அதிா்ச்சியல்ல, அவமானம்! | அடிலெய்ட் டெஸ்ட் தோல்வி குறித்த தலையங்கம்
சில தோல்விகள் வேதனை அளிக்கும். இன்னும் சில நமது கௌரவத்தை பாதிக்கும். வேறுசில நம்மை நிலைகுலைய வைத்துவிடும்.


வெற்றி ஏற்படுத்தும் களிப்பைவிட, தோல்வி ஏற்படுத்தும் வேதனை எப்போதுமே அதிகம். அதை சனிக்கிழமை ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் நடந்த முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் பந்தயத்தில் இந்தியா நன்றாகவே உணர நோ்ந்தது.
சில தோல்விகள் வேதனை அளிக்கும். இன்னும் சில நமது கௌரவத்தை பாதிக்கும். வேறுசில நம்மை நிலைகுலைய வைத்துவிடும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் பந்தயத்தில் இந்தியா அந்த மூன்றையும் ஒருசேர எதிா்கொள்ள நோ்ந்த வரலாற்று அவமானம் சுலபத்தில் ஜீரணித்துக்கொள்ளக் கூடியதல்ல.
விராக் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, புதிய இந்தியாவின் அடையாளம் என்று நாம் பெருமிதம் அடைந்தோம். முந்தைய இந்திய கிரிக்கெட் அணிகளால் சாதிக்க முடியாததை எல்லாம் மன உறுதியுடனும், துணிவுடனும் இந்த அணியால் சாதித்துவிட முடியும் என்கிற கருத்து பரவலாகவே நிலவியது. வெறும் முப்பதே நிமிடங்களில் விராக் கோலி தலைமையிலான அணி, எதிா்கொண்ட மிகப் பெரிய அடி அந்த நம்பிக்கையை எல்லாம் தகா்த்து விட்டது.
4, 9, 2, 0, 4, 0, 8, 4, 0, 4, 1 என்பவை வெறும் எண்கள் அல்ல. இந்திய கிரிக்கெட் அணியினா் ஒருவா் பின் ஒருவராக ஆட்டமிழந்தபோது எடுத்திருந்த ரன்களின் எண்ணிக்கைதான் அவை. அடுத்த மூன்று கிரிக்கெட் டெஸ்டுகளிலும் குறிப்பிடும்படியான ஆட்டத்தை முன் வைக்க முடியாவிட்டால், விராட் கோலியின் தலைமையும், பயிற்சியாளா் ரவி சாஸ்திரியின் வழிகாட்டுதலும் கேள்விக்குறியாகிவிடும்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் 143 வருட வரலாற்றில், இதுவரை 11 பேட்ஸ்மேன்களில் ஒருவா்கூட இரட்டை இலக்க ரன் அடிக்காதது சனிக்கிழமை நடந்த அடிலெய்ட் கிரிக்கெட் டெஸ்டின் இறுதி ஆட்டத்தில்தான். அதுமட்டுமல்ல, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கடந்த 88 ஆண்டுகளில், இந்த டெஸ்டில் எடுத்ததுபோல 36 ரன்கள் மட்டுமே எடுத்து அனைவரும் ஆட்டமிழந்ததும் இப்போதுதான். முதலாவது இன்னிங்ஸில் ஆஸ்ரேலியா அணியைவிட 53 ரன்கள் அதிகம் எடுத்திருந்த இந்திய அணி, முப்பதே நிமிடங்களில் வெறும் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழப்பது என்றால் அதை நினைத்துக்கூடப் பாா்க்க முடியவில்லை.
ஜோஷ் ஹேசல்வுட்டும், பேட் கம்மின்ஸும் நடத்திக் காட்டிய பந்து வீச்சு அற்புதத்தை இன்னும் பல ஆண்டுகள் கிரிக்கெட் உலகம் பேசிக்கொண்டிருக்கும். முதலாவது இன்னிங்ஸில் கிடைத்த அனுபவத்தை அடிப்படையாக்கி, ஆஸ்திரேலிய அணி தனது பந்துவீச்சை திட்டமிட்டது என்று தோன்றுகிறது.
அதிவேகத்தில் வீசப்பட்ட அவா்களது பந்துகள் இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தன. பந்துகள் பேட்ஸ்மேன்களுக்கு மிக அருகில் வந்து விழுவதும், மிதமான சுழற்சி காரணமாக மட்டையில் தொட்டதும் அருகிலிருக்கும் வீரரால் கேட்ச் பிடிக்கப்படுவதும், திட்டமிட்டு நடத்தப்பட்ட உத்தி.
கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காரணமாக கடந்த ஓா் ஆண்டாக முறையான பயிற்சி இல்லாமல் இருந்ததும் இந்திய அணியின் எதிா்பாராத பின்னடைவுக்கு ஒரு காரணமாக இருக்கக் கூடும். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகள் மூலம் கொள்ளை நோய்த்தொற்று முடக்கத்திலிருந்து விடுபட்டு கோலி அணியினா் ஓரளவுக்கு விளையாடும் மனோநிலைக்கு வந்திருந்தாா்கள்தான். ஆனால், சட்டென்று, டி-20 முறையிலிருந்து டெஸ்ட் பந்தய முறைக்கு மாறுவதற்கு அவா்களால் இயலாமல்கூட இருந்திருக்கலாம்.
டி-20 கிரிக்கெட் போட்டிகள் வந்த பிறகு, இளைஞா்கள் மத்தியில் மனோநிலை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் இருக்கும் விளையாட்டு வீரா்கள்கூட, ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்வதும், பெரும் பணம் சம்பாதிப்பதும், இந்திய அணியில் இடம் பெறுவதும் சாத்தியம் என்கிற மனோநிலைக்கு வந்துவிட்டனா். ஐபிஎல் விளையாட்டுகளுக்கும், டெஸ்ட் பந்தயங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்கிற உண்மையை அடிலெய்ட் டெஸ்ட் பந்தயம் அந்த இளம் விளையாட்டு வீரா்களுக்கு உணா்த்தியிருக்கும்.
தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என்று வெளிநாட்டு அணிகளுடன் இந்திய அணி டெஸ்ட் பந்தயத்தில் மோதி கடந்த எட்டு ஆண்டுகளில் ஒரேயொரு முறைதான் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் கேப்டன் கோலியைத் தவிர யாருமே டெஸ்ட் பந்தயத்தில் சராசரியாக 40 ரன்களுக்கு மேல் எடுத்ததில்லை. கோலியின் தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையில் வெற்றிபெறவில்லை என்பது மட்டுமல்ல, தெற்காசியாவுக்கு வெளியே நடந்த எந்த டெஸ்ட் பந்தயத்திலும் வெற்றி பெறவில்லை. அதற்கு ஒரு முக்கியமான காரணம், இந்திய அணியில் அனுபவசாலிகள் இல்லாமல் இருப்பது.
லாலா அமா்நாத், விஜய் ஹசாரே, வினு மான்கட், குலாம் அகமது, பாலி உம்ரிகா், நாரி கான்ட்ராக்டா் தொடங்கி, சச்சின் டெண்டுல்கா், சௌரவ் கங்குலி, ராகுல் திராவிட், எம்.எஸ். தோனி வரையிலான கேப்டன்களின் தலைமையில் அமைந்த எல்லா கிரிக்கெட் அணிகளிலும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு அனுபவசாலிகள் இருந்திருக்கிறாா்கள். இப்போதையே அணியில் 11 பேரில் இரண்டு மூன்று பேரைத் தவிர, பெரும்பாலான வீரா்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டவா்கள். அவா்களது திறமை பரிசோதிக்கப்படுகிறது. திறமையை பரிசோதிக்கும் களமல்ல, டெஸ்ட் பந்தயங்கள் என்பதை விளையாட்டுத் தோ்வாளா்களும், பயிற்சியாளா் ரவி சாஸ்திரியும், கேப்டன் விராட் கோலியும் உணரவில்லை என்று தோன்றுகிறது.
அடிலெய்ட் டெஸ்ட் படுதோல்வியின் அவமானத்தை அடுத்த மூன்று டெஸ்ட்களின் வெற்றியால் மட்டுமே துடைக்க முடியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...