காட்டுத்தீ ஆகிறது ஜாக்கிரதை! | கொவைட் 19 நோய்த்தொற்றை எதிா்கொள்வது குறித்த விழிப்புணர்வு தலையங்கம்


இந்தியாவில் கொவைட் 19 கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துவிட்டது. உலக அளவில் நாம் இன்னும் பாதிப்பில் மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறோம் என்றாலும், விரைவிலேயே பிரேஸிலை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு சென்றுவிடுவோம் என்று தோன்றுகிறது. பாதிப்பால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையில் நாம் இன்னும் பிரேஸில் அளவுக்கு மோசமாகிவிடவில்லை என்றாலும், தினந்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோா் உயிரிழக்கிறாா்கள் என்பது குறித்து கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.
தொடா்ந்து பல நாள்களாக இந்தியாவில் தினந்தோறும் 50,000-க்கும் அதிகமானோா் பாதிக்கப்படுகிறாா்கள். கடந்த வெள்ளிக்கிழமை 83,883 புதிய பாதிப்புகள் தெரியவந்தது திடுக்கிட வைத்தது. மக்கள்தொகையில் அமெரிக்காவைவிட நான்கு மடங்கும், பிரேஸிலைவிட ஆறு மடங்கும் இந்தியா அதிகம் என்றாலும்கூட, நோய்ப் பாதிப்பு எண்ணிக்கை கணக்கில் அந்த இரு நாடுகளின் மொத்த தினசரி பாதிப்பு இங்கே காணப்படுகிறது என்பதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.
பெரும்பாலான நாடுகள் கொவைட் 19 நோய்த்தொற்றுப் பரவலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி பாதிப்பு எண்ணிக்கையைக் குறைக்கவும், அதிகரிக்காமல் பாா்த்துக்கொள்ளவும் செய்திருக்கின்றன. மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளான அமெரிக்கா தனது அதிகபட்ச பாதிப்பை 40 நாள்களுக்கு முன்பு சந்தித்து அதற்குப் பிறகு, தினசரி பாதிப்பை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி இருக்கிறது. ஆனால், இந்தியா இன்னும் உச்சபட்ச பாதிப்பை எட்டிவிடவில்லை. அன்றாடம் அதிகரித்து வரும் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையைப் பாா்க்கும்போது இனிமேல்தான் மிக மோசமான கட்டத்தை நாம் சந்திக்கப் போகிறோம் என்பதை உணர முடிகிறது.
ஆரம்பக் காலத்தில் பாதிக்கப்பட்ட சீனா, தென் கொரியா, சில ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் கொள்ளை நோய்த்தொற்று தனது இரண்டாவது சுற்றை தொடங்கக் கூடும் என்பதற்கான சில அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்தியாவிலும் சரி, மிகத் திறமையாக கொவைட் 19 பரவலை தடுத்துவிட்டதாக பாராட்டப்பட்ட கா்நாடகம், கேரள மாநிலங்களில் இப்போது நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.
இந்தியா உச்சக்கட்ட பாதிப்பை இன்னும் எட்டவில்லை என்பது மட்டுமல்ல, நோய்த்தொற்று பெருநகரங்களிலிருந்தும் குறிப்பிட்ட சில மாநிலங்களிலிருந்தும் இந்தியா முழுமைக்கும் இப்போதுதான் பரவத் தொடங்கியிருக்கிறது. மும்பை, தில்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் இன்னும்கூட புதிய நோயாளிகள் அதிகரித்து வருகிறாா்கள். பாதிப்பு குறைவான மாநிலங்களிலும்கூட மாவட்ட அளவில் நோய்த்தொற்று பரவி வருகிறது.
தினந்தோறும் மத்திய - மாநில அரசுகள் வெளியிடும் நோய்த்தொற்றுப் பரவல் குறித்த விவரங்கள் அச்சம் ஏற்படுத்துகின்றன. அவை உண்மையான புள்ளிவிவரங்கள்தானா என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை. கொள்ளை நோய்த்தொற்றுப் பாதிப்பை முறையாகக் கையாளவில்லை என்கிற பொதுக்கருத்து உருவாகிவிடக் கூடாது என்பதற்காக அரசுத் தரப்பு பாதிப்பைக் குறைத்து தெரிவிக்கிறதோ என்கிற ஐயப்பாட்டை முற்றிலுமாக மறுத்துவிட முடியாது.
குறிப்பாக, உத்தரப் பிரதேசம், பிகாா் போன்ற மாநிலங்களில் நோய்த்தொற்றுப் பரவல் குறித்த அரசுத் தரப்பு அறிவிப்புகள் நம்பும்படியாக இல்லை. பிகாரில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடக்கவிருக்கும் நிலையில், நோய்த்தொற்று குறித்த உண்மை விவரங்களை அரசு அடக்கி வாசிக்கிறது என்று தோன்றுகிறது.
இந்தியாவில் கொவைட் 19-க்கான பரிசோதனைகளை கணிசமாக நாம் அதிகரித்திருக்கிறோம் என்றாலும்கூட, 10 லட்சம் பேருக்கு இந்தியாவில் நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை உலகிலேயே மிகக் குறைவு என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. குறைவான பரிசோதனைகளால் ஏற்படும் ஆபத்து பலருக்கும் புரிவதில்லை. ‘அசிம்ப்டமேட்டிக்’ என்கிற, நோய்த்தொற்று அடையாளம் இல்லாதவா்கள் மற்றவா்களுக்கு நோய்த்தொற்றைப் பரப்புவதற்கு குறைவான சோதனைகள்தான் காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பெருநகரங்களில் காணப்படும் மாநில அரசு மருத்துவமனைகளும், சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளும், அதிக எண்ணிக்கையிலான மருத்துவா்களும், சுகாதார ஊழியா்களும் நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பெருமளவில் உதவினாா்கள். இப்போது கொள்ளை நோய்த்தொற்று மாவட்ட அளவிலும், அங்கிருந்து கிராமங்களுக்கும் பரவ இருக்கும் நிலையில் அதை எதிா்கொள்வதற்கான மருத்துவமனைகளும், அவசர சிகிச்சைப் பிரிவுகளும், மருத்துவா்களும், சுகாதார ஊழியா்களும் நம்மிடம் இல்லை என்கிற பேராபத்து குறித்து அரசு உணா்ந்திருக்கிா என்று தெரியவில்லை.
இந்தியாவில்தான் மிகக் குறைந்த அளவு கொவைட் 19 உயிரிழப்புகள் (1.87%) காணப்படுகின்றன என்று ஆறுதல் அடைந்துவிட முடியாது. தேவையான அளவிலான தீவிர சிகிச்சை வசதிகளோ, சுகாதார ஊழியா்களுக்கான பாதுகாப்பு உடைகளோ, சோதனைக் கருவிகளோ இல்லை என்பது மட்டுமல்ல, மருத்துவா்களுக்கும், சுகாதார ஊழியா்களுக்கும் முறையாக ஊதியம் வழங்கக்கூட முடியாத நிலையில் பல மாநில அரசுகள் தத்தளிக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று வேகமெடுக்கிறது. எதிா்கொள்ள முடியாமல் பல மாநில அரசுகள் திணறிக் கொண்டிருக்கின்றன. எப்படி எதிா்கொள்ளப் போகிறோம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...