காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

பிகார் விடுக்கும் செய்தி! | பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த தலையங்கம்

News image
Updated On :11 நவம்பர் 2020, 10:20 pm

ஆசிரியர்


பிகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கிறது. நான்காவது முறையாகத் தொடர்ந்து முதல்வராகப் பதவியேற்று நிதீஷ் குமார் வரலாறு படைக்கவிருக்கிறார்.

ஒட்டுமொத்த இந்தியாவும் மிகுந்த ஆர்வத்துடன் உற்று நோக்கிய பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நல்ல முறையில் நடந்த முடிந்திருப்பது மிகப் பெரிய ஆறுதல். பிகாரில் நடந்த தேர்தல் யார் முதல்வராவது, எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி ஆட்சி அமைப்பது என்பது குறித்தது மட்டுமல்ல. மக்கள்தொகையும் வாக்காளர் எண்ணிக்கையும் அதிகமுள்ள, நவீன வசதிகள் இல்லாத கிராமப்புறச் சூழலுள்ள பிகார் போன்ற பின்தங்கிய மாநிலத்திலும்கூட இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெற்றிகரமாக தேர்தலை நடத்த முடிந்திருக்கிறது என்பதுதான் சிறப்பு. அந்த வகையில், பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை அடைந்திருப்பது நமது தேர்தல் ஆணையம்தான். 

பொது முடக்கத்தால் அடித்தட்டு மக்கள் அடைந்த வேதனைகள் ஏராளம். போதாக்குறைக்கு, வெளிமாநிலங்களில் பணியாற்றிய பிகார் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் ஊர் திரும்பினார்கள். ஏற்கெனவே மூன்று முறை முதல்வராக இருந்துவிட்ட நிதீஷ் குமார் மீது வழக்கமாக ஏற்படுகின்ற சலிப்பு போதாதென்று வேலைவாய்ப்பின்மையின் கடுமையும் சேர்ந்துகொண்டபோது, ஆட்சிக்கு எதிரான மனநிலை பரவலாகக் காணப்பட்டதென்னவோ உண்மை. அதையும் மீறி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்து நான்காவது முறையாக நிதீஷ் குமார் முதல்வராக வாய்ப்பளித்திருக்கிறார்கள் என்றால், அதை அவர் மீதான மக்கள் நம்பிக்கையின் பிரதிபலிப்பு என்றுதான் கருத வேண்டும்.

முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி, கூட்டணியில் பெரிய கட்சியாக உயர்ந்திருக்கிறது பாஜக. இந்த மாற்றத்தின் பின்னணியில் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியை தனித்துப் போட்டியிட அனுமதித்த பாஜக-வின் ராஜதந்திரம் இருக்கிறதோ என்கிற ஐயப்பாடு எழாமல் இல்லை. அப்படியே இருந்தாலும்கூட, முதலாவது கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் தவற்றை உணர்ந்து பாஜக கையாண்ட தேர்தல் பிரசாரங்கள்தான் நான்காவது முறையும் நிதீஷ் குமார் ஆட்சியமைப்பதை உறுதிப்படுத்தின.
தெற்கு பிகாரிலுள்ள 71 இடங்களுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி, ஆளும் தே.ஜ. கூட்டணியைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு லோக் ஜனசக்தி கட்சி தலித் வாக்குகளை பிரித்ததுதான் காரணம் என்பதை உணர்ந்த பாஜக, அடுத்த இரண்டு கட்டங்களிலும் அந்தத் தவறு நேர்ந்துவிடாமல் பார்த்துக் கொண்டது. "எத்தனை இடங்களில் பாஜக வெற்றி பெற்றாலும் நிதீஷ் குமார்தான் முதல்வர்' என்கிற பாஜகவின் பிரசாரத்தின் விளைவாக, அடுத்தகட்ட வாக்குப்பதிவுகளில் தே.ஜ.கூ. முன்னிலை வகிக்கத் தொடங்கியது.
ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக பாஜக அதிருப்தியாளர்கள் பலரை வேட்பாளர்களாக நிறுத்தி, பாஜக-வின் வாக்கு வங்கியைப் பிரித்து ஐக்கிய ஜனதா தளம் தோல்வியைத் தழுவுவதை உறுதிப்
படுத்தியதன் மூலம், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி மறைமுகமாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியை பல தொகுதிகளில் வெற்றியடைய வைத்தது. கடந்த தேர்தலைவிட இந்தமுறை ஐக்கிய ஜனதா தளம் குறைந்த அளவிலான இடங்களில் மட்டுமே வெற்றியடைய முடிந்ததற்கு அதுதான் காரணம். இதனால் இழப்பு ஐக்கிய ஜனதா தளத்துக்கு மட்டுமல்ல; சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தியால் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்திருக்கிறது. 
சட்டப்பேரவையில் அதிக இடங்களை வென்ற கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் உயர்ந்ததற்கு லோக் ஜனசக்தி கட்சி முக்கியமான காரணம் என்றால், அந்தக் கட்சியும் அதன் தலைமையிலான மகா கூட்டணியும் ஆட்சியமைக்க முடியாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியின் தோல்வியும், சிறுபான்மை முஸ்லிம்களின் வாக்குகளைப் பிரித்த ஓவைஸியின் முஸ்லிம் மஜ்லீஸ் கட்சியும் காரணங்கள். 
ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவராக உயர்ந்திருக்கும் லாலு பிரசாத் யாதவின் இரண்டாவது மகன் தேஜஸ்வி யாதவின் தலைமையில், அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி நடந்த முதல் தேர்தலில் அவரால் முன்பிருந்ததைப் போலவே சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சி என்கிற தகுதியை தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறதே தவிர, ஆட்சியைக் கைப்பற்ற முடியவில்லை. அதற்கு, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய "அடாவடி அரசியல்' திரும்பிவிடும் என்கிற மக்களின் அச்சமே முக்கியமான காரணம். ராஷ்ட்ரீய ஜனதா தள ஆட்சிக் காலத்தை "இருண்ட காலம்' என்று பலர் கருதுகிறார்கள். 
தேஜஸ்வி யாதவும், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் இடம்பெற்ற மகா கூட்டணியின் குடும்ப அரசியலுக்கு எதிரான மனநிலை இன்னொரு காரணம். பிரதமர் நரேந்திர மோடி தனது பிரசாரங்களில், மகா கூட்டணியை "இளவரசர்களின் கூட்டணி' என்றும், தங்களது கூட்டணியை "சாமானியர்களின் கூட்டணி' என்றும் வர்ணித்தது மக்கள் மத்தியில் எடுபட்டது. 
எல்லாவற்றுக்கும் மேலாக, அரசியல் நோக்கர்களையும் கருத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கியது தாய்மார்களின் வாக்கு வங்கி. பெண்களுக்கான இட ஒதுக்கீடு, மது விலக்கு போன்ற நிதீஷ் குமாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மகளிர் வாக்கு வங்கி மகா கூட்டணியின் தோல்வியை உறுதிப்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.