முனைப்பிருந்தால் மார்க்கமுண்டு!

தமிழகத்தில் மருத்துவக் கல்வி விழையும் மாணவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். ஓராண்டு காலத்துக்குப் பொது நுழைவுத் தேர்வு முறை இல்லாமல் அந்தந்த மாநிலங்கள் தங்கள் நடைமுறைப்படி மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஆலோசித்து வருகிறது.
Updated on
2 min read

தமிழகத்தில் மருத்துவக் கல்வி விழையும் மாணவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடலாம். ஓராண்டு காலத்துக்குப் பொது நுழைவுத் தேர்வு முறை இல்லாமல் அந்தந்த மாநிலங்கள் தங்கள் நடைமுறைப்படி மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஆலோசித்து வருகிறது.
 இதனால், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் விண்ணப்பங்களைக் கொடுக்கவும், கலந்தாய்வுக்கான பணிகளைத் தொடங்கவும் ஏதுவாக அமையும். இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்கள் வழக்கம்போல தங்கள் "கட்}ஆஃப்' மதிப்பெண் படியே மருத்துவக் கல்லூரிகளில் சேர்வர்.
 சில நாள்களுக்கு முன்பு, தில்லியில் மத்திய சுகாதார அமைச்சர் ஜெ.பி. நட்டா தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில சுகாதார அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களும் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு எதிர்பபு தெரிவித்தன. குறிப்பாகத் தமிழகம் தனது எதிர்ப்பை வலுவாக முன்வைத்தது.
 எல்லா மாநிலங்களும் பொது நுழைவுத்தேர்வு மூலம் வரும் மாணவர்களுக்கு 15 விழுக்காட்டு இடங்களைத் தங்கள் மாநில மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்வதில் எந்தத் தடையும் இல்லை என்பதையும் தெரிவித்துள்ளன. இதில் எவ்விதக் கருத்து மாறுபாடும் யாருக்கும் இல்லை.
 நெல்லையில் தேர்தல் பரப்புரையின்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், மருத்துவ பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்வதற்கான அரசாணையை மீண்டும் அரசு அமைக்கும்போது பிறப்பிப்பேன் என்று உறுதிகூறியிருந்தார். இந்நிலையில், மத்திய அமைச்சரவை, பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில் ஓராண்டு காலத்துக்குத் தற்போதைய நடைமுறையே தொடர்வது குறித்து ஆலோசித்து வருகிறது.
 மத்திய சுகாதார அமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாநில சுகாதார அமைச்சர்கள் பலரும் பல விதமான கருத்துகளை முன்வைத்தனர். உச்சநீதிமன்றத்தின் அடிப்படை நோக்கம், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களும், சிறுபான்மையினர் மருத்துவக் கல்லூரிகளும் தங்களுக்கு மட்டுமேயான தனித்தொரு தகுதிகாண் தேர்வு நடத்தக்கூடாது என்பதுதான். மாநில அரசுகளின் நடைமுறையை மாற்றுவதாக இருக்காது. இது குறித்து நீதிமன்றத்தில் விளக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தின.
 இதில் பல மாநிலங்களின் பொதுக்கருத்து கர்நாடகம், அஸ்ஸாம் போன்று தங்கள் மாநில மாணவர்களுக்கான தகுதிகாண் தேர்வை மாநில அளவில் நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதுதான். தகுதிகாண் தேர்வே கூடாது என்று வலியுறுத்தியிருப்பது தமிழகம் மட்டுமே.
 சில மாநிலங்கள் பொது நுழைவுத்தேர்வை மாநில மொழியிலும் விடையளிக்க வகை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளன.
 உச்சநீதிமன்றமும் இது குறித்துத் தனது கருத்தைத் தெரிவிப்பதாகக் கூறியுள்ளது. ஆகவே, மாநில மொழியிலும் விடை அளிக்கும் நிலைமை உருவாகக்கூடும்.
 இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு சிக்கல் இல்லாமல் கடந்து போகும் என்றாலும் அடுத்த ஒராண்டு கால இடைவெளியில் தமிழக அரசு ஒரு குழு அமைத்து, மருத்துவக் கல்விச்சூழல் குறித்த ஆய்வை நடத்தப் பணிக்க வேண்டும். மருத்துவக் கல்வியின் தரம் உயர்வதும், தமிழக மாணவர்கள் அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் அளவிலான கல்வியைப் பெறுவதும்தான் நமது இலக்காக இருக்க வேண்டும்.
 இப்போதேகூட, அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் அகில இந்திய அளவில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துத் தமிழக மாணவர்கள் பயில்கிறார்கள். தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடரும் அதே வேளையில், நமது மாணவர்களைப் பொதுத் தேர்வுக்கும் தயார்படுத்தி, அதில் தரவரிசை பெறச் செய்வதன் மூலம், மேலும் கூடுதலான எண்ணிக்கையில் தமிழக மாணவர்கள் பிற மாநிலங்களில் படிக்கும் வாய்ப்பை உருவாக்கவும், அவர்கள் வெளிமாநிலம் செல்வதால் தமிழகத்தில் ஏற்படும் இடைவெளியில் அடுத்தநிலையில் உள்ள (கட்}ஆஃப் மதிப்பெண்) மாணவர்கள் பயன்பெறச் செய்ய முடியுமா, அதன் அளவு எவ்வளவாக இருக்கும் என்பதையும் நாம் கணிக்க வேண்டும். இதன்மூலம் கூடுதல் மருத்துவர்களைத் தமிழகம் உருவாக்க முடியும்.
 தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்வி பயின்று வெளியேறிய மாணவர்களில் சிறப்பாக தேர்ச்சி பெற்றோர், உயர் மருத்துவம் அல்லது சிறப்பு மருத்துவத்தில் சேர்ந்தோர் ஆகியோரை பட்டியலிட்டு, இவர்களில் எத்தனை மாணவர்கள் 15 விழுக்காடு அகில இந்திய ஒதுக்கீட்டில் வந்து சேர்ந்தவர்கள், மதிப்பெண் அளவில் இடம் கிடைத்துப் படித்தவர்கள் என்பதைப் பகுத்துப் பார்த்தல், சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தை மையப்படுத்தி, தமிழக அளவில், தமிழில் ஒரு மருத்துவத் தகுதிகாண் தேர்வை நடத்தி, அதன் மதிப்பெண் மற்றும் தேர்வில் பெற்ற மதிப்பெண் இரண்டின் கூட்டுத்தொகையை வைத்துத் தரவரிசைப்படுத்தும் பழைய முறையே சிறந்ததாக அமையுமா என்பது உள்ளிட்ட சிந்தனை போன்ற முயற்சிகள் மருத்துவப் படிப்பை முறைப்படுத்தவும், மாணவர் சேர்க்கையை நெறிப்படுத்தவும் உதவும்.
 இந்தக் குழு தனது அறிக்கையை 5 மாதங்களில் சமர்ப்பித்தால், அது தரும் புள்ளிவிவரங்களைக் கொண்டு தமிழகத்தின் மருத்துவக் கல்வி, மாணவர்களின் திறன், உயர் மருத்துவம் பயிலச் செல்லும் தமிழர் எண்ணிக்கை, வேறு மாநிலங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் எத்தனை பேர் படிக்க இயல்கிறது, மற்ற மாநிலத்தவர் எவ்வாறு இந்த வாய்ப்பை இந்தியா முழுவதும் சென்று பயன்படுத்துகிறார்கள் என்ற புரிதலை உருவாக்க உதவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com