முடிவுகள் உணர்த்தும் செய்தி!

இந்தச் சுற்று சட்டப் பேரவைத் தேர்தல்கள் பல திருப்பங்களையும், வியப்புகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன. இந்தியத் (உலக?) தேர்தல் வரலாற்றில் 90 வயதைக் கடந்த முதியவர்கள் முதல்வர் வேட்பாளர்களாக வலம் வந்தது இதுதான் முதல் முறையாக இருக்கும். தமிழகத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும்,
Updated on
2 min read

இந்தச் சுற்று சட்டப் பேரவைத் தேர்தல்கள் பல திருப்பங்களையும், வியப்புகளையும் ஏற்படுத்தி இருக்கின்றன. இந்தியத் (உலக?) தேர்தல் வரலாற்றில் 90 வயதைக் கடந்த முதியவர்கள் முதல்வர் வேட்பாளர்களாக வலம் வந்தது இதுதான் முதல் முறையாக இருக்கும். தமிழகத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், கேரளத்தில் மார்க்சிஸ்ட் தலைவர் அச்சுதானந்தனும் வெற்றி பெற்றால் முதல்வராவோம் என்கிற கனவுடன்தான் தேர்தல் களத்தில் இறங்கினார்கள்.
 1984-க்குப் பிறகு ஆளும்கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்கிற 32 ஆண்டு நடைமுறை தமிழகத்தில் உடைக்கப்பட்டிருக்கிறது. இடதுசாரிகளின் உலைக்களனான கேரளத்தில் பா.ஜ.க. ஒருநாளும் வெற்றி பெற முடியாது என்கிற மாயையும் தகர்க்கப்பட்டு, கேரள சட்டப் பேரவையில் பா.ஜ.க. நுழைந்துவிட்டிருக்கிறது.
 சாதாரணமாகத் தேர்தல்களில், ஓர் ஆட்சி குறித்த விமர்சனமோ அல்லது ஆளும்கட்சியின் சாதனைகளோதான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். இந்தத் தேர்தல் அந்த வழக்கத்தை உடைத்தெறிந்திருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒன்றன் பின் ஒன்றாகப் பல ஊழல் குற்றச்சாட்டுகள் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மீது மேற்கு வங்காளத்தில் எழுந்தன. தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகியது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் அந்தத் தலைவர்களுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தவோ அவர்களது செல்வாக்கில் சரிவு ஏற்படுத்தவோ இல்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
 ஊழல் மட்டுமல்ல, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார வளர்ச்சி, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவை பொதுவாகத் தேர்தல்களில் முன்னிலை வகிக்கும். எந்தவொரு பிரச்னையும் இந்தச் சுற்றுத் தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதுபோன்ற பிரச்னைகளை எந்தவொரு கட்சியும் தேர்தல் களத்தில் முன்னிலைப்படுத்தவும் இல்லை.
 தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி இருவருடைய தனிப்பட்ட செல்வாக்கும், அவர்களது மக்கள் நலத் திட்டங்களுக்குக் கிடைத்த அமோக வரவேற்பும்தான் வெற்றிக்கு வழிகோலியிருக்கின்றன. நகர்ப்புறங்களைவிட ஊரகப் பகுதிகளில் இந்த இரண்டு மாநில முதல்வர்களும் மகளிர் மத்தியில் பெற்றிருக்கும் பெரும் செல்வாக்கு, அவர்களது ஆட்சி குறித்த விமர்சனங்களை எடுபடாமல் செய்துவிட்டன. இது ஒரு புதிய திருப்பம்.
 இன்னொரு வித்தியாசமான போக்கை இந்திய அரசியல் சந்தித்து வருகிறது. இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளை மூன்று விதமாக வகைப்படுத்தலாம். பாரதிய ஜனதா கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் முறையான அமைப்பு ரீதியிலான கட்சிகள்; இது ஒருவகை. அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய ஆறும் ஜெயலலிதா, நவீன் பட்நாயக், மம்தா பானர்ஜி, நிதீஷ்குமார், அரவிந்த் கேஜரிவால், மாயாவதி என்கிற தலைவர்களை மையமாக வைத்து இயங்கும் தனிநபர் அரசியல் கட்சிகள். மேலே குறிப்பிட்ட எட்டு கட்சிகளைத் தவிர, இந்தியாவில் இருக்கும் ஏனைய முக்கியமான அனைத்து அரசியல் கட்சிகளுமே குடும்ப அரசியலை மையப்படுத்தும் அரசியல் கட்சிகள்தான்.
 காங்கிரஸ் கட்சியில் தொடங்கி, தி.மு.க., மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், முலாயம்சிங் யாதவின் சமாஜவாதி கட்சி, பிரகாஷ்சிங் பாதலின் அகாலிதளம், செளதாலாவின் இந்திய தேசிய லோக தளம், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, சிவசேனை என்று ஏனைய கட்சிகள் அனைத்துமே தங்களது நன்மையையும், தன்னலத்தையும் மையப்படுத்தி குடும்பத்தினரால் நடத்தப்படும் கட்சிகள்தான்.
 கடந்த 2014 மக்களவைத் தேர்தலிலிருந்து இந்தக் குடும்பக் கட்சிகளின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. பல மாநிலங்களில், ஒன்று குடும்ப அரசியலை முன்வைக்கும் கட்சிகள் மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. அல்லது அந்தக் குடும்பக் கட்சிகள் தனி நபர் கட்சிகளுடனோ, அரசியல் இயக்கங்களுடனோ கைகோர்த்து மட்டுமே செயல்பட வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
 பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி இன்னொரு செய்தியைத் தெரிவிக்கிறது. இந்தியாவில் தெற்கு முனையான கேரளத்திலும், கிழக்குப் பகுதியான மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்களிலும், வட கோடியான காஷ்மீரத்திலும், மேற்குக் கோடியிலுள்ள குஜராத்திலும் தாமரை மலர்ந்து விட்டிருக்கிறது. பா.ஜ.க. அஸ்ஸாமில் ஆட்சியைப் பிடித்ததும், கேரளத்திலும் 15% வாக்குகள் பெற்றதும் இந்தச் சுற்று சட்டப் பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க திருப்பங்கள்.
 இந்தியாவில் முஸ்லிம்கள் அதிக அளவில் வாழும் மாநிலங்களாகக் காஷ்மீரத்துக்கு அடுத்தபடியாக அஸ்ஸாம் (34%), மேற்கு வங்கம் (27%), கேரளம் (27%), உத்தரப் பிரதேசம் (19.26%), பிகார் (17%) ஆகிய மாநிலங்கள் உள்ளன. மேலே குறிப்பிட்ட எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்காவிட்டாலும் ஒரு பலமான சக்தியாக உருவாகி இருக்கிறது. "காங்கிரஸிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா' உருவாக வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் கனவு நனவாக வேண்டுமானால், சிறுபான்மையினரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களை அரவணைத்துக் கொள்ள பா.ஜ.க. முற்பட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் மிக முக்கியமான செய்திகளில் இதுவும் ஒன்று!
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com