தாமதம் தகாது!

இந்தியக் கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும்
Updated on
2 min read

இந்தியக் கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. வணிக நிமித்தமாக கடந்த ஆண்டு ஈரான் சென்றிருந்த ஜாதவ், திடீரென்று மாயமாக மறைந்தார். அடுத்தாக அவர் குறித்துக் கிடைத்த தகவல், அவர் பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்துக்கொண்டிருந்ததாகக் கூறி கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதுதான். அவர் எதற்காக, எப்படி பலூசிஸ்தானுக்குச் சென்றார் அல்லது கூட்டிச் செல்லப்பட்டார் உள்ளிட்ட விவரங்களை அவரிடம்தான் கேட்டறிய முடியும். ஆனால், அவரை சந்திக்க பாகிஸ்தானிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள்கூட அனுமதிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குல்பூஷண் ஜாதவுக்கு கடந்த திங்கள்கிழமை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது. ஜாதவ் தொடர்ந்து இந்தியக் கடற்படையில் இருப்பதாகவும், இந்தியாவின் "ரா' உளவு அமைப்பு சார்பில் அவர் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பலூசிஸ்தானிலும், கராச்சியிலும் அமைதியை நிலைநாட்டு வதற்காக பாகிஸ்தான் அரசு எடுக்கும் நடவடிக்கைகளை சீர்குலைக்க முற்பட்டதாகவும், நாசவேலைகளில் ஈடுபட்டதாகவும், வேவு பார்க்கும் பணியைச் செய்ததாகவும் அவர்மீது ராணுவ நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா ஒப்புதல் அளித்திருக்கிறார். குல்பூஷண் ஜாதவ், தமக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இரண்டு மாதத்திற்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா முகம்மது ஆசிஃப் தெரிவித்திருக்கிறார்.
குல்பூஷண் ஜாதவ் எப்படி பலூசிஸ்தான் சென்றடைந்தார் என்பது குறித்தும், அவர் தரப்பு விளக்கம் குறித்தும் எந்தவிதத் தகவலையும் தெரிவிக்க பாகிஸ்தான் அரசு மறுக்கிறது. கைது செய்யப்பட்ட வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் அவரது நாட்டுத் தூதரகத்துடன் தொடர்பு கொள்ளும் உரிமையை சர்வதேசச் சட்டம் அளிக்கிறது. இந்தியத் தூதரகம் அவரைத் தொடர்பு கொள்ள 13 முறை பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை வைத்தும், அனுமதி அளிக்கப்படவில்லை என்பதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது. குறைந்தபட்சம், குல்பூஷண் ஜாதவ் ராணுவ நீதிமன்றத்தின் விசாரணைக்கு உள்படுத்தப்படுகிறார் என்கிற விவரத்தைக்கூடப் பாகிஸ்தான் அரசு இந்தியத் தூதரகத்திற்குத் தெரிவிக்கவில்லை.
குல்பூஷண் ஜாதவ் உளவாளி என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்டதற்கும், நேபாளத்தில் பாகிஸ்தான் உளவாளி ஒருவர் கைது செய்யப்பட்டதற்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று தெரிகிறது. லெப்டினன்ட் கர்னல் முகம்மது ஹபீப் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யைச் சேர்ந்தவர். அவர், இந்திய எல்லையை ஒட்டிய நேபாள நகரமான லும்பினியில் இருந்ததாகவும், கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி மாயமாக மறைந்ததாகவும் தெரிகிறது. அதற்கும் குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்ததற்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
ஈரானிலிருந்து குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தானுக்கு கடத்திச் சென்றது முகம்மது ஹபீப் என்றும், ஜாதவ் குறித்து விசாரித்து வந்த இந்திய உளவு அமைப்புகள் அதை மோப்பம் பிடித்துத் தெரிந்து கொண்டன என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் பத்திரிகை செய்திகளின்படி, நேபாளத்திலுள்ள லும்பினியில் முகம்மது ஹபீப் இந்திய உளவுத் துறையினரால் சிறை பிடிக்கப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
குல்பூஷண் ஜாதவுக்குத் தூக்குத் தண்டனை விதித்திருப்பதே, முகம்மது ஹபீபை விடுவிப்பதற்காகவும், அவர் மூலம் பாகிஸ்
தானின் ராணுவம், உளவு அமைப்புகள் குறித்த தகவல்களை இந்தியத் தரப்பு பெற்றுவிடாமல் இருப்பதற்காகவும் செய்யப்படும் உத்தியாகக்கூட இருக்கலாம். குல்பூஷண் ஜாதவை விடுதலை செய்வதற்கு, முகம்மது ஹபீபைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து இந்தப் பிரச்னைக்குப் பாகிஸ்தான் முடிவு காணும் என்று நம்ப இடமிருக்கிறது.
அதெல்லாம் இருந்தாலும்கூட, சில அடிப்படையான விஷயங்
களில் தெளிவு இல்லாமல் இருக்கிறது. குல்பூஷண் ஜாதவிடம் இந்தியக் கடவுச் சீட்டு இருக்கிறது. அவர் ஈரான் நாட்டுக்குச் செல்வதற்கான நுழைவு அனுமதியும் பெற்றிருக்கிறார். அப்படி இருக்கும்போது அவரை "உளவாளி' என்று பாகிஸ்தான் முத்திரை குத்துவது வேடிக்கையாக இருக்கிறது. உளவு பார்க்கச் செல்பவர் கடவுச்சீட்டுடனா இன்னொரு நாட்டுக்குள் அனுமதி இன்றி நுழைவார்?
குல்பூஷண் ஜாதவ் உளவாளி என்றே வைத்துக்கொள்வோம். அதற்காக அவர் கைது செய்யப்பட்டாலும், முறையான நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்பட வேண்டுமே தவிர, ராணுவ நீதிமன்றத்தில் அல்ல. போர்க்குற்றவாளிகளும், கைதிகளும்தான் ராணுவ நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவார்கள். வேற்று நாட்டுப் பிரஜை ஒருவரை, தகுந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லாமல் ராணுவ நீதிமன்றம் விசாரித்து அவருக்கு மரண தண்டனை வழங்குவது என்பது இதுவரை கேள்விப்படாதது.
வெளிநாடுகளுக்கு வியாபார நிமித்தமாகச் செல்பவர்கள் பாகிஸ்தானுக்குக் கடத்திச் செல்லப்பட்டு உளவாளிகள் என்கிற பெயரில் தூக்கிலிடப்படுவார்கள் என்றால், இனிமேல் வெளிநாடு
களுக்குப் பயணம் செல்வதுகூட ஆபத்தாக அல்லவா தெரிகிறது. உடனடியாக பிரதமர் அலுவலக அளவில் பேச்சுவார்த்தை நடத்தி குல்பூஷண் ஜாதவின் விடுதலையை உறுதிப்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com