மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (மி.வா.இ.) அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து, தேர்தல் தோல்விக்கு அதை நமது அரசியல் கட்சிகள் காரணமாகக் குறிப்பிடுவது வழக்கமாகிவிட்டது. 2009 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, இன்றைய ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, மி.வா.இ. கைவிடப்பட்டுப் பழையபடி வாக்குச்சீட்டு முறைக்கே மாற வேண்டும் என்று வலியுறுத்தியது. அதையே தோல்வியைத் தழுவிய ஏனைய கட்சிகளும் வலியுறுத்தின.
இப்போது ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகு, மீண்டும் மி.வா.இ. கூடாது என்கிற குரல் எழுப்பப்படுகிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை இதே பிரச்னையை முன்வைத்துத் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சி உச்சநீதிமன்றத்தை அணுகி, மி.வா.இ. பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கே தொடுத்திருக்கிறது.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. பெற்ற அபார வெற்றிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதுதான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறது பகுஜன் சமாஜ் கட்சி. தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் இன்னொருபடி மேலே போய், மி.வா.இயந்திரங்களைத் தவறாக பயன்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கத் தயார் என்று சவால் விடுத்திருக்கிறார். மி.வா.இயந்திரத்திற்கு இப்போது தீவிரமான எதிர்ப்பு எழுந்திருப்பதற்கு சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் நடந்த செயல்முறை விளக்கத்தில் நடந்த குளறுபடிதான் காரணம்.
தேர்தல் ஆணையம் மே முதல் வாரத்தில் இருந்து ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு மி.வா.இயந்திரத்துக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்க வாய்ப்பளிப்பதாகவும், யார் வேண்டுமானாலும் அதில் குறைபாடு இருந்தால் அதை நிரூபிக்கலாம் என்றும் சவால் விடுத்திருக்கிறது. இதேபோல, 2009-இல் மி.வா.இயந்திரம் குறித்து பா.ஜ.க. சர்ச்சை எழுப்பியபோதும், தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டை நிரூபித்துக் காட்ட அவகாசம் அளித்தது.
தேர்தல் வாக்களிப்பு முறையில் மின்னணு வாக்குப்பதிவு ஏற்படுத்தி இருக்கும் புரட்சி சாதாரணமானதல்ல. உலகத்திலேயே வெற்றிகரமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்திய ஒரே ஜனநாயக நாடு நமது இந்தியா மட்டும்தான். மி.வா.இயந்திரம் வருவதற்கு முன்னால், வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்படுவது, கள்ள வாக்குகள் பதிவாவது, ஆளும்கட்சி தனது முகவர்களின் உதவியுடன் வாக்குச் சீட்டுகளில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக முத்திரை பதிப்பது என்பவையெல்லாம் சர்வசாதாரணமாக இருந்தன.
மிகவும் நெருக்கமான தேர்தல் போட்டிகளில், சரியாகப் பதிவாகாத முத்திரைகளால் செல்லாத வாக்குகள் பல வெற்றிகளை மாற்றி எழுதின. 1961 முதல் 2003 வரையிலான காலகட்டத்தில், பல தொகுதிகளில் வெற்றி - தோல்விக்கு இடையேயான வாக்கு வித்தியாசத்தைவிட, செல்லாத வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கிறது. மி.வா.இ. வந்தபிறகு செல்லாத வாக்குகள் இல்லை என்பதுடன், தேர்தலில் வாக்கு எண்ணுவதற்கான காலவிரயமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. 2004 முதல் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் மி.வா.இயந்திரங்கள் பயன்படுத்த தொடங்கிய பிறகு தேர்தலில் கள்ள வாக்குச் செலுத்துவது, வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்படுவது, தேர்தல் வன்முறை, செல்லாத வாக்குகள் ஆகியவை பெருமளவு தடுக்கப்பட்டுவிட்டன.
மேலைநாடுகளில் பரிசோதனை செய்து கைவிடப்பட்ட இணைய வாக்களிப்பு முறைபோல அல்லாமல், மின்னணு வாக்குப்பதிவு என்பது வித்தியாசமானது. தேர்தல் அதிகாரி இயக்கிய பிறகுதான் இந்த இயந்திரங்கள் வாக்குகளைப் பதிவு செய்யும். அதேபோல, அவர் கட்டுப்பாட்டு இயந்திரத்தின் மூலம் முடக்கிய பிறகு அதில் மாற்றம் செய்ய முடியாது. அதேபோல, ஒவ்வோர் இயந்திரத்திற்கும் தனித்தனியான மென்பொருள் இயக்கம் இருப்பதால் அதில் மாற்றம் செய்துவிட முடியாது. வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இயந்திரம் ஒவ்வொன்றும் இயக்கப்படுவதால் அதில் வாக்களிப்புக்கு முன்போ, பின்போ எந்தவித மாற்றமோ திருத்தமோ செய்துவிட முடியாது என்கிறது தேர்தல் ஆணையம்.
மின்னணு வாக்குப்பதிவு என்பது தேர்தல் முறையில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சீர்திருத்தம், வளர்ச்சி. அதைக் குறை காண்பதும், பின்னோக்கிச் சென்று மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்குப் போவதும் சரியல்ல. அதேநேரத்தில், எந்தவொரு தேர்தலும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அமைவது அவசியம். 2013-இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுபோல வாக்குப்பதிவுடன், வாக்காளர் விரும்பிய சின்னத்தில்தான் வாக்கு பதிவாகி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், சின்னத்துடன் கூடிய ஒப்புகைச் சீட்டு பெறும் வகையில் மி.வா.இயந்திரங்களில் தொழில்நுட்பம் இணைக்கப்பட வேண்டும்.
வரும் 2019 மக்களவைத் தேர்தலில் வாக்கு ஒப்புகைச் சீட்டு பெறும் வகையில் இணைப்பை ஏற்படுத்த 16 லட்சம் அச்சு இயந்திரங்கள் தேவைப்படுவதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. இப்போதே தயாரிப்பாளர்களிடம் அதற்கான ஒப்பந்தத்தை செய்தால்தான் தேர்தலுக்கு முன்னால் அச்சு இயந்திரங்கள் கிடைக்கும். தேர்தல் ஆணையம் அதற்காக ரூ.3,174 கோடி தேவைப்படுவதாக மத்திய அரசிடம் தெரிவித்திருக்கிறது.
ஜனநாயகம் என்பது செலவு அதிகமாகும் தேர்தல் முறை என்பதை மறந்துவிடக் கூடாது. மத்திய அரசு தாமதிக்காமல் தேர்தல் ஆணையத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கி, 2019 மக்களவைத் தேர்தல் சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில், வாக்கு உறுதிச் சீட்டுடன் நடைபெற வழிகோல வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.