வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

வரலாறு திரும்புகிறதா? | இலங்கையின் 20-ஆவது அரசமைப்பு சட்டத்திருத்தம் குறித்த தலையங்கம்

News image
Updated On :3 நவம்பர் 2020, 10:25 pm

ஆசிரியர்

இலங்கையில் கொஞ்ச நஞ்சம் இருந்த ஜனநாயகமும் 20-ஆவது அரசமைப்பு சட்டத்திருத்தத்துக்குப் பிறகு இல்லாமலாகிவிடும் போலிருக்கிறது. அக்டோபர் 29-ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருக்கும் 20-ஆவது அரசமைப்பு சட்டத்திருத்தத்தில் அவைத் தலைவர் கையொப்பமிட்டு ஒப்புதல் வழங்கியிருக்கிறார். சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டு பேர் உள்ளிட்ட 156 உறுப்பினர்களும், எதிராக 65 உறுப்பினர்களும் வாக்களித்திருக்கிறார்கள். வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத ஒரே ஒரு உறுப்பினர் முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறீசேனா.
 இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து இலங்கை உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் 39 மனுக்கள் தாக்கல் செய்தனர். நான்கு பிரிவுகளை மட்டும் விலக்கிவிட்டு, ஏனைய அம்சங்கள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும்போது அதில் தவறில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏனைய நான்கு அம்சங்களும், பொது வாக்கெடுப்பின் மூலம் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு.
 19-ஆவது சட்டத்திருத்தம், அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ராஜபட்ச குடும்பத்தினர் உள்பட பலராலும் ஆதரிக்கப்பட்டு, 2015-இல் இலங்கை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அதிபருக்கு இருந்த வரம்பு மீறிய அதிகாரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் 20-ஆவது சட்டத்திருத்தம், முந்தைய 19-ஆவது சட்டத்திருத்தத்தை முற்றிலுமாக அகற்றி, 2015 ஆம் ஆண்டில் நீக்கப்பட்ட அதிகாரங்களையும், புதிய பல அதிகாரங்களையும் இலங்கை அதிபருக்கு வழங்க வகை செய்கிறது.
 முந்தைய 19-ஆவது சட்டத்திருத்தத்தின்படி, அதிபர் பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகிப்பவர்கள் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக இருக்கக் கூடாது. இப்போதைய அதிபர் கோத்தபய ராஜபட்சவும் அவரது சகோதரர்களில் ஒருவரான பசில் ராஜபட்சவும் இலங்கையில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்றவர்கள். அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக கோத்தபய ராஜபட்ச, தனது அமெரிக்கக் குடியுரிமையைத் துறக்க வேண்டி வந்தது. இப்போது 20-ஆவது சட்டத்திருத்தத்துக்குப் பிறகு இரட்டைக் குடியுரிமைக்கான தடை அகற்றப்பட்டிருப்பதால் அவர் மீண்டும் தனது அமெரிக்கக் குடியுரிமையைப் பெற முடியும்.
 அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய அரசமைப்புச் சட்டத்தை கொண்டுவருவதாக அறிவித்திருக்கிறார் அதிபர் கோத்தபய ராஜபட்ச. அந்த அரசமைப்புச் சட்டத்தில், 19-ஆவது சட்டத்திருத்தத்தில் காணப்பட்ட இரட்டைக் குடியுரிமைத் தடையை சேர்ப்பதாக உறுதி அளித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரையும் 20-ஆவது சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்திருக்கிறார்.
 இலங்கை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டிருக்கும் 20-ஆவது சட்டத்திருத்தத்தில் வியப்பை ஏற்படுத்தும் அம்சம், பிரதமர் பதவி வெறும் பொம்மைப் பதவியாக மாற்றப்பட்டிருப்பது. 19- ஆவது சட்டத்திருத்தம் பிரதமருக்கு வழங்கியிருந்த அதிகாரங்களில் பெரும்பாலானவை 20-வது சட்டத்திருத்தம் மூலம் பறிக்கப்பட்டு விட்டன. முன்னாள் அதிபரும், ஸ்ரீலங்கா பொது ஜன கட்சியின் தலைவரும் அதிபர் கோத்தபய ராஜபட்சவின் மூத்த சகோதரருமான மகிந்த ராஜபட்சதான் இப்போதைய பிரதமர். அப்படியிருந்தும் அவரது அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருப்பதன் காரணம் புரியவில்லை. சகோதரர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் ரகசிய ஒப்பந்தமா, ராஜபட்ச குடும்பத்தின் ராஜதந்திரமா என்பது அரசியல் நோக்கர்களுக்குக் குழப்பமாக இருக்கிறது.
 பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களை அகற்றுவது, அமைச்சர்களை நியமிப்பது, தேர்தல் ஆணையம், காவல்துறை, மனித உரிமை, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட துறைகளின் தலைமை என்று அதிபரின் அதிகார வரம்பு பரந்து விரிகிறது. புதிய திருத்தத்தின்படி, நாடாளுமன்றத்தை எப்போது வேண்டுமானாலும் கலைக்கும் உரிமையும், அதிபருக்கு மீண்டும் வழங்கப்பட்டிருக்கிறது.
 2009-இல் மகிந்த ராஜபட்ச அதிபராக இருந்தபோது, முன்னாள் ராணுவ அதிகாரியான கோத்தபய, பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செயலராக இருந்தார். அவரது தலைமையில்தான் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. ஏறத்தாழ 40,000-க்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
 பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது என்பது மட்டுமல்லாமல், அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள், எண் பலகை இல்லாத வெள்ளை வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்டு வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளானார்கள். "சண்டே லீடர்' என்கிற பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்க, பட்டப் பகலில் கொழும்பு நகர வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று வரை அந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. அதுபோல மீண்டும் ஓர் அடக்குமுறை ஆட்சி இலங்கையில் ஏற்படக்கூடும் என்கிற அச்சத்தை 20-ஆவது சட்டத்திருத்தம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
 இலங்கை அரசு, 13-ஆவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தி, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று 1988 முதல் இந்தியா வற்புறுத்தி வருகிறது. ஆனால், இதுவரை இந்திய - இலங்கை பிரதமர்கள் பலரும் சந்தித்துப் பேசியும் அது குறித்து இலங்கை அரசு சற்றும் அக்கறை காட்டாத நிலைதான் உள்ளது. 20-ஆவது சட்டத்திருத்தத்துக்கு பிறகு சர்வ அதிகாரம் பெற்றவராக மாறியிருக்கும் அதிபர் கோத்தபய ராஜபட்ச இருக்கும் வரை, 13-ஆவது சட்டத்திருத்தம் என்பது கனவாகத்தான் தொடரப் போகிறது...
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.