நட்புறவும் தேசநலனும்!

மாறிவிட்ட பொருளாதாரத்தை மையப்படுத்திய சர்வதேசச் சூழலில், வளர்ச்சியடைந்த நாடுகளுடனான நட்புறவு இல்லாமல் எந்தவொரு நாடும் முன்னேற முடியாது. அதேநேரத்தில், பிற நாடுகளுடனான நட்புறவு நமது நாட்டையோ, மக்களையோ பாதித்து விடாமல் பாதுகாப்பது மிகவும் இன்றியமையாதது.
Updated on
2 min read

மாறிவிட்ட பொருளாதாரத்தை மையப்படுத்திய சர்வதேசச் சூழலில், வளர்ச்சியடைந்த நாடுகளுடனான நட்புறவு இல்லாமல் எந்தவொரு நாடும் முன்னேற முடியாது. அதேநேரத்தில், பிற நாடுகளுடனான நட்புறவு நமது நாட்டையோ, மக்களையோ பாதித்து விடாமல் பாதுகாப்பது மிகவும் இன்றியமையாதது.
 நரேந்திர மோடி அரசு பதவி ஏற்றது முதல், அன்னிய நாடுகளுடன் குறிப்பாக, வல்லரசு நாடுகளுடனான இந்தியாவின் உறவு கணிசமாக வலுப் பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு என்பதைக் கடந்து தனிப்பட்ட நிலையிலும் பிற நாட்டுத் தலைவர்களுடன் நெருக்கமான நட்புப் பாராட்டுகிறார் பிரதமர் என்பது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய முன்னேற்றம். ஆனால், நெருக்கமான உறவு பாராட்டுவதற்காக தேசத்தின் நலன் சில பிரச்னைகளில் பின்னுக்குத் தள்ளப்படுகிறதோ என்கிற ஐயப்பாட்டை எழுப்புகிறது, சமீபத்திய ஒன்றிரண்டு முடிவுகள்.
 இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் சமீபத்தில் எடுத்திருக்கும் ஒரு முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ஜப்பான் நாட்டில் புகுஷிமா என்கிற இடத்தில் கடலுக்குள் ஏற்பட்ட பூகம்ப அதிர்ச்சியால் உருவான ஆழிப்பேரலையும், அதைத் தொடர்ந்து புகுஷிமா டைச்சி அணு மின்உலை விபத்தும் ஐந்து ஆண்டுகள் கடந்தும், இப்போதும்கூட நம்மை பீதியில் உறைய வைக்கின்றன. அந்த மின்உலை விபத்தைத் தொடர்ந்து, 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம் பிறப்பித்த ஓர் உத்தரவு திரும்பப் பெறப்பட்டிருப்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் அந்த முடிவு.
 புகுஷிமா டைச்சி அணு உலை விபத்தைத் தொடர்ந்து, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்கள் அனைத்தும் சோதனைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்துமே ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்களில் அணுக் கசிவின் தாக்கம் இருக்கிறதா என்பதை சோதனை செய்வதை வழக்கமாக்கி இருக்கின்றன.
 2011-இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் கோர தாண்டவத்தால் புகுஷிமா டைச்சி அணுமின் நிலையத்திலுள்ள அணு உலைகள் கசிந்து, கடல் நீரில் கலந்து, ஊருக்குள் பாதிப்பை ஏற்படுத்தின. அதுமுதல் ஐயோடின் - 131, கேசியம் 134/137 உள்ளிட்ட கதிர்வீச்சு ஐசோடோப்புகள் சிறிய அளவில் உலகின் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டன.
 குறிப்பாக, கேசியம் 134/137 என்கிற கதிர்வீச்சு ஐசோடோப்பின் உயிர்ப்புத் தன்மை குறைந்தது 30 ஆண்டுகளுக்காவது இருக்கும். அதற்குப் பிறகுதான் அவை வீரியம் இழக்கும். இந்தக் கதிர்வீச்சுடன் கூடிய துகள்கள் மனித உடலில் புகுந்து விடுமேயானால், மனித உடலில் உள்ள திசுக்களைப் பெரிய அளவில் பாதிக்கும். இதனால், புற்றுநோய் உள்ளிட்ட பல மரணத்துக்கு உரிமம் வழங்கும் நோய்களின் பாதிப்பு ஏற்படலாம்.
 இப்படிப்பட்ட பின்னணியில்தான் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆணையம், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்கள் மீதான அணு எச்ச சோதனையைக் கைவிட்டிருக்கிறது. இதுகுறித்த முடிவை மத்திய நிதியமைச்சகத்தின் சுங்க இலாகா ஆணையம், மத்திய சுகாதார அமைச்சகம், மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர்கள் ஆகியவற்றிற்கு கடிதம் எழுதித் தெரிவித்திருக்கிறது.
 இந்த முடிவு குறித்து விளக்கம் அளித்திருக்கும் இந்திய உணவுப் பாதுகாப்பு ஆணையர் பவன்குமார் அகர்வால், கடந்த ஐந்து ஆண்டுகளில் நடத்தப்பட்ட கடுமையான சோதனைகளில் இதுவரை எந்தவொரு பாதிப்பும் காணப்படாத நிலையில், முந்தைய முடிவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவிக்கிறார். இதுகுறித்து இனிமேலும் சந்தேகிப்பதும், கவலைப்படுவதும் இறக்குமதிகளைத் தேவையில்லாமல் பாதிக்கும் என்பது அரசுத் தரப்பு விளக்கம்.
 பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் இந்திய ஜப்பானிய உறவு மிகவும் நெருக்கமானதாக மாறியிருப்பது உண்மை. அடுத்த 20 ஆண்டுகளுக்கு பல்வேறு துறைகளில் ஜப்பான் முதலீடு செய்யக் காத்திருக்கிறது. 2014-15 நிதியாண்டில், இரு நாடுகளுக்கு இடையேயான வணிகம் 15.51 பில்லியன் டாலர் (ரூ.1,02,366 கோடி). இதில் ஜப்பானிலிருந்தான உணவு இறக்குமதி வெறும் 65 லட்சம் டாலர் (ரூ.43.55 கோடி) மட்டுமே என்பதுதான் அரசுத் தரப்பு வாதம்.
 இறக்குமதி செய்யப்படும் உணவின் பொருளாதார மதிப்பும், அளவும் குறைவாக இருக்கலாம். ஆனால், அதில் ஒரு சிறிய துகள் அணுக் கசிவு ஒட்டிக் கொண்டிருந்தால், அது ஏற்படுத்தப்போகும் ஆபத்து அளப்பரியது என்பதுதான் இந்த முடிவு குறித்து எழுப்பப்படும் அச்சத்திற்கான காரணம். இப்போதும் அமெரிக்கா, ஜெர்மனி, ரஷியா உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் ஜப்பானிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருள்களைக் கடுமையான சோதனைக்குப் பிறகு அனுமதிக்கும்போது, இந்தியா மட்டும் ஏன் அவசரப்பட்டு இப்படியொரு முடிவை எடுக்க வேண்டும் என்பது புரியவில்லை.
 ஜப்பானிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் உணவுப் பொருள்களை ஏனைய நாடுகளிலிருந்தும் நாம் பெற முடியும் எனும்போது, கட்டுப்பாடோ சோதனையோ இல்லாமல் ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்வானேன்? நட்புக்குக் கை கொடுக்க வேண்டியது அவசியம்தான். அதற்காக, நமது குடிமக்களின் நலன் பாதுகாக்கப்படாமல் போனால், அது ஏற்புடையதல்ல!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com