தேவை அவசர சிகிச்சை!

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகள் பற்றிய கடுமையான விமர்சனங்களும், அதில் நடைபெற்றுவரும் முறைகேடுகளும் கணக்கிலடங்கா. இந்திய மருத்துவக் கவுன்சில் மரியாதை இழந்த, முறைகேடுகள்
Updated on
2 min read

கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகள் பற்றிய கடுமையான விமர்சனங்களும், அதில் நடைபெற்றுவரும் முறைகேடுகளும் கணக்கிலடங்கா. இந்திய மருத்துவக் கவுன்சில் மரியாதை இழந்த, முறைகேடுகள் மலிந்த அமைப்பாகத் தொடர்ந்தது என்பது ஊரறிந்த உண்மை. இப்போது ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் மூன்றுபேர் அடங்கிய குழுவை மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், முறைப்படுத்தவும் உச்சநீதிமன்றம் நியமித்திருக்கிறது. இந்தக் கண்காணிப்புக் குழுவுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் எல்லா செயல்பாடுகளையும் கண்காணிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. கொள்கை முடிவுகள் உள்ளிட்ட எல்லா முடிவுகளும் இந்தக் கண்காணிப்புக் குழுவின் ஒப்புதல் பெற்றாக வேண்டும்.

முன்பு, இதே ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கண்காணிப்புக் குழுதான், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள் குறித்தும் பரிந்துரைகள் வழங்கியது. ஆனால், அதற்கும் இப்போது இந்திய மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகள் குறித்து அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்புக் குழுவுக்கும் ஒரு மிகப்பெரிய வேறுபாடு உண்டு.

கிரிக்கெட் வாரியம் என்பது தனியார் அமைப்பு. ஆனால், இந்திய மருத்துவக் கவுன்சில் என்பது நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் அரசின் அதிகாரபூர்வ அமைப்பு. இதன் செயல்பாடுகள் இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தின் வரம்புக்குள்பட்டவை. மேலும், கிரிக்கெட் வாரியம் போலல்லாமல், மருத்துவக் கவுன்சிலின் செயல்பாடுகள் கோடிக்கணக்கான இந்தியக் குடிமக்களின் வாழ்க்கையை, அவர்கள் உடல்நலத்தைப் பாதிக்கக் கூடியவை.

பல ஆண்டுக் காத்திருப்புக்குப் பின்னும் ஆட்சியிலிருக்கும் அரசுகள் மருத்துவக் கவுன்சிலை சீர்படுத்தவோ, அதன் செயல்பாடுகளை வரையறுத்து மாற்றியமைக்கவோ, முன்வராத நிலையில்தான் உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்னையில் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. நீதிபதி லோதா தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்புக் குழு, அடுத்த ஓர் ஆண்டு செயல்

படும். அதற்குள் மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் ஒன்றை அமைத்துத் தகுந்த சட்டத்தை இயற்றி மருத்துவத் துறையில் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு.

மருத்துவத் துறை பல சவால்களை எதிர்கொள்கிறது. மருத்துவப் பட்டப்படிப்பான எம்.பி.பி.எஸ். மட்டுமே இப்போது போதுமானதாக இல்லை. மருத்துவ உயர்கல்விக்கான, சிறப்புக் கல்விக்கான தேவையும், மேற்படிப்பு கோருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டன. பொது மருத்துவராகப் பணியாற்ற யாரும் தயாராக இல்லாத நிலையில், சிறப்புப் படிப்புகள் தனியார் கல்லூரிகளால் ஏலம் விடப்படாத முறையாக விலைபேசப்படுகின்றன. எம்.பி.பி.எஸ். முடித்து குறைந்தது ஐந்தாண்டுகளாவது பொது மருத்துவராகப் பணியாற்றிய பிறகுதான் மேல்படிப்பு என்கிற நிலைமை ஏற்படாவிட்டால், அடிப்படை மருத்துவப் பயிற்சி இல்லாத மருத்துவர்களே அதிகமாக இருக்கும் நிலைமை ஏற்படக்கூடும்.

மேலும், மருத்துவக் கல்லூரிகள் இந்தியா முழுவதும் சமச்சீராகப் பரவாமல் சில மாநிலங்களில் மட்டுமே அதிகமாக நிறுவப்பட்டிருக்கின்றன. இந்த நிலைமைக்கு, மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கும் இந்திய மருத்துவக் கவுன்சில்தான் காரணம். இந்தியாவில் 31% மக்கள்தொகை மட்டுமே உள்ள ஆறு மாநிலங்களில் மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களில் 58% இடங்கள் காணப்படுகின்றன. 45% மக்கள் தொகையுள்ள எட்டு மாநிலங்களுக்கும் சேர்த்து வெறும் 21% எம்.பி.பி.எஸ். இடங்கள் மட்டுமே இருக்கும் நிலைமை. இதற்குக் காரணம், மருத்துவக் கவுன்சில், மருத்துவக் கல்லூரிகளுக்கு முறையாகவும், திட்டமிட்டு எல்லா மாநிலங்களிலும் அமையும் விதத்திலும் அனுமதி வழங்காததுதான்.

மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் சலுகைகளுக்காக, நோயாளிகளுக்குத் தேவையில்லாத மருந்துகளை வழங்குவது, அவசியமே இல்லாத பரிசோதனைகளை மேற்கொள்ளச் சொல்வது, அதன்மூலம் கமிஷன் பெறுவது போன்ற தொழில்தர்ம மீறல்களில் மருத்துவர்கள் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு மருத்துவக் கவுன்சிலுக்கு உண்டு. ஆனால், அது குறித்து எந்தக் கவலையும் படுவதில்லை, தடுப்பதில்லை என்பதுதான் உண்மை.

நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதைவிட, எவ்வளவு அதிகம் சம்பாதிக்க முடியும் என்பதும், எப்படியெல்லாம் செய்தால் மருத்துவமனையில் அத்தனை படுக்கைகளும், தொடர்ந்து அறுவை சிகிச்சை அறையும் பயன்பாட்டில் இருக்கும்படி செய்யலாம் என்பதும்தான் மருத்துவர்களின் குறிக்கோளாக மாறிவிட்டிருப்பதற்கும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அசிரத்தையும், கவலையின்மையும்தான் காரணம்.

மருத்துவப் படிப்பின் பாடத்திட்டங்களை வகுப்பது, எல்லா மாநிலங்களிலும் அமையும் விதத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவது, மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களை அதிகரிப்பதுடன் பட்டப் படிப்புக்கும் மேற்படிப்புக்கும் இடையே இடைவெளி இருப்பதை உறுதிப்படுத்துவது, மருத்துவர்கள் தொழில்தர்மத்தைக் கடைபிடிப்பதை உறுதிப்படுத்துவது, மருத்துவத்தின் தரத்தை உயர்த்துவது என்று இந்திய மருத்துவக் கவுன்சில் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன.

கண்காணிப்புக் குழு தாற்காலிகமானதாகத்தான் இருக்க முடியும். அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் தேசிய மருத்துவ ஆணையம் அமைத்து மருத்துவத் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com