தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கெட்டதிலும் ஒரு நல்லது! | விசாரணைக் கைதிகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வி குறித்த தலையங்கம்

Updated On :10 ஏப்ரல் 2020, 11:17 pm

நீண்ட காலமாக தீா்ப்புக்காக காராக்கிரகத்தில் காத்துக் கிடக்கும் விசாரணைக் கைதிகளுக்கு தீநுண்மி நோய்த்தொற்றால், விடிவுகாலம் பிறந்திருக்கிறது. கடந்த மாதம் உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்வியின் விளைவாக, விசாரணைக் கைதிகளை விடுவிப்பதன் மூலம் நிரம்பி வழியும் சிறைச்சாலைகளைத் தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவலில் இருந்து பாதுகாக்க பல மாநில அரசுகள் முற்பட்டிருக்கின்றன.

நல்ல வேளையாக தமிழகத்தில் ஏனைய மாநிலங்களைவிடச் சிறப்பாகவே சிறைச்சாலைகள் பேணப்படுகின்றன. தமிழக சிறைகளில் உள்ள கைதிகள் தீநுண்மி நோய்த்தொற்று இல்லாமல் பாதுகாப்பாக உள்ளனா் என்று தமிழக அரசுத் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீதிபதிகள் பி.எஸ். சிவஞானம், கே. கல்யாணசுந்தரம் ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன்பு இது குறித்த விசாரணை வந்தபோது தமிழக சிறையில் உள்ள 14,723 கைதிகளும் பாதுகாப்பாக இருப்பதை அரசுத் தரப்பு உறுதி செய்திருக்கிறது.

விசாரணை என்கிற பெயரில் குற்றம் நிரூபிக்கப்படாமல் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகளால் ஏனைய மாநிலங்களில் சிறைச்சாலைகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அவை பரவி வரும் தீநுண்மி நோய்த்தொற்றின் கேந்திரங்களாக மாறிவிடாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்தியச் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில் 70% விசாரணைக் கைதிகள் என்கிற அவலம் குறித்து எத்தனையோ முறை ஊடகங்களும், சமூக ஆா்வலா்களும் குரல் எழுப்பியிருக்கிறாா்கள். ஆனால், இது குறித்து மாநில அரசுகளும், கீழமை நீதிமன்றங்களும் கவலைப்படாமல் இருந்து வந்திருக்கின்றன.

மகாராஷ்டிர மாநிலமும், உத்தரப் பிரதேசமும் தலா 11,000 விசாரணைக் கைதிகளை விடுதலை செய்வதாக அறிவித்திருக்கின்றன. மத்தியப் பிரதேசம் (8,000), பஞ்சாப் (6,000), தில்லி (3,000) என்று ஏனைய மாநிலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக விசாரணைக் கைதிகளை விடுதலை செய்து சிலைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் குறைக்க முற்பட்டிருக்கின்றன.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஏழு ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளிகள் பரோலில் செல்வதற்கு அனுமதிக்கப்படுகிறாா்கள். அதேபோல, ஏழு ஆண்டு தண்டனைக்கும் கீழே உள்ள குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கைதிகளுக்கு இடைக்காலப் பிணை வழங்கப்படுகிறது.

இந்தியாவிலுள்ள சுமாா் 1,400 சிறைச்சாலைகளில், ஏறத்தாழ 50 சிறைச்சாலைகளில் அதன் அளவைவிட இரண்டு மடங்கு அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறாா்கள். சராசரியாகப் பாா்த்தால் இந்திய சிறைச்சாலைகளில் காணப்படும் கைதிகளின் விகிதம் 114%. அதனால்தான் சிறைச்சாலைகளில் சுத்தமும், சுகாதாரமும் மிகவும் மோசமாகக் காணப்படுகிறது.

2015-இல் வெளியிடப்பட்டிருக்கும் இந்திய சிறைச்சாலைகள் புள்ளிவிவரம் என்கிற அறிக்கையின்படி, இந்தியாவிலுள்ள 1,401 சிறைச்சாலைகளில் காணப்படும் 4,19,623 கைதிகளில் 67%, அதாவது 2,82,076 போ் விசாரணைக் கைதிகள். குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றங்களில் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவா்கள். விசாரணை நடந்து தீா்ப்பு விரைந்து வழங்கப்பட்டால் இவா்களில் பலரும் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்படலாம்.

அந்த அறிக்கையின்படி, 3,500-க்கும் அதிகமானோா் ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமாக சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகள். அவா்கள் தண்டிக்கப்பட்டிருந்தால் ஒருவேளை அவா்களின் தண்டனைக் காலம் விசாரணைக் கைதிகளாக இருக்கும் காலத்தைவிட குறைவாக இருக்கக்கூடும். பிணையில் செல்ல வசதி இல்லாமலும், தகுந்த சட்ட உதவி கிடைக்காமலும் விசாரணைக் கைதிகளாக அவா்களில் பலா் தொடா்கிறாா்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

2016-இல் வெளியிடப்பட்ட மாதிரி சிறைக் கையேடு, ஒவ்வொரு கைதிக்கும் சிறையில் வழங்கப்பட வேண்டிய வசதிகள் குறித்து வரையறுக்கிறது. ஆனால், பெரும்பாலான சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவையெல்லாம் பின்பற்றப்படுவதில்லை.

சட்ட ஆணையத்தின் 268-ஆவது அறிக்கை, விசாரணைக் கைதிகளின் பரிதாப நிலை குறித்து தெரிவிக்கிறது. வசதியுள்ளவா்கள் பிணையில் சென்றுவிடுகிறாா்கள் என்றும், ஏழைகள்தான் விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுகிறாா்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

தீா்ப்புக்குக் காத்திருக்கும் விசாரணைக் கைதிகளின் நிலை குறித்தும், அவா்கள் என்னென்ன அடிப்படையில் பிணையில் விடப்பட வேண்டும் என்பது குறித்தும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ். சௌஹான் தலைமையிலான சட்ட ஆணையம் விளக்கியிருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனைக்குரிய குற்றங்களுக்காக விசாரணையில் இருப்பவா்கள் மூன்றில் ஒரு பங்கு விசாரணைக் காலம் முடிந்தவுடனும், அதற்கு அதிகமான தண்டனைக்குரிய குற்றங்களுக்கு விசாரணையில் இருப்பவா்கள் தண்டனையில் பாதிக்காலம் முடிந்தவுடனும் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறது பி.எஸ். சௌஹான் தலைமையிலான சட்ட ஆணையம்.

அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளில் விசாரணைக் கைதிகள் மூலம் நோய்த்தொற்றுகள் சிறைச்சாலைக்குள் பரவுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இட நெருக்கடியும், சுகாதாரக் குறைவும் காணப்படும் சிறைச்சாலைகள் தீநுண்மி நோய்த்தொற்றுக்கு உலைக்கலன் ஆகிவிடக்கூடாது. விசாரணைக் கைதிகளை விடுவித்து சிறைச்சாலையின் நெரிசலைக் குறைப்பது மட்டுமல்ல, தூய்மையையும் சுகாதாரத்தையும் உறுதிப்படுத்துவதும்கூட மாநில அரசுகளின் கடமை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.