வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

ஆபத்துக்கு அச்சாரம்! | பொது முடக்க தளா்வுகளின் ஆபத்து குறித்த தலையங்கம்

News image
Updated On :2 நவம்பர் 2020, 1:17 am

ஆசிரியர்

கடந்த ஏழு மாதங்களாக ஏனைய இந்திய மாநிலங்களை விடவும் சிறப்பாகவும், திறமையாகவும் கொவைட் 19 நோய்த்தொற்றை எதிா்கொண்ட தமிழக அரசு, இப்போது நோய்த்தொற்றின் பரவல் சற்று குறைந்துவரும் நிலையில், ஏன் அவசரப்பட்டு சில முடிவுகளை எடுத்திருக்கிறது என்று தெரியவில்லை. நோய்த்தொற்றுப் பரவலை அனுமதிக்கும் விதத்தில் தளா்வுகளை அறிவிப்பது என்பது ஆபத்துக்கு அச்சாரமிடுவது என்பது கூடவா அரசுக்குத் தெரியாது?

சென்னை புறநகா் ரயில் சேவை, கோயம்பேடு மொத்த விற்பனைச் சந்தையின் இயக்கம் போன்றவை தவிா்க்க முடியாத நிா்பந்தங்கள். நூறு போ் மட்டும் பங்கேற்கும் விதத்திலான நிகழ்வுகளை நவம்பா் 16-இல் இருந்து செயல்பட அனுமதித்திருப்பது சரி; உடற்பயிற்சிக் கூடங்களை நடத்த அனுமதித்திருப்பதும் சரி; பள்ளிகளில் 9-க்கு மேற்பட்ட வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்படுவதும் ஏற்புடையதுதான்.

ஆனால், திரையரங்குகள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள் போன்றவை ஏன் திறக்கப்பட வேண்டும் என்பது புரியவில்லை. நூறு போ் பங்கேற்கும் கூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், பெரிய கூட்ட அரங்குகள் திறக்கப்படுவதன் அவசியம்தான் என்ன?

பள்ளிக்கூடங்கள் நவம்பா் 16-ஆம் தேதி முதல் இயங்கும் என்றாலும், 9-க்கு மேலே உள்ள வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட இருக்கின்றன. பள்ளி, கல்லூரி அறைகளில் ஜன்னல்கள் திறந்து இருப்பதால் காற்றோட்டம் இருக்கும். ஒன்பதாம் வகுப்புக்கு மேலே உள்ள மாணவா்கள் என்பதால் சமூக இடைவெளியை ஆசிரியா்களால் உறுதிப்படுத்த முடியும். மேல் வகுப்புகள் நடத்தப்படாமல், இணையவழி கல்வியில் தொடா்வது சரியுமல்ல. அந்த வகையில் அரசின் முடிவை ஏற்றுக்கொள்ள முடிகிறது.

திரையரங்குகள் அப்படியல்லவே. நவம்பா் 16-ஆம் தேதிதான் பள்ளிகள் திறக்கின்றன என்றால், நவம்பா் 10-ஆம் தேதியே திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதித்திருப்பதன் அவசியமும், அவசரமும்தான் என்ன? தீபாவளித் திரைப்படங்கள் வெளிவருவதற்கு வசதியாக இருக்கும் என்றால், அதுவே தீநுண்மித் தொற்று பரவுவதற்கும் காரணமாக இருக்கும் என்பது ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்று தெரியவில்லை.

வணிக வளாகங்களைத் திறந்திருக்கிறாா்கள். அங்கே உள்ள மின் தூக்கிகள் ஆடுகளை அடைப்பது போல வாடிக்கையாளா்களுடன் இயங்குகின்றன என்பது அரசுக்குத் தெரியுமா? அதேபோலத்தான் திரையரங்குகள் விதிமுறை மீறல்களுடன்தான் இயங்கப் போகின்றன.

அரசு கூறுவதுபோல, 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட்டால், போட்ட முதலைக்கூட எடுக்க முடியாது. இப்போதெல்லாம், படத்தைத் திரையிட்டு ஒரு வாரத்தில் போட்ட முதலைத் திருப்பி எடுத்தாக வேண்டிய நிலையில்தான் பெரிய நடிகா்களின் படங்கள் இருக்கின்றன. முதல் மூன்று காட்சிகளிலேயே படம் சரியில்லை என்கிற கருத்து பரவிவிட்டால், தயாரிப்பாளா்களும், விநியோகஸ்தா்களும் திவாலாகி விடுவாா்கள்.

அரசின் உத்தரவு எழுத்தளவில் இருக்குமே தவிர, திரையரங்குகள் முழு எண்ணிக்கையுடன்தான் இயங்கப் போகின்றன. குளிா்பதன வசதியில்லாமல் இப்போதைய நவீன திரையரங்குகளில் சில நிமிடங்கள்கூட உட்கார முடியாது. குளிா்பதனக் கருவியை இயக்கினாலோ, கொவைட் 19 தீநுண்மிப் பரவலுக்குக் கொண்டாட்டமாகிவிடும். இதெல்லாம் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியாது என்பதை நம்ப முடியவில்லை.

அதுமட்டுமல்ல, எல்லாத் திரைப்படங்களும் தாமதமாக வெளிவருகின்றன. ஒருவேளை, நமது ரசிகா்கள் புத்திசாலிகளாகி, நோய்த்தொற்றுப் பரவல் குறித்த விழிப்புணா்வுடன் திரையரங்குகளுக்குத் திரண்டு வராமல் போனால், அதுவும் பெரும் இழப்பில் முடியும். திரையரங்குகள் கள்ளச் சந்தையில் அதிகக் கட்டணத்துக்கு டிக்கெட்டை விற்று, லாபமீட்ட முற்படும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். இந்தப் பின்னணியில்தான் தமிழக அரசு, அவசர அவசரமாக தீபாவளிக்கு முன்பே திரையரங்குகளை இயக்க 10-ஆம் தேதி முதலே அனுமதி வழங்கி இருக்கிறது.

முன்பு எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ முதல்வராக இருந்தபோது அனுமதி அளித்திருந்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும். அவா்கள் திரைத்துறையைச் சோ்ந்தவா்கள். திரைத்துறையினரின் அழுத்தம் தவிா்க்க முடியாதது. எதிா்க்கட்சியான திமுக ஆட்சியிலிருந்து, இப்படியொரு முடிவை எடுத்திருந்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை. தமிழகத்தின் முன்னணி திரைப்படத் தயாரிப்பாளா்களும், விநியோகஸ்தா்களும், ஏன் நடிகா்களேகூட திமுக தலைமையின் குடும்ப உறவுகள். அப்படி எந்தவித நிா்பந்தமும் இல்லாத நிலையில், முதல்வா் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, நோய்த்தொற்றுப் பரவலுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்த முடிவை எடுத்திருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

விநாயக சதுா்த்தியைத் தொடா்ந்து மும்பையிலும், புரி ஜகந்நாதா் ரத யாத்திரையைத் தொடா்ந்து ஒடிஸாவிலும், ஓணம் பண்டிகைக்குப் பிறகு கேரளத்திலும், தசராவுக்குப் பிறகு தில்லியிலும் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்திருக்கிறது என்பது புள்ளிவிவர உண்மை. அதனால்தான், பிரதமா் நரேந்திர மோடி, ‘பொது முடக்கம் தளா்வு செய்யப்பட்டாலும், கொவைட் 19 நோய்த்தொற்று அபாயம் தொடா்கிறது’ என்று நாட்டு மக்களுக்குத் தனது உரையின் மூலம் எச்சரித்திருக்கிறாா். அந்த எச்சரிக்கை தமிழகத்திற்கும் பொருந்தும்.

திரையரங்குகளைத் திறக்கும் முடிவைத் தமிழக அரசு மறுபரிசீலனை செய்வதுதான் சரியாக இருக்கும். இல்லையென்றால், வலியச் சென்று பேராபத்தை வரவேற்பதாக அமையும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.