கடந்த 2005-ஆம் ஆண்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் பிகாரில் ஆட்சியைக் கைப்பற்றியபோது, லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினரின் காட்டாட்சியை அகற்றி, பாதுகாப்பான, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் ஆட்சியை உறுதிப்படுத்துவதாக முதல்வர் நிதீஷ்குமார் உறுதியளித்தார். அதேபோல, ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, நிர்வாகமும் ஓரளவுக்கு ஊழலற்றதாகவும், திறமையுடனும் செயல்படத் தொடங்கியது.
இப்போது நிலைமை மீண்டும் 2005-க்கு முற்பட்ட சூழலுக்குத் திரும்புகிறது என்பதுதான் வேதனை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நிதீஷ்குமார் தலைமையில் அமைந்தது முதலே நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கிவிட்டது. ஆட்சி அமைத்த ஒரே மாதத்தில் உள்ளூர் சட்டப் பேரவை உறுப்பினருடன் ஒத்துழைக்காத இரண்டு பொறியாளர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த நேர்வுகள் அனைத்தின் பின்னணியிலும் ஆளும் கூட்டணி அரசியல்வாதிகளுக்குப் பங்கு இருந்திருக்கிறது. இப்போது லோக் ஜனசக்தி கட்சியின் பிரமுகர் சுதேஷ் பாஸ்வான் கொல்லப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டிருக்கிறது.
ஆதித்ய சச்தேவா என்கிற மாணவன் ஆளும் ஐக்கிய ஜனதா தள மேலவை உறுப்பினரின் மகனால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த பிகாரையே பயத்தில் உறைய வைத்திருக்கிறது. ஐக்கிய ஜனதா தள மேலவை உறுப்பினர் மனோரமா தேவியின் மகன் 30 வயதான ராக்கி. இவர் தனது தாய்க்கு அளிக்கப்பட்டிருக்கும் இரண்டு காவல் துறை மெய்க்காப்பாளர்களுடன் புத்தகயாவிலிருந்து கயா நகரத்துக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் தனது "லேண்ட் ரோவர்' வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அதே சாலையில் மகிழுந்தில் பயணித்துக் கொண்டிருந்த ஆதித்யா என்கிற இளைஞர், ராக்கியின் வாகனத்துக்கு வழிவிடவில்லை.
அதற்குப் பிறகுதான் அந்த பயங்கரம் நிகழ்ந்தது. தன்னுடன் வந்த பாதுகாவலரின் துணையோடு ஆதித்ய சச்தேவாவைக் குருவி சுடுவதுபோலச் சுட்டுத் தள்ளிவிட்டு விரைந்து மறைந்தது ராக்கியின் வாகனம். சம்பவம் நடந்து இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் குற்றமே பதிவு செய்யப்பட்டது. ஊடகங்களில் செய்தி பரபரப்பாகி, மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்த பிறகுதான் காவல் துறை செயல்படத் தொடங்கியது. ராக்கி ஒரு வாரத்திற்குப் பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறார். மனோரமா தேவியின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது அங்கு மதுவிலக்கை மீறி ஆளும் கட்சி மேலவை உறுப்பினரே மேல்நாட்டு மதுப்பாட்டில்களைப் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது. மனோரமா தேவியின் கணவர் பிந்தி யாதவ், லாலு யாதவின் கட்சியில் முக்கிய பிரமுகர்.
மேலே குறிப்பிட்ட சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள்கூட ஆகவில்லை. சிவான் என்ற இடத்தில் பத்திரிகையாளர் ராஜ்தேவ் ரஞ்சன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இவர் செய்த தவறு, மாநில அமைச்சரான அப்துல் கபூர், சிவான் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியாக அடைக்கப்பட்டிருக்கும் சிவான் மக்களவை முன்னாள் உறுப்பினரும், ராஷ்ட்ரீய ஜனதா தளப் பிரமுகருமான முகம்மது சகாபுதீனைச் சந்தித்த விடியோ படத்தை வெளியிட்டதுதான் என்று கூறப்படுகிறது.
42 வயது ராஜ்தேவ் ரஞ்சன், ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்தின் இந்தி நாளிதழான ஹிந்துஸ்தானின் சிவான் பதிப்பின் தலைமை நிருபர். சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், முகம்மது சகாபுதீன் எப்படி சிறையிலிருந்தபடியே தனது நிழல் சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார் என்பதைத் தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டியவர். ஏற்கெனவே இவருக்குக் கொலை மிரட்டல் அனுப்பி இருப்பது இப்போது வெளியாகி இருக்கிறது. இவரது புகாரின்மீது காவல் துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறது.
ராஜ்தேவ் ரஞ்சனைக் கொல்வதற்கான ஆணை சிவான் சிறையிலிருந்து பிறப்பிக்கப்பட்டது என்றும், சிறையிலிருந்து விடுதலையான கைதி ஒருவர் சகாபுதீனின் கூட்டாளி உபேந்திர சிங்கை இரண்டு வாரங்களுக்கு முன்பு சந்தித்து அதற்குத் தேவையான துப்பாக்கியை வாங்கித் தரும்படி கேட்டதாகவும் காவல் துறை விசாணையில் தெரியவந்திருக்கிறது. இந்தக் கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் மாயமாகி விட்டிருப்பதிலிருந்து, கொலையாளிகள் அனுபவம் மிக்கவர்கள் என்பதும், அவர்களுக்குக் காவல் துறையின் செல்வாக்கு இருப்பதும் தெரிகிறது.
அன்று ராஜ்தேவ் ரஞ்சனின் திருமண நாள் என்பதால் தனது வேலை முடிந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த ஐந்து பேர் அவரை வழிமறித்துக் குறிபார்த்துத் தலையிலும் கழுத்திலும் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வு முதல்வர் நிதீஷ்குமாரையே திகைக்க வைத்திருக்கிறது. சி.பி.ஐ. விசாரணைக்கு அவர் உத்தரவிட்டிருந்தாலும்கூட, எதுவும் செய்ய முடியாத இருதலைக்கொள்ளி எறும்பின் நிலையில் தத்தளிக்கிறார் அவர்.
லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தனது பழைய பாணி அராஜக அரசியலில் இறங்கத் தொடங்கிவிட்டது. மீண்டும் காட்டாட்சியை நோக்கி நகரும் பிகாரை எப்படிக் காப்பாற்றப் போகிறார் முதல்வர் நிதீஷ்குமார்? "பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' நிலையில் இப்படியே தொடர்ந்தால், மக்களவைத் தேர்தல் அவருக்கு சாதகமாக இருக்காது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

