ஆக்கபூர்வமான மாற்றம்!

நீதிபதி ஜே.எஸ். கேஹர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணிமூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டபோது, அரசுக்கும் நீதித் துறைக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்படும் என்று பரவலாக
Updated on
2 min read

நீதிபதி ஜே.எஸ். கேஹர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணிமூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டபோது, அரசுக்கும் நீதித் துறைக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. எல்லாரும் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக, பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் தனது வரம்பை உணர்ந்து செயல்படுகிறது என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரிய ஒன்று.
அதேபோல, அரசுத் தரப்பிலும், அனாவசிய மோதல்களைத் தவிர்த்து, நீதித்துறையின் தேவைகளை அறிந்து செயல்படும் இணக்கமான போக்கு காணப்படுகிறது. அரசுக்கும் நீதித் துறைக்கும், 'நிர்வாகப் புரிந்துணர்வு' குறித்த கருத்து வேறுபாடு தீர்ந்தபாடில்லை என்றாலும்கூட, பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கான நியமனங்களை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நியமனங்கள் எல்லாமே முந்தைய 'கொலீஜியம்' முறையில்தான் முடிவெடுக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அதன் 150-ஆவது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, மிக அதிகமாகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து பைசல் செய்ய நீதித்துறைக்கு அரசு எல்லா உதவிகளையும் தரக் காத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டது, அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் புரிதலுக்கும் நெருக்கத்துக்கும் அடையாளமாகக் கொள்ளலாம்.
'காணொலிக் காட்சி மூலம் விசாரணைக் கைதிகள் சிறையில் இருந்தபடியே விசாரிக்கப்படுவதன் மூலம் காலவிரயமும், பண விரயமும் தவிர்க்கப்படும். அதுமட்டுமில்லாமல், காவல்துறையினரால் காரணமே இல்லாமல் தாமதப்படுத்தப்படும் வழக்குகள் விரைவில் பரிசீலிக்கப்பட்டு விசாரணைக் கைதிகளுக்கு நியாயம் வழங்கப்படும். பெரிய அளவில் நீதித்துறையில் தொழில்நுட்பத்தைப் புகுத்துவதற்கு, நிதியாதாரம்தான் தடையாக இருக்கிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நீதித்துறை போதிய தொழில்நுட்ப மாற்றங்களை செய்து கொள்ள முடியாமல் இருப்பதற்குக் காரணம் போதிய நிதியாதாரம் இல்லாதது மட்டுமல்ல. அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாகவும் சரியான நேரத்திலும் கிடைக்காமல் இருப்பதுதான் முக்கியமான காரணம். நீதித்துறையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஒதுக்கப்படும் நிதி, மாநில அரசின் மூலம் தரப்படாமல் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்குத் தரப்படுமானால், பல மாற்றங்களை செய்துவிட முடியும். மத்திய அரசால் நீதிமன்றங்களின் கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வழங்கப்படும் நிதி, பல மாநிலங்களில் வேறு செலவுகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டு விடுகிறது என்பதுதான் உண்மை.
நீதிமன்றங்களில், குறிப்பாக, உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு மாநில அரசுகளும் ஒரு முக்கியமான காரணம். மத்திய அரசு செய்திருப்பதுபோல, தேவையில்லாத, நடைமுறைக்கு ஒவ்வாத, காலனிய ஆட்சிக்காலச் சட்டங்களையும், விதிகளையும் மாநில அரசுகளும் பட்டியலிட்டு அகற்ற முற்பட வேண்டும். அரசின் வெவ்வேறு துறைகளுக்கு இடையில், நேராகப் பேசித் தீர்த்துக் கொள்ளக்கூடிய விவகாரங்கள் பல, அதிகார வர்க்கத்தின் தன்முனைப்பு (ஈகோ) காரணமாக, நீதிமன்ற வழக்குகளாகி விடுகின்றன.
அதிகாரிகளின் மெத்தனப்போக்காலும், தங்களது தவறுகளை மறைப்பதற்காகவும் தேவையில்லாமல் பொதுமக்கள் நியாயம் கேட்டு நீதிமன்றத்தை அணுக வேண்டி இருக்கிறது. இந்த வழக்குகள் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படுவதால் வழக்குத் தொடுத்த பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்களே தவிர, அதிகாரிகள் அல்ல. அற்பமான காரணங்களுக்காகப் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படும் வழக்குகளில், நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையையும், இழப்பீட்டையும் அதிகார வர்க்கத்திற்கு விதிக்குமேயானால், பல வழக்குகள் நீதிமன்றத்திற்கு வர வேண்டிய அவசியமே இருக்காது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், தேங்கிக் கிடக்கும் முக்கியமான அரசியல் சாசன வழக்குகளை, கோடை கால விடுமுறையில் விசாரிக்க இருப்பதாக அறிவித்திருப்பது பாராட்டுதலுக்கு உரிய முடிவு. உச்சநீதிமன்றத்தின் 28 நீதிபதிகளில் 15 பேர் இந்த ஆண்டு தங்களது கோடை கால விடுமுறைக்கு விடுமுறை கொடுத்துவிட்டுப் பணியாற்ற முடிவெடுத்திருக்கிறார்கள்.
முக்கியமான மூன்று அரசியல் சாசன வழக்குகள் இந்தக் கோடை விடுமுறையில் விசாரிக்கப்பட இருக்கின்றன. முத்தலாக் முறை, முஸ்லிம் தனிச் சட்டத்தின்கீழ் உள்ள பலதார மணம், சமூக ஊடகங்களில் ஒருவரது தனி உரிமைக்கான பாதுகாப்பு (ப்ரைவசி) ஆகியவைதான் விசாரிக்கப்பட இருக்கும் மூன்று வழக்குகள். இவை இப்போது விசாரிக்கப்படாவிட்டால், பல ஆண்டுகள் இனியும் தேங்கிக் கிடக்கும் என்கிற தலைமை நீதிபதியின் கூற்று உண்மையிலும் உண்மை.
நீதிமன்றங்களில் 2.18 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இதில் உச்சநீதிமன்றத்தில் மட்டும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 60,000. ஏற்கெனவே, கீழமை நீதிமன்றங்களில் பிணைக்கால அனுமதி ஒரு வாரத்தில் வழங்கப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி, உயர்நீதிமன்றங்களும், கீழமை நீதிமன்றங்களும் முனைப்புடன் செயல்படுமானால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் கணிசமாகக் குறைப்பது என்பது இயலாதது ஒன்றும்
அல்ல. வழக்குரைஞர்கள் இதற்கு ஒத்துழைப்பார்களா என்கிற கேள்விக்குத்தான் விடை தெரியவில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com