நைட்ரஜன் ஆபத்து!

ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும்  பிரான்டியர்ஸ் அறிக்கை என்கிற சுற்றுச்சூழல் அறிக்கை ஒன்றை வெளியிடுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும்  பிரான்டியர்ஸ் அறிக்கை என்கிற சுற்றுச்சூழல் அறிக்கை ஒன்றை வெளியிடுகிறது. 2019-ஆம் ஆண்டுக்கான  பிரான்டியர்ஸ் அறிக்கையில் நைட்ரஜன் மாசு குறித்து ஒரு தனிப் பகுதியே அதில் சேர்க்கப்பட்டிருப்பது எந்த அளவுக்கு நைட்ரஜன் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துரைக்கிறது. 
 நைரோபியில் கடந்த மார்ச் 4-ஆம் தேதி  ஐ.நா.வின் சுற்றுச்சூழல் அவை வெளியிட்டிருக்கும்  பிரான்டியர்ஸ் அறிக்கை  சர்வதேச அளவிலான வேளாண் ஆய்வாளர்களையும், சூழல் ஆய்வாளர்களையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. விலங்கின வளர்ப்பு, விவசாயம், போக்குவரத்து, தொழிற்சாலைகள், எரிசக்தித் துறை ஆகியவற்றின் வளர்ச்சி நைட்ரஜன் சார்ந்த வேதியியல் பொருள்களின் பயன்பாட்டு அளவை மிக அதிகமாக உயர்த்தியிருப்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 
நைட்ரஜனை ஆதாரமாகக் கொண்ட அமோனியா, நைட்ரேட், நைட்ரிக் ஆக்ஸைடு, நைட்ரஸ் ஆக்ஸைடு ஆகியவை நமது சூழலியலில்  கலந்து சுற்றுச்சூழலுக்கு  மட்டுமல்லாமல்,  நேரிடையாகவே மனித இனத்துக்கு  மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவது இப்போது கண்டறியப்பட்டிருக்கிறது. இது குறித்த விழிப்புணர்வு  இல்லாமல் இருப்பது மிகப் பெரிய பிரச்னையாக மாறக்கூடும் என்று அந்த அறிக்கை  சுட்டிக்காட்டுகிறது.
நைட்ரஜன் சார்ந்த வேதியியல்  பொருள்கள் மனித இனத்துக்கு நினைத்துப் பார்க்க முடியாத  பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கரியமில வாயுவைவிட 300 மடங்கு வீரியம் உள்ள பசுமையில்ல வாயுவை நைட்ரஜன் சார்ந்த வேதியியல் வாயுக்கள் ஏற்படுத்தும்.   பிரான்டியர்ஸ் அறிக்கையின்படி உலகின் சூழலியலுக்கும், சுகாதாரத் துறைக்கும் நைட்ரஜன் மாசால் ஏற்படுத்தப்படும்  பாதிப்பின் அளவு 340 பில்லியன் டாலரைவிட (ரூ.24 லட்சம் கோடி)அதிகம்.  இத்தனை நாளும் இது குறித்த தீவிரமான கவலையோ, இதை எதிர்கொள்ளும் முயற்சியோ எடுக்காமல் இருந்துவிட்டது  மனித இனத்தின் மிகப் பெரிய தவறு என்று 2019-க்கான  பிரான்டியர்ஸ் அறிக்கை வெளிவந்த பிறகுதான் தெரிய வந்திருக்கிறது.
உலகில் வாழும் உயிரினங்களுக்கெல்லாம் நைட்ரஜன் என்பது மிக முக்கியமான வேதியியல் பொருள். புரதம் உள்ளிட்ட மனித உடலுக்குத் தேவையான  உயிரி வேதியியல் பொருள்களில் இன்றியமையாததாக  நைட்ரஜன் திகழ்கிறது. அதே நேரத்தில் ரசாயன உரம், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஆகியவற்றில்  நைட்ரஜனின் அதிகப்படியான பயன்பாடு மோசமான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். அதனால்தான் இன்டர்நேஷனல்  நைட்ரஜன் இனிஷியேட்டிவ் என்கிற அமைப்பின் இப்போதைய தலைவரான இந்தியாவைச் சேர்ந்த ரகுராம் உள்ளிட்ட விஞ்ஞானிகள் நைட்ரஜனை புதிய கரியமிலம் என்று குறிப்பிடுகிறார்கள்.  அவர்கள் சர்வதேச அளவில் நைட்ரஜனையும், கார்பனையும் (கரியமிலம்) ஒரேபோல எதிர்கொள்ள வேண்டும் என்று  வலியுறுத்துகிறார்கள்.
அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கும் அடுத்தபடியாக  ரகுராமின் தலைமையில் இந்திய விஞ்ஞானிகள் நைட்ரஜனால் ஏற்படும்  சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மிகப் பெரிய ஆய்வை நடத்தி வருகின்றனர். 2017-ஆம் ஆண்டு முதல் இந்திய விஞ்ஞானிகளால் நடத்தப்படும் ஆய்வுகள் குறித்து  பிரான்டியர்ஸ் அறிக்கை யில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விஞ்ஞானிகள் வட்டத்தைக் கடந்து  நைட்ரஜன் குறித்த விழிப்புணர்வு தெரியாமலும், அங்கீகரிக்கப்படாமலும் இருப்பது, அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
இந்திய நைட்ரஜன் மதிப்பீடு என்கிற ஆய்வறிக்கையை ரகுராம் தலைமையிலான விஞ்ஞானிகள் வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். அதன்படி, இந்தியாவில் நைட்ரஜன் மாசு ஏற்பட மிக முக்கியமான காரணம்  விவசாயம் என்பது அவர்களால் சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது.  இந்தியாவைப் பொருத்தவரை சுமார் 3.7 கோடி  ஹெக்டேர் அளவில் நெல்லும், 2.7 கோடி ஹெக்டேர் அளவில் கோதுமையும் பயிரிடப்படுகின்றன.  இந்தியாவின் மொத்த சாகுபடி பரப்பில்  பெரும்பான்மைப் பகுதியை நெல்லும், கோதுமையும்தான்  பங்குபோட்டுக் கொள்கின்றன. 
நெல், கோதுமை சாகுபடியில் அதிகமான அளவு நைட்ரஜன் சார்ந்த ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய ரசாயன உர உற்பத்தியாளர்கள் சங்கத்தின் புள்ளிவிவரப்படி, ஆண்டுதோறும் சுமார் 1.7 கோடி டன் நைட்ரஜன்  சார்ந்த ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் நெல், கோதுமை ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும் உரங்களிலுள்ள 33% நைட்ரஜன்  மட்டுமே  நைட்ரேட்டுகளாக அந்தப் பயிர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.  மீதமுள்ள 67% நைட்ரஜன்  பூமியில் தங்கிவிடுகிறது. அது சுற்றிலுமுள்ள பகுதிகளை மாசுபடுத்தி அதனால் சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்துக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.  இதை இந்திய நைட்ரஜன் மதிப்பீடு சுட்டிக் காட்டியிருக்கிறது.
ஐ.நா. சபையின்  சுற்றுச்சூழல் அவையில்  இந்திய அரசு நைட்ரஜன் மாசு குறித்து தீர்மானம் ஒன்றை வரும் மார்ச் 11-ஆம் தேதி கொண்டுவர இருக்கிறது. இதுவரை இந்தியா இதுபோன்ற முக்கியமான எந்தத் தீர்மானத்தையும் வலியுறுத்தியதில்லை என்பதிலிருந்து  இந்தத் தீர்மானத்தின் முக்கியத்துவம் உணரப்படுகிறது.  
இந்தியாவின் இந்தத் தீர்மானத்துக்கு பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. சர்வதேச அளவில் இந்தத் தீர்மானம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பவளப் பாறைகள், பசுமைக் காடுகள், நீர்வாழ் உயிரினங்கள், நீர்நிலைகள் என்று  பரவலான பாதிப்பை நைட்ரஜன் மாசு ஏற்படுத்திவரும் நிலையில், இதை எதிர்கொள்ள மனித இனம் முனைப்புடன் செயல்பட்டாக வேண்டும். நைட்ரஜனால் ஏற்படும் நன்மைகளும், அதே நேரத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் மாசும் கொள்கை அளவில் ஆய்வு செய்யப்பட்டு, சர்வதேச அளவில் நைட்ரஜன் குறித்த விவாதம் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com