ஆடம்பரத்தால் வந்த தொல்லை!

அதிக விளம்பரம், அதிக விற்பனை என்பது வணிகப் பொருள்களுக்கு சரியாக இருக்கலாம். ஆனால், ஆன்மிகத்துக்கு அதிக விளம்பரம் என்பது அதிக சிக்கல்களைத்தான் கொண்டு வந்து சேர்க்கும். வாழும் கலை (ஆர்ட் ஆஃப் லிவிங்) அமைப்பினர் திட்டமிட்டிருந்த ஓர் ஆன்மிக கலாசார மாநாடு தற்போது நீதிமன்ற வழக்கினால் எதிர்பாராத சிக்கல்களைச் சந்திக்க நேர்ந்துள்ளது
Updated on
2 min read

அதிக விளம்பரம், அதிக விற்பனை என்பது வணிகப் பொருள்களுக்கு சரியாக இருக்கலாம். ஆனால், ஆன்மிகத்துக்கு அதிக விளம்பரம் என்பது அதிக சிக்கல்களைத்தான் கொண்டு வந்து சேர்க்கும். வாழும் கலை (ஆர்ட் ஆஃப் லிவிங்) அமைப்பினர் திட்டமிட்டிருந்த ஓர் ஆன்மிக கலாசார மாநாடு தற்போது நீதிமன்ற வழக்கினால் எதிர்பாராத சிக்கல்களைச் சந்திக்க நேர்ந்துள்ளது. இப்போது இந்த ஆன்மிக மாநாட்டை ரூ.5 கோடி அபராதம் செலுத்தி நடத்திக் கொள்ளலாம் என்று பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.
 இருப்பினும், மூன்று நாள் ஆன்மிக மாநாடு யமுனை நதிக்கு மாபெரும் சூழல் பாதிப்பை, "மீட்கவியலாத இழப்பை' உருவாக்கிவிடும் என்று வழக்குத் தொடுக்கப்பட்டிருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது. ஏனென்றால், யமுனை நதி தினமும் படுமோசமான பாதிப்புக்கும், மீட்கவியலாத இழப்புக்கும் ஆளாகிக் கொண்டிருக்கும் இடம் தில்லி பெருநகரம். தில்லியின் ஊடாக சுமார் 20 கி.மீ. தொலைவு கடந்து செல்லும் யமுனை நதி, அதன் பாதையில் வேறு எந்த இடத்திலும் இல்லாத அளவுக்கு மாசடைகிறது.
 கடந்த பத்து ஆண்டுகளாக தொழில்துறைக் கழிவுகளால் யமுனை படுமோசமாக மாசுபட்டுக்கொண்டிருக்கிறது. யமுனையில் கலக்கும் தொழில்துறைக் கழிவுகளின் அளவு, மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதிக்கும் அளவைக் காட்டிலும் 13 மடங்கு அதிகமாக இருக்கிறது. தில்லியின் புறநகர் பகுதிக்குள் நுழையும் யமுனை நதியின் நீரில் ஒரு லிட்டரில் 7.5 மில்லி கிராம் ஆக்ஸிஜன் உள்ளது. ஆனால், தில்லியை விட்டு வெளியேறும்போது ஒரு லிட்டரில் 1.3 மில்லி கிராம் ஆக்ஸிஜன் மட்டுமே இருக்கிறது. தில்லியை விட்டு வெளியேறிய பிறகு அதில் கலக்கும் கிளை நதிகளால்தான் யமுனை கொஞ்சம் மூச்சுவிட முடிகிறது.
 தில்லியில் உள்ள வீடுகளில் 55% முதல் 60% மட்டுமே புதைச் சாக்கடைத் திட்டத்தில் உள்ளன. இவையும் முழுமையாக சுத்திகரிக்கப்படவில்லை என்கிற புகார் ஒருபுறம் இருக்க, தில்லி நகருக்குள்ளிருந்து புறப்படும் 18 வாய்க்கால்கள் மூலம் வெளியேறும் கழிவுநீர் யமுனையில்தான் கலக்கிறது. இந்தக் கழிவுநீர்க் கலப்பால் யமுனை மாசுபடுவதைத் தடுக்க இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 இவ்வளவு களேபரம் கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், ஒரு மூன்று நாள் ஆன்மிக மாநாட்டினால் யமுனையே பாழ்படும், மீட்கவியலாத இழப்பை யமுனை சந்திக்கும், வெள்ளப்படுகையில் வரக்கூடிய பறவைகள் வேறு இடமின்றி திண்டாடும் என்பதெல்லாம் உண்மையான அக்கறையால் எழுந்த கவலையாகவே இருந்தாலும்கூட, ஒரு சாதாரண மனிதனின் பார்வையில், இத்தனை அக்கிரமங்களையும் இத்தனை ஆண்டுகளாக யமுனை தாங்கிக்கொண்டிருக்கிறாள் என்கிறபோது, இந்த மூன்று நாளில் எத்தகைய கேட்டினை இவர்கள் உருவாக்கிவிடப்போகிறார்கள்? என்கிற கேள்வி எழாமல் இல்லை.
 பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட தீர்ப்பு ஒன்றில், யமுனை நதியின் வெள்ளப்படுகையில் நிலையான கட்டடங்களை உருவாக்குதல் கூடாது என்றும், கட்டடக் கழிவுகள், குப்பைகளை இங்கே கொட்டினால் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தீர்ப்பு அளித்திருந்தது. அந்தத் தீர்ப்பை சுட்டிக் காட்டித்தான், சுற்றுச்சூழல் ஆர்வலர் மனோஜ் மிஸ்ரா என்பவர் வாழும் கலை அமைப்பு நடத்த இருக்கும் ஆன்மிக, கலாசார மாநாட்டுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார்.
 இந்த மாநாடு நடத்துவதற்காக அனுமதி அளித்துள்ள தில்லி மாநகர வளர்ச்சி ஆணையம் (டி.டி.எ.) பசுமைத் தீர்ப்பாயத்தில் பதில் அளித்தபோது, "தீர்ப்பாயம் அறிவித்த உத்தரவை வார்த்தைக்கு வார்த்தை கவனமாகப் படித்து, நிபந்தனைகளுடன், நிரந்தரக் கட்டுமானம் இல்லாத வகையில் அனுமதி அளித்துள்ளோம். குப்பைகள் கொட்டப்பட்டிருப்பதாக தீர்ப்பாயத்தால் காட்டப்பட்ட நிழற்படங்கள், தற்போது மாநாடு நடக்கும் யமுனை வெள்ளப்படுகை அல்ல' என்று கூறியுள்ளனர். வாழும் கலை அமைப்பும், இந்த மாநாட்டுக்கு அமைக்கப்படும் மேடையில் மூங்கில்கள், மரப்பலகைகள் தவிர வேறு நிரந்தரக் கட்டுமானப் பொருள்களோ, வேதிப்பொருள்களோ பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
 ""ஏன் இவ்வளவு தாமதமாக மனு தாக்கல் செய்கிறீர்கள்? ஏன் முன்னதாகவே செய்யவில்லை?'' என்று பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியிருக்கிறது. பல கோடி ரூபாய் செலவில் தாற்காலிக மேடைகள் பெரிய அளவில் அமைக்கப்பட்டு, மார்ச் 11 முதல் மூன்று நாள்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலரும் பங்கேற்க வந்துவிட்ட நிலையில் தடை விதிக்காமல் இந்த மாநாட்டை அபராதத்துடன் நடத்த பசுமைத் தீர்ப்பாயம் அனுமதித்துள்ளது. வாழும் கலை அமைப்புக்கு சில நிபந்தனைகளையும், தில்லி மாநகர வளர்ச்சி ஆணையம் தனது கடமையைச் சரியாக செய்யாததற்கு ரூ.5 லட்சம் அபராதமும், தில்லி மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்திருக்கிறது.
 வாழும் கலை அமைப்பு தனது 35-ஆவது ஆண்டு விழாவை உலக கலாசார விழாவாக நடத்த முற்பட்டதில் தவறு இல்லை. ஆனால், இந்த மாநாட்டுக்கு 35 லட்சம் பேர் வருவார்கள் என்று தம்பட்டம் அடித்ததும், குடியரசுத் தலைவர், பிரதமர், பல்வேறு மத்திய - மாநில அமைச்சர்கள் வருவார்கள் என்று விளம்பரப்படுத்தி, தில்லியின் பல பகுதிகளிலும் பெரிய பிளக்ஸ் பேனர்கள் வைத்ததும்தான், பிரச்னை இவர்களின் வீட்டுக் கதவை தட்டியது. பிரச்னைக்கு காரணம் சூழல் மாசு அல்ல; ஆடம்பரத்தால் வந்த தொல்லை!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com