உறவு, ஒருவழிப் பாதையல்ல!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான
Updated on
2 min read

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்படும் என்றும், அருணாசலப் பிரதேசத்தை ஒட்டிய பகுதிகளின் இயல்பு நிலையும், பாதுகாப்பும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சீனா அறிவித்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இன்னும் ஒரு படி மேலே போய், தகுந்த நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவுக்குப் பாடம் கற்பிக்கப்படும் என்றும் சீனா அச்சுறுத்தி இருக்கிறது.
இதெல்லாம் எதற்காக? பெளத்த மதத் தலைவரும், திபெத் மக்களின் மத குருவும், அவர்கள் கடவுளாகவும், மன்னராகவும் போற்றும் தலாய் லாமா அருணாசலப் பிரதேசத்திற்கு விஜயம் செய்திருப்பதற்குத்தான், சீனா இந்த அளவுக்கு ஆத்திரப்படுகிறது. முதலாவதாக, திபெத்திலிருந்து இந்தியாவுக்குத் தப்பியோடி வந்து அடைக்கலம் பெற்ற தலாய் லாமாவைச் சீனா தனது எதிரியாகக் கருதுகிறது. இரண்டாவதாக, தலாய் லாமா இப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அருணாசல பிரதேசத்தைத் தனது பகுதி என்று சீனா உரிமை கொண்டாடுகிறது.
அருணாசலப் பிரதேசத்தைப் பொருத்தவரை, பிரிட்டிஷ் காலத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி மக்மோகன் எல்லைக் கோட்டுக்குக் கீழே இந்திய எல்லைக்குள் வருகிறது. சீனா, மக்மோகன் எல்லைக் கோட்டையே ஏற்றுக் கொள்வதில்லை என்பதுடன், அருணாசலப் பிரதேசத்தைத் தெற்குத் திபெத் என்றுதான் கருதுகிறது.
இந்தப் பிரச்னையில், இந்தியா ஆரம்பம் முதலே தெளிவான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. திபெத்தைச் சீனா சொந்தம் கொண்டாடுவது குறித்து இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், சீனாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து இந்தியாவுக்குத் தப்பியோடி வந்த தலாய் லாமாவுக்கு அடைக்கலம் அளிக்கவும் தயங்கவில்லை. ஹிமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மஸ்தலா என்கிற இடத்தில் தலாய் லாமா தனது சீடர்களுடன் தங்கியிருக்க இந்தியா அனுமதித்திருக்கிறது.
அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் பகுதி என்பதால், இந்தியாவின் எந்த மாநிலத்துக்கும் தலாய் லாமா செல்வதற்குத் தடை விதிக்க முடியாது என்று புது தில்லி தீர்மானமாகவே இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதமே, தலாய் லாமா அருணாசலப் பிரதேசத்திற்குச் செல்வதற்கும், அங்கே உள்ள தவாங் மாகாணத்தில் பிரார்த்தனை நடத்துவதற்கும் இந்திய அரசு தலாய் லாமாவுக்கும் குழுவினருக்கும் அனுமதி வழங்கிவிட்டது.
தலாய் லாமா அருணாசலப் பிரதேசத்துக்குச் செல்வது என்பது ஒன்றும் புதிதல்ல. 1959-இல், அருணாசலப் பிரதேசத்திலுள்ள தவாங் வழியாகத்தான் தலாய் லாமா இந்தியாவுக்குள் நுழைந்தார். 1983 முதல் 2009 வரையிலான 26 ஆண்டுகளில் ஆறு தடவை அவர் அருணாசலப் பிரதேசத்திற்கு விஜயம் செய்திருக்கிறார். 2009-இல் நடந்த அருணாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்
தலில் 72% வாக்குப்பதிவு என்பதுதான் சீனாவைத் திடுக்கிட வைத்த நிகழ்வு. தலாய் லாமாவின் விஜயத்திற்கும் சட்டப்பேரவை வாக்குப்பதிவுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாவிட்டாலும்,
அருணாசலப் பிரதேசம் இந்தியாவுடன் முழுமையான நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள தலாய் லாமாவின் விஜயம்தான் காரணம் என்று சீனா கருதுகிறது.
அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ஏன், பிரதமர் மன்மோகன் சிங் கூட அருணாசலப் பிரதேசத்துக்கு விஜயம் செய்தனர். அதற்கு பெய்ஜிங்கிலிருந்து உடனடியாகக் கண்டனமும் வெளியிடப்பட்டது. அருணாசலப் பிரதேசத்தவர்கள் சீனாவுக்குள் இந்தியக் கடவுச் சீட்டுடன் பிரவேசிக்க முடியாது. அவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை இந்தியப் பிரஜைகளாக சீனா அங்கீகரிப்பதில்லை.
தலாய் லாமா ஏழாவது முறையாக இப்போது விஜயம் செய்யும் தவாங் மடாலயம், திபெத்தின் தலைநகர் லாசாவிலுள்ள போட்டலா அரண்மனைக்கு அடுத்தபடியான உலகிலேயே பெரிய மடாலயம். பெளத்த மத குருவான தலாய் லாமா இந்த மடாலயத்தில் தங்கி இருப்பதும் சீடர்களுக்கு போதனை தருவதும் மிக முக்கியமான நிகழ்வாக, பெளத்த மதத்தினர் கருதுகிறார்கள். இதற்காக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பெளத்த பிக்குகளும், பெளத்த மதத்
தினரும் அருணாசலப் பிரதேசத்திற்கு வந்திருக்கிறார்கள்.
சீனாவால் "பிரிவினைவாதி' என்று முத்திரை குத்தப்பட்ட தலாய் லாமாவுக்கு அங்கீகாரமும் மரியாதையும் தரப்படுவதும், அருணாசலப் பிரதேசத்தின் மீதான தனது உரிமை கோரல் ஏற்றுக் கொள்ளப்படாததும் ஆத்திரம் ஊட்டியிருப்பதில் வியப்பில்லை. அதே
நேரத்தில், இந்தியா உரிமை கோரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரத்தின் வழியாக சீனா சாலை அமைப்பதும், பாகிஸ்தானால் பாதுகாக்கப்படும் மசூத் அஸார் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்குச் சீனா ஆதரவளிப்பதும் எந்த வகையில் சரி என்று சீனாதான் விளக்கம் தரவேண்டும்
இந்தியாவைவிட ராணுவ பலம் அதிகமுள்ள நாடான சீனா, அஹிம்சைக்கும் ஆன்மிகத்துக்கும் அடையாளமாகக் கருதப்படும் 82 வயது தலாய் லாமாவின் மீது ஆத்திரப்படுவது வேடிக்கையாக இருக்கிறது. வர்த்தக ரீதியாக இந்தியாவை அகற்றி நிறுத்தினால், ஏற்கெனவே மெத்தனமாகி இருக்கும் சீனப் பொருளாதாரம்தான் இந்தியாவைவிட அதிகமாக பாதிக்கப்படும் என்பதையும் சீனா உணர வேண்டும்.
இந்திய - சீன உறவு சுமுகமாக இருக்க வேண்டுமானால், சீனாவும் சில விஷயங்களில் விட்டுக் கொடுக்கத் தயாராக வேண்டும். ராஜாங்க உறவுகள் என்பது ஒருவழிப் பாதையல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com