ஆட்சி மாற்றமல்ல, காட்சி மாற்றம்!

ஜம்மு - காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி - பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணி அரசு அமைவதற்கான சூழல் உருவாகி இருக்கிறது. முரண்டு பிடித்து
Updated on
2 min read

ஜம்மு - காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு மெஹபூபா முஃப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி - பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணி அரசு அமைவதற்கான சூழல் உருவாகி இருக்கிறது. முரண்டு பிடித்து, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்த மெஹபூபா முஃப்தி தனது பிடிவாதத்தைக் கைவிட்டு இறங்கி வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் காஷ்மீர் முதல்வராக இருந்த மெஹபூபா முஃப்தியின் தந்தை முஃப்தி முகமது சயீது மரணமடைந்தபோது, எதிர்பார்ப்புக்கு விரோதமாக மெஹபூபா முஃப்தி தந்தையின் இடத்தை நிரப்ப முன்வரவில்லை. துக்கம் அனுசரிக்கிறார் என்று பார்த்தால், அது உண்மையில் காலம் கடத்தும் அரசியல் ராஜதந்திரம் என்பது பின்புதான் தெரிந்தது.

முஃப்தி முகமது சயீது, பா.ஜ.க.விடம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பா.ஜ.க.வுக்குத் துணை முதல்வர் பதவி அளிப்பது தொடர்பான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதுதான், கூட்டணியைத் தொடர்வதற்கு மெஹபூபா முஃப்தி முன்வைத்த முதல் நிபந்தனை. 2014-இல் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்குக் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்பதில் தொடங்கி, பா.ஜ.க.வால் ஏற்றுக் கொள்ள முடியாத புதிய பல எதிர்பார்ப்புகளையும் முன் வைத்தார் அவர்.

2014-இல் ஜம்மு - காஷ்மீர மக்கள் அளித்த தீர்ப்பின்படி, பா.ஜ.க.வும், ம.ஜ.க.வும் கூட்டணி அமைத்தாக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஜம்மு பகுதியில் பா.ஜ.க.வும், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் ம.ஜ.க.வும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. அவரவர் செல்வாக்குள்ள பகுதிகளைத் தவிர, அதற்கு வெளியே அந்தக் கட்சிகளால் ஓர் இடம்கூடப் பெற முடியவில்லை. பா.ஜ.க.வின் 25 இடங்களும், ம.ஜ.க.வின் 28 இடங்களும் அந்தக் கூட்டணிக்கு 87 இடங்கள் கொண்ட ஜம்மு - காஷ்மீர் சட்டப் பேரவையில் பெரும்பான்மையைத் தந்தன. அதுமட்டுமல்ல, அந்த அரசு ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு என்கிற இரண்டு பகுதிகளையும் ஆட்சியில் பிரதிபலிப்பதாகவும் இருந்தது.

இதெல்லாம் இருந்தாலும் பா.ஜ.க.விடம் கூட்டணி அமைத்ததில் மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு செல்வாக்குச் சரிவு ஏற்படத் தொடங்கி இருந்தது. அதனால், முதல்வர் பதவியை உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல் தள்ளிப் போடுவதன் மூலம், காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் மத்தியில் மெஹபூபா முஃப்தி பதவிக்காக பா.ஜ.க.விடம் அடிபணியவில்லை என்கிற தோற்றத்தை ஏற்படுத்த ம.ஜ.க. நினைத்தது. அதுமட்டுமல்லாமல், சில நிபந்தனைகளை விதிப்பதன் மூலம், மத்திய அரசிடம் கூடுதலான நிதியுதவி பெறுவதும் மெஹபூபா முஃப்தியின் திட்டமாக இருந்திருக்கக்கூடும்.

மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு சில தர்மசங்கடங்கள் உண்டு. பா.ஜ.க.விடம் சில அரசியல் லாபங்களைப் பெறாமல் கூட்டணி அமைத்தால், அது காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் அந்தக் கட்சிக்கு செல்வாக்குச் சரிவை ஏற்படுத்தும். பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்காமல் போனாலோ, அதுவே தனது எதிரியான ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு சாதகமாகிவிடும். இந்தச் சூழலில், கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடிவுக்குக் கொண்டுவராமல் தள்ளிப்போட்டுக் கடைசியில் ஏற்றுக் கொள்வது என்று ம.ஜ.க. திட்டமிட்டது.

இப்போது தனது மௌனத்தைக் கலைத்து, பிடிவாதத்தைத் தளர்த்தி மெஹபூபா முஃப்தி பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சி அமைக்கத் தயாராகியிருக்கிறார். தில்லியில் அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசி எந்தவித புதிய உத்தரவாதமும் பெறாமல்தான் ஸ்ரீநகர் திரும்பி இருக்கிறார். ஆனாலும்கூட, மாநிலத்தின் உரிமைக்காக மத்திய அரசுடன் போராடுகிறார் என்கிற எதிர்பார்ப்பை கடந்த இரண்டு மாத இடைவெளி மூலம் மெஹபூபா ஏற்படுத்தி இருக்கிறார்.

பா.ஜ.க.வுக்கும், ம.ஜ.க.வுக்கும் இடையே உள்ள கொள்கை முரணைத் தான் உணர்ந்திருப்பதையும், தன்னுடைய நிபந்தனைக்கு உள்பட்டு மட்டுமே பா.ஜ.க.வுடன் கூட்டணியில் தொடர முடியும் என்பதையும் உணர்த்திய அளவில் மெஹபூபா முஃப்திக்கு வெற்றி. அதேபோல, அவருக்கு எந்தவிதப் புதிய சலுகைகளையோ, வாக்குறுதிகளையோ தராமல் பழைய கூட்டணியைப் புதுப்பித்துக் கொண்ட அளவில் பா.ஜ.க.வும் வெற்றி அடைந்திருக்கிறது. புதிய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டிருந்தால் பதவிக்காக பா.ஜ.க., மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் சரணடைந்துவிட்டது என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கும்.

ஜம்மு - காஷ்மீரைப் பொருத்தவரை, எந்தவொரு அரசும் மத்திய அரசின் பின்பலம் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது என்பதுதான் உண்மை நிலை. குறிப்பாக, பயங்கரவாதிகளின், பிரிவினைவாதிகளின் உலைக்களமாக இருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கை ராணுவத்தின் உதவி இல்லாமல் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. பெரிய தொழில் வளம் இல்லாத, சுற்றுலாப் பயணிகளை மட்டுமே பெரிதாக நம்பி இருக்கும் காஷ்மீரத்துக்கு மத்திய நிதியுதவிதான் மிகப்பெரிய பொருளாதார பலம்.

கடந்த 2014-இல் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தால் உருக்குலைந்து போயிருக்கும் காஷ்மீர் பகுதியின் கட்டமைப்பு வசதிகள் இன்னும் பழைய நிலைக்குக் கொண்டுவரப்படவில்லை. கூட்டணி ஆட்சி அமைத்த கையோடு, மத்திய அரசிடம் இணக்கமான சூழலை ஏற்படுத்தி காஷ்மீரின் வளர்ச்சிப் பணிகளை முடுக்கி விடவேண்டிய பெரும் பொறுப்பு அந்த மாநிலத்தில் முதல் பெண் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் மெஹபூபா முஃப்திக்கு இருக்கிறது. நிபந்தனை இல்லாமல் கூட்டணி ஆட்சியை ஏற்றுக் கொண்டிருக்கும் மெஹபூபா முஃப்திக்கு முழு ஆதரவும், உதவியும் அளிக்க வேண்டிய கடமை பா.ஜ.க. தலைமைக்கு குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கும் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com