தீர்வு தனியார்மயம்தான்!

கடந்த இரு நாள்களில் தமிழகத்தில் நடந்துள்ள மூன்று சம்பவங்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். கரூர் வழித்தடத்தில், கரூர் - திருச்சி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் பெட்டி, என்ஜின் இரண்டும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. வீரராக்கியம் என்ற இடத்தில் ரயில் நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டது. அதே நாளில், ஜோலார்பேட்டை ரயில் நிலைய யார்டில் (பணிமனை) நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொர்ணா விரைவு ரயிலின்
Updated on
2 min read

அண்மைக் காலமாக ரயில்வே துறை தனது ஊழியர்கள் மீதான கட்டுப்பாட்டை முற்றிலுமாக இழந்துவருகிறது என்பதைத் தெற்கு ரயில்வேயில் தொடர்ந்து நடைபெற்றுவரும் பல சம்பவங்கள் அம்பலப்படுத்துகின்றன.
 கடந்த இரு நாள்களில் தமிழகத்தில் நடந்துள்ள மூன்று சம்பவங்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். கரூர் வழித்தடத்தில், கரூர் - திருச்சி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் பெட்டி, என்ஜின் இரண்டும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. வீரராக்கியம் என்ற இடத்தில் ரயில் நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டது. அதே நாளில், ஜோலார்பேட்டை ரயில் நிலைய யார்டில் (பணிமனை) நிறுத்திவைக்கப்பட்டிருந்த சொர்ணா விரைவு ரயிலின் ஒரு பெட்டியில் நள்ளிரவில் தீப்பற்றி, முற்றிலும் எரிந்து சாம்பலானது. இரண்டு தீ விபத்துகளுக்கான காரணமும் அறியப்படவில்லை. உயிர்ச்சேதம் இல்லை என்பதாலேயே இந்த நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட வேண்டியவை அல்ல.
 எர்ணாகுளம் விரைவு ரயிலில், மே 27-ஆம் தேதியன்று காரைக்கால் மாவட்ட நீதிபதி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவர் அமர்ந்திருந்த முதல் வகுப்புப் பெட்டியில் ரயில்வே ஊழியர்கள் சிலரும் பயணம் செய்தனராம். இவர்களை ஏன் இந்தப் பெட்டியில் அனுமதிக்கிறீர்கள் என்று நீதிபதி கேட்டதால் பிரச்னையாகி, நீதிபதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பயணச்சீட்டு பரிசோதகர் மற்றும் சில ரயில்வே ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். திருச்சியில் ரயில் நிறுத்தப்பட்டது. ரயில் புறப்படாதபடி அபாயச் சங்கிலியை இழுத்துபிடித்தபடி தடை ஏற்படுத்தினர்.
 போராட்டம் நடத்தியவர்கள் மீது இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கிறது ரயில்வே காவல் துறை. ஆனால், அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திப் பிரச்னை செய்தவர்களின் பெயரைக் குறிப்பிடாமல் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. குற்றவாளிகள் யார் என்று குறிப்பிடாமல் வழக்குப் பதிவு செய்யப்படும் விசித்திரத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறோம்.
 வழக்கு ஒருபுறம் இருக்கட்டும். குளிர்சாதன வசதி செய்யப்பட்ட (ஏ.சி.) பெட்டியில் ரயில்வே ஊழியர்கள் முறையான பயணப்பதிவு இல்லாமல், பணி நிமித்தமாகவேகூட இருந்தாலும், பயணிக்க அனுமதி உள்ளதா? எந்த விசாரணையும் இதுவரை ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படவில்லையே, ஏன்?
 ரயில் நிலைய நடைமேடையில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. போராட்டம் நடத்தியவர்கள் அனைவரையும் கேமராவில் அறிய முடியும். ஆனால், வழக்குப் பதிவு செய்தால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அஞ்சி, தவிர்க்கப்படுகிறது என்று கூறுகிறார்கள். யாருக்காக நிர்வாகம் பயப்படுகிறது? ஊழியர்களுக்கா, இல்லை அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் தொழிற்சங்கங்களுக்கா, இல்லை மேலதிகாரிகளின் முறைகேடுகள் வெளிவரும் என்கிற அச்சத்தினாலா?
 இந்த மாதத் தொடக்கத்தில் சென்னை அருகே, ஒரு விரைவு ரயில் மீது புறநகர் ரயில் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதனால், ஓர் இரவு முழுவதும் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதற்கு சிக்னல் (சமிக்ஞை) சரியாக கொடுக்கப்படவில்லை அல்லது கொடுத்த சிக்னலை மதிக்காமல் ரயில் இயக்கப்பட்டது என்பதுதான் காரணம். இதில் முழுக்க முழுக்க ஓட்டுநர் அல்லது ரயில் நிலைய சிக்னல் தரும் அலுவலர்தான் சம்பந்தப்பட்டுள்ளனர். இதுவரை ரயில்வே நிர்வாகம் யாரையும் பொறுப்பேற்கச் செய்யவில்லை.
 இரு மாதங்களுக்கு முன்பு, பெண் ரயில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் தங்களை வேறு இடங்களுக்குப் பணிமாற்றம் செய்யக்கூடாது என்று ஓர் உயர் அதிகாரியை முற்றுகையிட்டனர். இந்தப் போராட்டத்தில் அந்த அதிகாரி துப்பாக்கியைக் காட்டி சுட்டுவிடுவேன் என்று கூறியதாகப் போராட்டம் நடத்தப்பட்டது. அந்த பெண் பரிசோதகர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், என்ன நடவடிக்கை என்பது யாருக்கும் தெரியாது. அவர்களது குற்றச்சாட்டு உண்மையா என்பதும் விசாரிக்கப்படவில்லை.
 ஊழியர்களின் இத்தகைய போக்குகளால் விபத்து, ரயில் காலதாமதம், பொருள் நட்டம் ஆகியன ஏற்படுகின்றன. இதன் அளவு பல கோடி ரூபாய் அளவுக்கு இருக்கிறது. தார்மீக பலம் இல்லாத காரணத்தால், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் உயர் அதிகாரிகள் மெளனம் காக்கின்றனர். இந்த மெளனம் சம்மதமாகக் கருதப்பட்டு, ஊழியர்களின் மெத்தனமும், அலட்சியமும் மென் மேலும் அதிகரிக்கின்றன.
 ரயில்வே ஊழியர்கள் சிலர், மதுவின் போதையில் பணியாற்றுகிறார்கள். இத்தகைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகம் தைரியமில்லாமல் இருக்கிறது. குடிபோதையில் ரயில்வே ஊழியர்கள் பணிக்கு வருவதைத் தடுக்க, அவர்களை வாய்ஊதும் சோதனைக்கு உள்படுத்தும் திட்டத்தை ரயில்வே இதுவரை அமல்படுத்தவே இல்லை.
 ரயில் ஓட்டுநர்கள், பயணச்சீட்டு பரிசோதகர்கள் போதையில் வருவதை ரயில்வே நிர்வாகம் எவ்வாறு அனுமதிக்கிறது? சிக்னல் கொடுக்கும் பணியும், ரயில் ஓட்டுநரின் திறமையும் மது போதையில் பாதிக்கப்படுகின்றன. இருந்தும் அதைத் தடுக்க நிர்வாகம் தயாராக இல்லை. தவறு செய்யும் ரயில்வே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தொழிற்சங்கங்கள் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதுதான் இதற்கு முக்கியமான காரணம்.
 உயர் அதிகாரிகளும்கூட, பயந்து ஒதுங்கிக்கொள்ளும் நிலை ஏற்படும் என்றால், ரயில்வே நிர்வாகத்தை எப்படி பயணிகளுக்குச் சேவை செய்யும் அமைப்பாக நடத்த இயலும்?
 இதுதான் ரயில்வே ஊழியர்களின், தொழிற்சங்கங்களின் செயல்பாடாகத் தொடருமானால், ரயில்வேயைத் தனியார்மயமாக்குவதுதான் தீர்வாக இருக்கும்!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com