ஈரநெஞ்சங்கள் வாழ்க!

சாலை விபத்துகளில் சிக்கியவர்களைக் காப்பாற்றவும், உதவவும் முன்வரும் நல்லிதயம் கொண்டவர்களைத் தேவையில்லாமல் காவல் துறையும், ஏனைய அரசு நிர்வாகங்களும் அலைக்கழிப்பது மிகப்பெரிய சோகம். "ஐயோ பாவம்' என்று உதவப் போய், வழக்கு விவகாரம் என்று காவல் நிலைய, நீதிமன்றப் படிகளில் தேவையில்லாமல் ஏறி இறங்க வேண்டி வரும் என்கிற
Updated on
2 min read

சாலை விபத்துகளில் சிக்கியவர்களைக் காப்பாற்றவும், உதவவும் முன்வரும் நல்லிதயம் கொண்டவர்களைத் தேவையில்லாமல் காவல் துறையும், ஏனைய அரசு நிர்வாகங்களும் அலைக்கழிப்பது மிகப்பெரிய சோகம். "ஐயோ பாவம்' என்று உதவப் போய், வழக்கு விவகாரம் என்று காவல் நிலைய, நீதிமன்றப் படிகளில் தேவையில்லாமல் ஏறி இறங்க வேண்டி வரும் என்கிற அச்சத்தில்தான் பலரும் விபத்து நேர்ந்த நிகழ்வுகளில் பார்த்தும் பார்க்காமலும் சென்று விடுகிறார்கள்.
 எந்தவொரு சாலை விபத்திலும், விபத்து நிகழ்ந்த அடுத்த சில நிமிடங்கள்தான் முக்கியமானவை. விபத்தில் சிக்கியவருக்குப் போதிய முதலுதவி உடனடியாக அளிக்கப்பட்டாலோ, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலோ காயமடைந்த 70% பேரை அநேகமாகக் காப்பாற்றிவிட முடியும். வீணாகக் காவல் துறையின் வழக்கில் சிக்கிக் கொண்டு விடுவோமோ என்கிற அச்சம்தான் அப்படி மனிதநேயத்துடன் செயல்பட விடாமல், பல நல்லிதயங்களைத் தடுக்கிறது.
 சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களைக் காப்பாற்ற முன்வரும் ஈரநெஞ்சத்தாரைப் பாதுகாக்க மத்திய அரசு சில விதிமுறைகளைக் கொண்டு வர இருக்கிறது. மத்திய அரசின் முயற்சிக்கு நேற்று உச்சநீதிமன்றத்தின் அனுமதியும் தரப்பட்டு விட்டது.
 ஈரநெஞ்சத்தார் (குட் சமாரிட்டன்) பாதுகாப்புச் சட்டம் ஏற்கெனவே ராஜஸ்தான், கர்நாடகம், தில்லி மாநிலங்களில் பரிசீலனையில் இருக்கிறது. தேசிய அளவில் எந்தவொரு சட்டமோ, விதிமுறையோ இல்லாத நிலையில், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஈரநெஞ்சத்தாரைப் பாதுகாக்கத் தேவையான விதிமுறைகளை உருவாக்கும்படி 2014 அக்டோபரில் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்திருந்தது. அதன் தொடர் விளைவுதான் உச்சநீதிமன்றத்தின் இப்போதைய அனுமதி.
 மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2015 மே மாதம் இது குறித்த விதிமுறைகளை அறிவித்தது. கடந்த ஜனவரி மாதம் பொதுவான செயல்பாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இதன் அடிப்படைக் குறிக்கோள், விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற விழையும் ஈரநெஞ்சத்தார் எவர்மீதும் குடிமையியல், குற்றவியல் வழக்குப் பதிவதோ, அவர்களை சாட்சிகளாக வரும்படி வற்புறுத்துவதோ கூடாது என்பதுதான். தன்னைப் பற்றிய விவரங்களைத் தெரிவிப்பதோ, சாட்சியாக இருந்து ஒத்துழைப்பதோ, விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்ற முன்வந்த ஈரநெஞ்சத்தாரின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாமே தவிர, காவல் துறையின் வற்புறுத்தலின் பேரில் இருத்தல் கூடாது.
 அப்படியே அவர்கள் நேரில் பார்த்த சாட்சி என்பதால் விசாரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும்கூட அவர்கள் வற்புறுத்தப்படவோ, துன்புறுத்தப்படவோ கூடாது. ஒரு தடவைக்கு மேல் அவர்களை விசாரணைக்குக் காவல் நிலையத்திற்கு வரவழைக்கக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் அதிகாரிகள், காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக, இதுபோன்ற ஈரநெஞ்சத்தாரை ஊக்குவிக்கும் விதத்தில் மாநில அரசுகள் அவர்களைப் பாராட்டி விருது வழங்கவும், அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டும் விதத்தில் பணமுடிப்பு வழங்கவும் வழிகோலக் கோரப்படுகின்றன.
 நீண்டநாளாகவே இதுபோன்ற ஒரு சட்டப்படியான வழிகாட்டுதல் வேண்டும் என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2012-இல் உச்சநீதிமன்றத்தில் ஈரநெஞ்சத்தாரைப் பாதுகாக்கப் போதுமான விதிமுறைகளை உள்ளடக்கிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற வழிகாட்டுதலைப் பெற்றது.
 விபத்து ஏற்படும் நேர்வுகளில் காவல் துறை, மருத்துவமனைகள், சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், கீழமை நீதிமன்றம் ஆகியவைதான் நேரடியாகப் பிரச்னையைக் கையாளுகின்றன. அதனால், சட்டம்-ஒழுங்குக்குப் பொறுப்பு ஏற்கும் மாநில அரசுகள் சட்டம் இயற்றுவதன் மூலம்தான் ஈரநெஞ்சத்தாரைப் பாதுகாக்க முடியும் என்பது வெளிப்படை.
 உச்சநீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையில் இதுகுறித்து ஆலோசனைகளை வழங்க ஒரு குழுவை 2014-இல் நியமித்தது. அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இப்போது ஈரநெஞ்சத்தார் பாதுகாப்புச் சட்டத்திற்கான விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் உருவாக்கி இருக்கிறது.
 மத்திய அரசு வழிகாட்டுதல் வழங்க முடியுமே தவிர, அதை நடைமுறைப்படுத்துவது மாநில அரசுகள் என்பதால்தான், உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் மாநில அரசுகளையும், யூனியன் பிரதேசங்களையும் கட்டுப்படுத்தும் விதத்தில் வழிகாட்டுதலை வழங்கிவிட்டால், அதனடிப்படையில் மத்திய அரசு ஈரநெஞ்சத்தார் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வர முடியும். இல்லாவிட்டால், அது மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாகக் கருதப்படக் கூடும்.
 விபத்து ஏற்படும்போது, இரக்க உணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் ஓடிவந்து உதவ முற்படும் ஈரநெஞ்சத்தாரைப் பாதுகாக்க வேண்டியது மிக மிக அவசியம். அவர்கள் காவல் துறையினரின் தொந்தரவுக்கு உள்ளாகாமல் தடுத்தால் மட்டுமே, விபத்தில் சிக்கிய பலர் தக்க தருணத்தில் உதவி பெற்று உயிர் பிழைக்க முடியும். 2014 புள்ளிவிவரப்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 1,41,000 பேர் சாலை விபத்தில் மரணமடைகிறார்கள் எனும்போது, ஈரநெஞ்சம் உள்ள எவரும் ஈரநெஞ்சத்தார் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதை வரவேற்கத் தயங்க மாட்டார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com