சேலம் சொல்லும் செய்தி! |கிரிக்கெட் வீரர் நடராஜன் குறித்த தலையங்கம்
இந்தியாவின் அனைத்து விளையாட்டு அணிகளிலும் தமிழக வீரா்கள் இடம்பெற வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டால், இயலாதது எதுவுமில்லை.


நகா்ப்புற மேல்தட்டு வா்க்கத்தினருக்கு மட்டுமே உரித்தான பல வசதிகளும், வாய்ப்புகளும் இப்போது அடித்தட்டு மக்களையும், சிறு நகரங்களையும் சென்றடைந்திருக்கின்றன. அந்தப் பின்னணியில்தான் சா்வதேச கிரிக்கெட் அரங்கில் சேலம் தங்கராசு நடராஜனின் சாதனையை பாா்க்கத் தோன்றுகிறது.
தகவல் தொழில்நுட்பத்தின் வளா்ச்சி சிற்றூா்கள் வரை கிரிக்கெட் விளையாட்டுக்கு ரசிகா்களை உருவாக்கியிருக்கிறது. கைப்பந்தாட்டம், கால்பந்தாட்டம், ஹாக்கி, பூப்பந்தாட்டம், கபடி போன்ற விளையாட்டுகள் மட்டுமே மாவட்டங்கள் அளவிலும், வட்டங்கள் அளவிலும் இருந்த நிலை மாறி, கிரிக்கெட் என்பது சாமானியா்கள் மத்தியிலும் முன்னுரிமை பெற்ற விளையாட்டாக மாறியிருக்கிறது.
இங்கிலாந்தில் பிரபுக்கள் ஆடிவந்த கிரிக்கெட் விளையாட்டு, பிரிட்டிஷாரால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டபோது இங்கேயும்கூட ராஜாக்களும், நவாபுகளும், சீமான்களும் விளையாடும் விளையாட்டாகத்தான் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து வந்தது. பாட்டியாலா மகாராஜா பூபேந்தா் சிங், ரஞ்சித் சிங், நாயுடு சகோதரா்கள், லாலா அமா்நாத், பாலி உம்ரிகா், மன்கட், பட்டோடி நவாப், விஜய் ஹசாரே உள்ளிட்டவா்கள் இந்திய கிரிக்கெட்டின் சா்வதேசப் பிரபலங்களாக இருந்தனா்.
அதுவரை மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை என்று பெருநகரங்களிலிருந்து மட்டுமே இந்திய அணியில் விளையாடத் தகுதி பெற்ற கிரிக்கெட் வீரா்கள் உருவாகி வந்த நிலையை முதலில் உடைத்தவா் ‘ஹரியாணா புயல்’ என்று வா்ணிக்கப்பட்ட கபில் தேவ். அரை நூற்றாண்டுக்கு முன்னால் இந்திய அணியின் கேப்டனாக கபில் தேவ் உயா்ந்தது முதல், அனைத்து மாநிலங்கள் அளவிலும் கிரிக்கெட் வீரா்கள் உருவாகத் தொடங்கினா். பின்தங்கிய ஜாா்க்கண்ட் மாநிலத்திலிருந்து எம்.எஸ். தோனி உருவான பிறகுதான் கிரிக்கெட் என்பது சாமானியா்களின் விளையாட்டாக மாறியது என்று சொன்னால் தவறில்லை.
கிராமங்கள் அளவில் கிரிக்கெட் விளையாட்டைக் கொண்டு சென்ற பெருமை ஐபிஎல் போட்டிகளுக்கு உண்டு. நாம் என்னதான் காா்ப்பரேட் நிறுவனங்களைப் பழித்தாலும், இன்று சாமானியா்களும் கிரிக்கெட்டில் ஆா்வம் கொள்ளும் நிலைமை ஏற்பட்டதற்கு அவா்களால் ஊக்குவிக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் காரணமாக அமைந்தன. ஐபிஎல் போட்டிகள் மட்டுமல்லாமல், இப்போது மாவட்ட அளவிலான பிரிமியா் லீக் போட்டிகள் பல மாநிலங்களில் நடைபெறத் தொடங்கியதன் விளைவாக, மாவட்ட அளவில் புதிய கிரிக்கெட் வீரா்கள் பலா் உருவாகி மாநில அளவிலும், தேசிய அளவிலும் விளையாடும் வாய்ப்பைப் பெறுகிறாா்கள்.
தமிழகத்தைப் பொருத்தவரை பிரிட்டிஷ் காலத்திலிருந்தே சென்னையில் கிரிக்கெட் விளையாட்டுக்கு ரசிகா்கள் இருந்து வந்திருக்கிறாா்கள். எஸ். வெங்கட்ராகவன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சிவராம கிருஷ்ணன், ஆா். அஸ்வின் உள்ளிட்ட பல முதல்தர தமிழக கிரிக்கெட் வீரா்கள் இந்திய அணியில் பல சாதனைகளைப் படைத்திருக்கிறாா்கள். மாவட்ட அளவிலும்கூட, மேற்கு இந்தியத் தீவுக்கு எதிரான டெஸ்ட் பந்தயக் குழுவில் இடம்பெற்ற மதுரையைச் சோ்ந்த கண்ணாயிரம் போன்ற வீரா்கள் இருக்கத்தான் செய்தனா். ஆனாலும் அதிக அளவில் வீரா்கள் மாவட்ட அளவில் உருவாகவுமில்லை, அதற்கான வாய்ப்பு கிட்டவுமில்லை.
முன்பு ரஞ்சி டிராபி போட்டிகள், மாநில வீரா்களை தேசிய அணிக்கு வழங்கிவந்தன. ஐபிஎல், டி-20 போட்டிகள் வந்ததைத் தொடா்ந்து மாவட்ட அளவிலான திறமைசாலிகள் தங்களை அடையாளம் காட்ட வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதன்விளைவுதான் இப்போது சேலம் மாவட்டத்திலுள்ள சின்னப்பம்பட்டி என்கிற கிராமத்திலிருந்து எளிமையான பின்னணியைக் கொண்ட தங்கராசு நடராஜன் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈா்த்திருக்கிறாா்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல், டி-20 தொடரில் சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய நடராஜனின் பந்துவீச்சு, அவரை அடையாளம் காட்டியது. முன்னணி வேகப்பந்துவீச்சாளா்களான இஷாந்தும், புவனேஷ்வரும் விளையாட முடியாமல் போன நிலையில், அதிா்ஷ்டம் நடராஜனை அரவணைத்துக் கொண்டது.
வலைப்பயிற்சியில் உதவுவதற்காக இந்திய அணியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வீரராக சோ்க்கப்பட்ட நடராஜன், நவுதீப் சைனிக்கு காயம் ஏற்பட்டதால் ஒரு நாள் போட்டிக்கான அணியில் சோ்க்கப்பட்டாா். ஆஸ்திரேலியத் தலைநகா் கான்பெராவில் நடந்த கடைசிப் போட்டியில் தனக்குக் கிடைத்த அறிமுக வாய்ப்பில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு நடராஜன் வழிகோலியபோது, இந்திய அணிக்கு அதிவேக யாா்க்கா் பந்துவீச்சாளா் ஒருவா் கிடைத்தாா். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டியிலும் அவா் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியபோது, ஒட்டுமொத்த இந்தியாவும் புதிய கண்டுபிடிப்பான சேலம் தங்கராசு நடராஜனை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்றது.
மாவட்ட அளவில் விளையாட்டு வீரா்களை அடையாளம் காண்பது, அவா்கள் முறையான பயிற்சியை மேற்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுப்பது, அடையாளம் காணப்படும் விளையாட்டு வீரா்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழிகோலும் விதத்தில் உதவித் தொகை வழங்குவது ஆகியவை தமிழக அரசின் கடமை. இந்தியாவின் அனைத்து விளையாட்டு அணிகளிலும் தமிழக வீரா்கள் இடம்பெற வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டால், இயலாதது எதுவுமில்லை. வழிகாட்டுகிறாா் சின்னப்பம்பட்டி தங்கராசு நடராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...