காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கூடினால் மட்டுமே போதாது!

முன்னாள் பிரதமர் இந்தர் குமார் குஜ்ராலின் மகனும், அகாலிதளம் கட்சியின் உறுப்பினருமான நரேஷ் குஜ்ரால் கடந்த ஆண்டே தாக்கல் செய்திருந்த தனிநபர் மசோதா கடந்த வெள்ளிக்கிழமை

News image
Updated On :6 ஆகஸ்ட் 2018, 8:03 pm

ஆசிரியர்

முன்னாள் பிரதமர் இந்தர் குமார் குஜ்ராலின் மகனும், அகாலிதளம் கட்சியின் உறுப்பினருமான நரேஷ் குஜ்ரால் கடந்த ஆண்டே தாக்கல் செய்திருந்த தனிநபர் மசோதா கடந்த வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநிலங்களவை இரண்டு மணி நாற்பது நிமிடங்களுக்கு ஆக்கபூர்வமான விவாதத்தில் ஈடுபட்டது. நாடாளுமன்றம் நூறு நாள்களுக்குக் குறையாமல், குறிப்பிட்ட காலஅளவு செயல்பட்டாக வேண்டும் என்பதுதான் நாடாளுமன்ற (செயல்திறன் அதிகரித்தல்) மசோதா -2017-இன் நோக்கம். இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல், கால் நூற்றாண்டு காலம், நாடாளுமன்றத்தின் நேரம் முறையாக செலவிடப்பட்டு, விவாதங்களின் மூலம் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டித் தனது மசோதாவை தாக்கல் செய்தார் நரேஷ் குஜ்ரால்.
பல ஐரோப்பிய நாடுகளில், நாடாளுமன்றங்கள் குறைந்தது 200 நாள்களாவது கூடுகின்றன, விவாதிக்கின்றன, அரசுத் தரப்பும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பொறுப்புடன் பதிலளித்துப் பணியாற்றுகின்றன. நாடாளுமன்றம் 10 மணிக்கே கூடவேண்டும் என்றும், ஆண்டுதோறும் முக்கியமான தேசியப் பிரச்னைகளை மட்டுமே விவாதிப்பதற்காக ஒரு கூட்டத்தொடர் அமைய வேண்டும் என்பதும் கூட அன்று நடந்த விவாதத்தில் வெளியிடப்பட்ட கருத்துகள். மசோதா குறித்த விவாதம் முற்றுப்பெறவில்லை, தொடரும்.
நாடாளுமன்றம் செயல்பட வேண்டும், முறையாகக் குறிப்பிட்ட நாள்கள் கூடியாக வேண்டும் என்று உறுப்பினர்கள் கவலை தெரிவிக்க முன்வந்திருப்பது வரவேற்புக்குரிய மாற்றம். இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வைப் போல, கடந்த 20 ஆண்டுகளில் எந்தவோர் அமர்வும் வீணானதில்லை. ஒரு மாதம் நடந்த இரண்டாவது அமர்வில் ஏறத்தாழ 120 மணிநேரம் கூச்சல் குழப்பத்தில் வீணடிக்கப்பட்டது. மாநிலங்களவையில் பட்டியலிடப்பட்டிருந்த 419 நட்சத்திரக் கேள்விகளில் வெறும் 5 மட்டும்தான் எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அவை எத்தனை நாள்கள் கூடுகிறது என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முக்கியம், அவை எப்படி செயல்படுகிறது, விவாதங்கள் எப்படி நடைபெறுகின்றன என்பதும். அரசின் நோக்கங்களும், திட்டங்களும், செயல்முறைகளும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும், ஐயப்பாடுகளுக்கும் உள்ளாக்கப்படும்போதுதான், மக்களின் வரிப்பணம் வீணாகாமல் முறையாக செலவழிக்கப்படுவதை உறுதிப்படுத்த முடியும். நாடாளுமன்றத்தின் நோக்கமே அதுதான்.
2018-19-க்கான நிதிநிலை அறிக்கையின்படி, தற்போது பல்வேறு துறைகளுக்கான அரசின் ஒதுக்கீடு ரூ.24.42 லட்சம் கோடி. இதல்லாமல், மத்திய அரசு நிறுவனங்கள் ரூ. 4.78 லட்சம் கோடி செலவிடும். அதாவது, மத்திய அரசு இந்த நிதி நிலையாண்டில் ரூ.29.20 லட்சம் கோடி செலவிட இருக்கிறது. நாள் ஒன்றுக்கு ரூ.8,001 கோடி அல்லது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.333 கோடி நமது வரிப்பணம் அரசால் செலவிடப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகை இந்திய அரசால் துறைகளுக்கு ஒதுக்கப்பட்டு, பல்வேறு திட்டங்களுக்காகச் செலவிடப்படுகிறதே, அது குறித்து நாடாளுமன்றம் எந்த அளவுக்கு விவாதிக்கிறது, ஆய்வு செய்கிறது என்பதுதான் முக்கியம்.
கடந்த மார்ச் 13-ஆம் தேதி 90-க்கும் அதிகமான அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, 200-க்கும் அதிகமான திருத்தங்களுடன் மக்களவையால் எந்தவித விவாதமும் இல்லாமல் 30 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரின் ஊதிய உயர்வு உள்ளிட்ட மசோதாக்களும் அடக்கம். மக்களவையில் இப்படி என்றால், மாநிலங்களவையில் அதைவிட மோசம். நிதிநிலை அறிக்கையை அந்த அவை விவாதிக்கவே இல்லை.
இந்திய அரசு, மத்திய அரசுத் திட்டங்களுக்காக இந்த ஆண்டு ரூ.7.08 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. பல்வேறு துறைகளில் 99 மானியக் கோரிக்கைகளுக்கு இந்த நிதி வழங்கப்படுகிறது. தேசிய இளம் தலைவர்கள் திட்டம் (ரூ.20 கோடி), தேசிய கட்டுப்பாடு திட்டம் (ரூ.5 கோடி), நதிகள் பாதுகாப்புத் திட்டம் (ரூ.770 கோடி), தூய்மை கங்கைத் திட்டம் (ரூ.2,300 கோடி), வெளிநாட்டு விளம்பரம் (ரூ.454 கோடி), ஒருங்கிணைந்த கம்பளி மேம்பாட்டுத் திட்டம் (ரூ.11.45 கோடி), பட்டியல் இனத்தவர், பிற்பட்ட வகுப்பு மாணவர்கள் ஊக்க ஊதியத் திட்டம் (ரூ.500 கோடி), பஞ்சாயத்துகளை இணையத்தில் இணைக்கும் திட்டம் (ரூ.20 கோடி) இப்படி எத்தனை எத்தனையோ நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்காக அரசால் ரூ.4.94 லட்சம் கோடி செலவிடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டும் கட்டமைப்புக்காக ரூ.5.97 லட்சம் கோடியை ஒதுக்கி, அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரித்து வளர்ச்சிக்கும் வழிகோலியிருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு செலவழித்த ரூ.4.94 லட்சம் கோடியில் எத்தனை புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின, வளர்ச்சியின் அளவு என்ன என்று கேள்வி எழுப்ப வேண்டிய கடமை உறுப்பினர்களுக்கு இல்லையா? அப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்து, வாக்களித்த மக்களுக்கும் வரி செலுத்தியவர்களுக்கும் விளக்கம் தர வேண்டிய கடமை அரசுக்கு இல்லையா?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், அரசியல் கட்சிகள் குறித்துப் பேசவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குறித்து மட்டுமே குறிப்பிடுகிறது. நரேஷ் குஜ்ரால் கோருவதுபோல, நாடாளுமன்ற, சட்டப் பேரவைகள் குறிப்பிட்ட காலஅளவு நாள்கள் கூடினால் மட்டும் போதாது. ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொள்ளவும் வேண்டும். அதற்குப் பெயர்தான் ஜனநாயகம். உறுப்பினர்கள் கூடிக் கலைவதால் யாருக்கு என்ன லாபம்?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.