இந்த முறை கவலையளிக்கும் செய்தி என்னவென்றால், பறவைக் காய்ச்சல் வழக்கத்தைவிட அதிகமாக இந்தியாவில் பரவி இருக்கிறது என்பதுதான். குஜராத், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், கேரளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நோய்த்தொற்றுப் பரவல் பல பறவைகளின் உயிரை பலி வாங்கிவிட்டன என்றால், சத்தீஸ்கா், தில்லி, மகாராஷ்டிர மாநிலங்களில் நோய்த்தொற்று அறிகுறிகள் தொடங்கிவிட்டன. ஹிமாசல பிரதேசத்தில் கோழிகள், முட்டைகள் விற்பது தடை செய்யப்பட்டிருக்கிறது. போபாலில் உள்ள விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனம் ராஜஸ்தான் ஜலாவா் மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட இறந்துபோன காகங்களில் பறவைக் காய்ச்சல் இருந்ததை உறுதிப்படுத்தியிருக்கிறது. அதனால், பறவைக் காய்ச்சல் கோழிகளுடன் நின்றுவிடவில்லை என்பது தெரிகிறது.