூடாது.
 நிதியமைச்சர் அறிவித்திருக்கும் வரிவிதிப்பு, 2016 ஏப்ரல் 1-ஆம் தேதி முதலாக ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு மட்டுமே. இன்னும் பத்து ஆண்டுகளில் தனியார் நிறுவனங்கள், பெருநிறுவனங்களின் ஊழியர்கள் எத்தனை ஆயிரம் பேர் தனியார் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்பதையும், அவர்கள் செலுத்தக்கூடிய அபரிமிதமான சந்தாத்தொகை அளவையும், இதற்காகப் பெறும் வருமான வரிவிலக்கையும் கணக்கிடுவோமேயானால், பெரும் சம்பளக்காரர்கள் மறைமுகமாக வரிவிலக்கு பெறும் தொகை மிக அதிகமாக இருக்கப்போகிறது என்பதை கணிக்கலாம்.
 பின்னணியும் விவரமும் தெரியாமல் எதிர்க்கிறார்கள் என்பதும், மோடி அரசு எதைச் செய்தாலும் எதிர்ப்பது என்பதும் வேதனையளிக்கிறது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.