தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது!

தேர்தல் நேர அரசியல் பரபரப்புக்கு நடுவில், ஒரு முக்கியமான உச்சநீதிமன்றத் தீர்ப்பு மக்களின் பரவலான கவனத்தை ஈர்க்காமல் போய்விட்டது. சுப்பிரமணியம் சுவாமி, ராகுல் காந்தி, அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோரின் அவதூறு வழக்கின் மீதான குற்றவியல் (கிரிமினல்) தண்டனை அகற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டிருக்கிறது
Updated on
2 min read

தேர்தல் நேர அரசியல் பரபரப்புக்கு நடுவில், ஒரு முக்கியமான உச்சநீதிமன்றத் தீர்ப்பு மக்களின் பரவலான கவனத்தை ஈர்க்காமல் போய்விட்டது. சுப்பிரமணியம் சுவாமி, ராகுல் காந்தி, அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோரின் அவதூறு வழக்கின் மீதான குற்றவியல் (கிரிமினல்) தண்டனை அகற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டிருக்கிறது.

உலகளாவிய அளவில் பெரும்பாலான நாடுகளில், அவதூறு வழக்கு என்பது குடிமை (சிவில்) குற்றம்தானே தவிர, குற்றவியல் சார்ந்ததாகக் கருதப்படுவதில்லை. சர்வதேச மனித உரிமைக் குழு அனைத்து நாடுகளையும் அவதூறு வழக்குகள்மீதான குற்றவியல் பிரிவை அகற்றும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

சட்டப்படியான பின்புலமோ நியாயமோ இல்லாமல், தவறான, தரக்குறைவான பரப்புரைகளால் ஒருவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுதான் "அவதூறு' என்று கருதப்படுகிறது. அது தரம்தாழ்ந்த பேச்சாகவோ, கேவலப்படுத்தும் எழுத்தாகவோ, சுவரொட்டிகள், பதாகைகள், கார்ட்டூன்கள் போன்ற காட்சிகள் மூலமாகவோ இருக்கலாம். இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 499, இது குறித்துத் தெளிவுபடுத்துகிறது. சட்டப்பிரிவு 500 இந்தக் குற்றத்திற்கு அதி

கபட்ச தண்டனையாக இரண்டாண்டு சிறைத் தண்டனை தரப்படலாம் என்று கூறுகிறது.

இந்தச் சட்டப்பிரிவில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், ஒருவர்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு (அவதூறு) உண்மையாக இருந்தால் மட்டும் போதாது, பொது நன்மையைக் கருதித்தான் அந்த அவதூறு கூறப்பட்டது என்பதை அவதூறு வழக்கை எதிர்கொள்ளும் குற்றம் சாட்டப்பட்டவர் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க வேண்டும்.

விபசாரத்தின் மூலம், கள்ளச் சாராயம் விற்றதன் மூலம், கடத்தல் தொழிலில் ஈடுபட்டதன் மூலம் பெரும் பணக்காரரான ஒருவர், பெரிய தொழிலதிபராகவோ, ஆன்மிகவாதியாகவோ, அரசியல் தலைவராகவோ மாறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது ஆரம்பகாலப் பின்னணி குறித்து எழுதவோ, பேசவோ யாராவது முற்பட்டால், அவர் அதை அவதூறு வழக்காக்க முடியும். கூறப்படுவது உண்மையாகவே இருந்தாலும், அதனால் ஏற்படும் பொது நன்மை என்ன என்கிற கேள்வி, சிறைத்தண்டனை பெற்றுத் தந்துவிடும். ஒருவரது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவது தவறு என்று கூறி சிறைத்தண்டனை அளிக்கும் அவதூறுச் சட்டம், தனி

மனிதனின் பேச்சுரிமைக்குக் கடிவாளம் போடுகிறது என்பதுதான் இதிலிருக்கும் முரண்.

உச்சநீதிமன்றம், சட்டப்பிரிவு 21 அளிக்கும் ஒரு தனிமனிதனின் வாழ்வுரிமையைக் காரணம் காட்டி, சட்டப்பிரிவு 19 (1) (அ) அனைவருக்கும் அளித்திருக்கும் அடிப்படைச் சுதந்திரமான பேச்சுரிமைக்குக் கடிவாளம் போட முற்பட்டிருக்கிறது. எந்தவொரு தனி

மனிதனுக்கும் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுமானால், நீதிமன்றங்களில் அதற்கு இழப்பீடு பெற முடியும் எனும்போது எதற்

காகக் கிரிமினல் தண்டனை வழங்கும் பிரிவு இருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. அவதூறு வழக்கைக் கிரிமினல் குற்றமாக்கும்போது, அது கருத்து சுதந்திரத்திற்கு வழங்கப்படும் கடுமையான தண்டனையாகிவிடுகிறது.

இன்னொரு கேள்வியும் எழுகிறது. அவதூறு வழக்கில், சட்டப்பிரிவு 21 அளிக்கும் தனிமனித வாழ்வுரிமை அடிப்படையில் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படாமல் பாதுகாக்க கிரிமினல் பிரிவு தேவை என்றே வைத்துக்கொள்வோம். இதே வாதத்தின் அடிப்படையில், அரசு, பெரிய நிறுவனங்கள் உள்ளிட்டவை எப்படி பாதுகாப்புக் கோர முடியும்? அவர்களிடம்தான் தங்களது நற்பெயரைப் பாதுகாத்துக் கொள்ளவும், விளம்பரங்கள் மூலம் அவதூறை எதிர்கொள்ளவும் வசதி இருக்கிறதே, பிறகு எதற்காகப் பாதுகாப்பு?

இதில் மிகப்பெரிய வேடிக்கை, ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள்மீது யாராவது குற்றம் சாட்டிவிட்டாலோ, குறைகளையும், முறைகேடுகளையும் வெளிச்சம்போட முற்பட்டாலோ, அவர்கள் அவதூறு வழக்குத் தொடுக்கிறார்கள். அதுவரை சரி. ஆனால், அவர்கள் தொடுக்கும் அவதூறு வழக்குகளை அவர்கள் சார்பில் அரசு வழக்குரைஞர் நடத்துகிறார். தவறைச் சுட்டிக்காட்ட முற்படும் தனிமனித இந்தியக் குடிமகனுக்கு எதிராக, முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட அந்த அரசு ஊழியரின் சார்பில் அரசின் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அந்த ஊழியர் நீதிமன்றத்திற்கு வரவும் வேண்டாம், தனது நற்பெயருக்கு எப்படி களங்கம் கற்பிக்கப்பட்டது என்று எடுத்துரைக்கவும் வேண்டாம். அரசு வழக்குரைஞர் அதைப் பார்த்துக் கொள்வார்.

அவதூறு வழக்கு என்கிற சட்டம் ஊடகங்களையும், அரசியல் எதிரிகளையும், இடித்துரைப்பாளர்களையும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அச்சுறுத்தவும் துன்புறுத்தவும்தான் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால், அதிகம் பாதிக்கப்படுவது பத்திரிகையாளர்களும், இடித்துரைப்பாளர்களும்தான். வேண்டுமென்றே, சாதாரண பிரச்னைகளுக்குக்கூட அவதூறு வழக்குத் தொடர்ந்து அவர்களை அலைக்கழிப்பதை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது அச்சுறுத்தவும், பேச்சுரிமையை முடக்கும் ஆயுதமாகவும்தான் கையாளப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி தீபக் மிஸ்ராவும், நீதிபதி பி.சி. பந்த்தும், அவதூறுக்கும் தனிமனித உரிமைப் பாதுகாப்புக்கும் இழப்பீடு வழங்குவதை உறுதிப்படுத்தி, கிரிமினல் பிரிவை அகற்றி இருக்கலாம். சட்டப்பிரிவுகள் 499, 450 இரண்டின் செயல்பாடு குறித்த பிரச்னை என்பதால் அரசியல் சட்ட அமர்வுக்குப் பரிந்

துரைத்திருக்கலாம். அப்படிச் செய்யாமல்விட்டது, தனிமனித உரிமைக்கும், தவறுகளைத் தட்டிக்கேட்கும் இடித்துரைப்பாளர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com