வாக்குப்பதிவுக்குப் பின்னால்...

வேட்பாளர்களின் செலவுக் கணக்கைக் கேட்கும் தேர்தல் ஆணையத்திடம், வாக்காளர் விழிப்புணர்வுக்காக நீங்கள் செய்த செலவு எவ்வளவு என்று திருப்பிக் கேட்டால், அதன் அளவு நிச்சயமாக, வேட்பாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட செலவுத்தொகையை விட அதிகமாகத்தான் இருக்கும். அப்படி இருந்தும், பதிவான வாக்குகள் 74% மட்டும்தான். 2011 தேர்தலில் பதிவான 78%விடக் குறைவு.
Updated on
2 min read

வேட்பாளர்களின் செலவுக் கணக்கைக் கேட்கும் தேர்தல் ஆணையத்திடம், வாக்காளர் விழிப்புணர்வுக்காக நீங்கள் செய்த செலவு எவ்வளவு என்று திருப்பிக் கேட்டால், அதன் அளவு நிச்சயமாக, வேட்பாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட செலவுத்தொகையை விட அதிகமாகத்தான் இருக்கும். அப்படி இருந்தும், பதிவான வாக்குகள் 74% மட்டும்தான். 2011 தேர்தலில் பதிவான 78%விடக் குறைவு.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தேர்தல் ஆணையம், "மே 16' என்ற சொல் கனவில்கூட வரும் அளவுக்குப் பார்த்த இடத்திலெல்லாம் கண்ணில் படும்படி செய்திருந்தார்கள். பேருந்து

களில், தெருவிளக்குக் கம்பங்களில், சாலை விளம்பரங்களில், பனியன்களில், கடைகளில் பொருள்வாங்கும் பைகளில் என பல விதமாகவும் மே 16 வாக்களிக்கும் நாள் என்பதை நினைவூட்டி, நூற்றுக்கு நூறு வாக்குப்பதிவு என்ற சாதனை இலக்கையும் நிர்ணயித்தார்கள்.

"என் வாக்கை விற்க மாட்டேன்' என்ற உறுதிமொழியை ஊர் முழுக்க, அதாவது அலுவலகங்களில், பொதுநிகழ்வுகளில் உறுதியேற்கச் செய்தார்கள். இந்த நடவடிக்கைகளில் மே 16 என்பது அனைவருடைய மனதிலும் நன்கு பதிந்தது. ஆனாலும்கூட 100% வாக்குப்பதிவு சாத்தியப்படவில்லை.

இதற்கு அடிப்படைக் காரணம், பொதுவாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வராததுதான். அரசியல் கட்சி சார்ந்த வாக்காளர்கள் அனைவரையும் கட்சிக்காரர்கள் அழைத்து வந்து வாக்களிக்க வைத்தனர். ஆனால், கட்சி சாராத வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு வரச் செய்வதில் அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டவில்லை. அவர்களும், இத்தனை விழிப்புணர்வு முயற்சிக்குப் பின்னும்கூட, வாக்களிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக, படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள் நகர்ப்புறங்களில் வாக்களிக்காமல் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னை மாநகரில் அண்மையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் கோபதாபங்களை வாக்குகளில் காட்டப்போகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கொண்டிருந்த வேளையில் அவ்வாறு ஏதும் நடக்கவே இல்லை. மெத்தப்படித்தவர்கள், அதிக விழிப்புணர்வு உள்ளவர்கள் வசிக்கும் சென்னையில் வெறும் 54% வாக்குப்பதிவுதான் என்பது ஆச்சரியம். சமூக வலைத்தளங்

களில் பரபரப்பாகவும், ஆர்வத்துடன் பரப்புரை செய்த இளைஞர்கள் வாக்குச் சாவடிக்குப் படையெடுத்தார்களா என்றால் இல்லை. ஒருவேளை மின்னஞ்சலில் வாக்குப்பதிவுக்கு அனுமதித்திருந்தால் வாக்களித்திருப்பார்களோ என்னவோ?

யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை (நோட்டா) தனிப்பொத்தான் வந்துவிட்ட நிலையில், இனியும் வேட்பாளர்களை எனக்குப் பிடிக்கவில்லை என்று வாக்களிக்காமல் இருந்தேன் என்று நியாயப்படுத்த முடியாது. சரியான காரணங்கள் இல்லாமல் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கத் தவறியவரின் குடும்ப அட்டைக்கு பொருள்கள் வழங்கப்படாது என்ற ஒரு சிறு அரசாணைகூட, 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும். இதைத்தவிர வேறு வழியிருப்பதாகத் தோன்றவில்லை.

அல்லது வாக்களிக்காத வாக்காளர், அவருடைய வாக்காளர் அடையாள அட்டை, வாக்கு மையச் சீட்டுத் தயாரிப்புச் செலவுகளை அபராதத் தொகையுடன் திருப்பித்தர வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை என்பது வெறும் ரயில் பயண அடையாளத்துக்கு மட்டும்தானா என்ன?

அடுத்ததாக, தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவைத் தடுப்பதில் காட்டிய முனைப்பு பாராட்டுக்குரியது என்றாலும், இதில் மக்கள் ஒத்துழைப்பு இல்லை அல்லது மிகக் குறைவாகவே இருந்தது. பணப்பதுக்கல் தொடர்பான புகார், தகவல் எல்லாமும் மாற்றுக் கட்சியினர் உளவு பார்த்து சொன்னவைதான். மக்களிடமிருந்து வந்தவை அல்ல.

பணப்பட்டுவாடா எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. "அரசு அலுவலகங்களில் ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நாம் செல்லும்போது, அங்கே அலுவலர்களுக்குக் கையூட்டுத் தராமல் எந்த வேலையும் நடப்பதில்லை. என் தொகுதியைச் சேர்ந்தவர் என்று நமக்காகப் பரிந்துரைத்து இவர்கள் உதவியா செய்கிறார்கள்? நாம் செலவழிக்கும் பணத்தின் ஒரு பகுதியையாவது வேட்பாளராக நிற்பவர்கள் தரட்டுமே. அவர்கள் லஞ்சம் வாங்கிய பணத்தைத் தானே தரப்போகிறார்கள்' என்று படித்த, விவரம் தெரிந்தவர்களே பணப்பட்டுவாடாவை நியாயப்படுத்துகிறார்கள்.

சில ஊர்களில் மக்களே கட்சி அலுவலகத்துக்குப் போய், எங்களுக்குத் தரவேண்டியதை உங்கள் நிர்வாகி தரவில்லை, தானே எடுத்துக் கொண்டுவிட்டார் என்று புகார் சொன்ன சம்பவங்களும், தங்கள் வீடு மட்டும் விடுபட்டுவிட்டது என்று, குறைபட்டு, கேட்டு வாங்கியதுமான சம்பவங்களும் நடந்தன.

லஞ்சம் கொடுக்க, வாங்க மறுப்பவர் மிகச் சிலராக இருப்பதுபோலவே, பணப்பட்டுவாடாவை விரும்பாதவர்களும் மிகச் சிலராகவே இருக்கின்றனர். லஞ்சமாகப் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று அரசியல்வாதிகள் நம்பும்வரை, பணப்பட்டுவாடாவைத் தடுத்துவிடவோ, முடிவுக்குக் கொண்டுவரவோ முடியாது. கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா போன்ற கேள்வியைப் போலத்தான் பணப்பட்டுவாடா பிரச்னையும். படித்தவர்களும், விவரம் தெரிந்தவர்களும் பணம், இலவசம் போன்றவற்றிற்கு விலைபோகாமல், தவறாமல் வாக்களிக்கும் நிலைமை ஏற்பட்டால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!

இதையும் மீறி, இந்திய ஜனநாயகம் உயிர்ப்புடன் செயல்படுகிறது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com