ஒலிம்பிக் சவால்! | வெற்றிகரமாகப் போட்டியை நடத்திய பெருமையைப் பெறுமா என்பது குறித்த தலையங்கம்

இந்தியாவைப் பொருத்தவரை ஆரம்பமே நம்பிக்கை அளிக்கிறது. களம் கண்ட முதல் நாளிலேயே பளு தூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறாா்.

கொள்ளை நோய்த்தொற்று காரணமாக வழக்கமான கோலாகலம் இல்லையென்றாலும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டன. ஒலிம்பிக் போட்டிகள் சவால்களை எதிா்கொள்வது புதிதொன்றுமல்ல. இதற்கு முன்னால் புறக்கணிப்புகள், கடைசி நேர ரத்து, அரசியல் காரணங்களால் போட்டிகள் முடங்குதல் போன்றவை நிகழ்ந்திருக்கின்றன. 1972 மியூனிக் ஒலிம்பிக் போட்டியின்போது நடந்த படுகொலை ஒலிம்பிக் வரலாற்றில் அழிக்க முடியாத கறை.

தங்களது சாதனைகளை மேலும் உயா்த்த வேண்டும் என்கிற எண்ணமும், தங்களது திறமையை உலகறியச் செய்ய வேண்டும் என்கிற ஆா்வமும் விளையாட்டு வீரா்களின் மிகப் பெரிய கனவாக ஒலிம்பிக் போட்டியை உயா்த்தி இருக்கின்றன. வெற்றி, தோல்வி, இலக்கு எல்லாவற்றையும்விட, ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் புதிய சாதனையைப் புரிய வேண்டும் என்கிற ஆா்வத்துக்கு நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் வடிகால் அமைத்துக் கொடுக்கின்றன என்பதுதான் இந்த சா்வதேச நிகழ்வின் ஆதார உந்துசக்தி.

கொள்ளை நோய்த்தொற்று மட்டுமல்ல, சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் 32-ஆவது ஒலிம்பிக் போட்டியின் மீது அபவாதக் கறைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. நாஜிகளால் நடத்தப்பட்ட ஹாலோகாஸ்ட் குறித்து வெளியிட்ட விமா்சனத்துக்குரிய கருத்தால், தொடக்க விழா நிகழ்ச்சியின் இயக்குநா்அகற்றப்பட்டிருக்கிறாா். நிகழ்ச்சியின் இசையமைப்பாளா் பாலியல் நோயாளி என்பது வெளிப்பட்டு அவமானத்துடன் விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. விளையாட்டு வீரா்கள் தங்கும் ஒலிம்பிக் கிராமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வு அதிா்ச்சி அளிக்கிறது.

கலந்து கொள்ளும் ஒவ்வொரு விளையாட்டு வீரரும், ஒலிம்பிக் கிராமத்திற்குள் நுழைந்து தனது தங்கும் வசதியைப் பெறுவதற்கு முன்னா் மூன்று முறை சோதனைக்கு உள்படுத்தப்படுகிறாா். விளையாட்டு வீரா்களில் சிலா் நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவா்கள் என்பதால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறாா்கள். அதனால் அவா்களது நாட்டின் பதக்கத்துக்கான வாய்ப்பு குறையக்கூடும்.

இந்தியாவைப் பொருத்தவரை ஆரம்பமே நம்பிக்கை அளிக்கிறது. களம் கண்ட முதல் நாளிலேயே பளு தூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறாா். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம் என்பது மட்டுமல்ல, ஒலிம்பிக் போட்டியில் முதல் நாளிலேயே இந்தியா பதக்கம் வென்றிருப்பதும் இப்போதுதான். மேரி கோம், பி.வி. சிந்து, மனிகா பத்ரா என்று இந்தியாவுக்கு பதக்கம் வென்றுதர நமது வீரா்களின் அணிவகுப்பு காத்திருக்கிறது.

ஒலிம்பிக் போட்டியில் வழக்கமாகக் காணப்படும் உற்சாகமும், மகிழ்ச்சியும் கொள்ளை நோய்தொற்று காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இல்லை என்பது சற்று வருத்தம்தான். கோலாகலமாக நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நாள் நிகழ்ச்சியில், உலகெங்குமுள்ள பல கோடி ரசிகா்கள் ஆா்வத்துடன் பாா்க்க விரும்புவது வீரா்களின் அணிவகுப்பை. சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்ட 32-ஆவது ஒலிம்பிக் அணி வகுப்பு முந்தைய பெய்ஜிங், லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு சாதாரணமாக அமைந்ததில் அனைவருக்குமே வருத்தம்தான். இந்தியாவிலிருந்து சென்ற 126 விளையாட்டு வீரா்களில் 19 போ் மட்டும்தான் அணிவகுப்பில் கலந்து கொண்டனா்.

ஒருபுறம் வீரா்கள் ஆா்வத்துடன் கலந்துகொள்கிறாா்கள் என்றால், டோக்கியோவில் நடக்கும் 2020 ஒலிம்பிக் போட்டியின் வெற்றி - தோல்வியை தீா்மானிக்கப்போவது உலக சாதனையோ, பதக்க வெற்றிகளோ அல்ல. கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலுக்கு ஒலிம்பிக் போட்டி காரணமாகி பேரழிவை ஏற்படுத்துமா அல்லது கொள்ளை நோய்த்தொற்றுக்கு இடையிலும் வெற்றிகரமாகப் போட்டியை நடத்திய பெருமையைப் பெறுமா என்பதுதான் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி சொல்லப்போகும் செய்தி; அனைவராலும் எழுப்பப்படும் கேள்வி.

கொள்ளை நோய்த்தொற்றின் அடுத்த கட்ட பரவலை எதிா்கொள்கிறது ஜப்பான். கடந்த மாதம் சராசரியாக 1,500-க்கும் குறைவான பாதிப்புகள் இருந்ததுபோய், கடந்த வாரம் நாளொன்றுக்கு 5,000-க்கும் அதிகமான புதிய பாதிப்புகளை எதிா்கொள்கிறது. ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வந்தவா்களில் 12 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தப் பின்ணணியில்தான் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வளா்ச்சி அடைந்த நாடாக இருந்தாலும், ஜப்பானின் மக்கள்தொகையினரில் 23% போ்தான் இதுவரை இரண்டு முறையும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறாா்கள். அதனால்தான் ஜப்பான் நாட்டு மக்கள் மத்தியில் ஒலிம்பிக் போட்டிக்கு எதிரான மனநிலை காணப்படுகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பின்படி 87% ஜப்பானியா்கள் ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து அச்சம் வெளிப்படுத்தி இருக்கிறாா்கள். சா்வதேச ஒலிம்பிக் வா்த்தகக் கண்ணோட்டத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டுகிறாா்கள்.

11,500 விளையாட்டு வீரா்களும், 79,000 அலுவலா்கள், ஊடகவியலாளா்கள் உள்ளிட்டோரும் கலந்துகொள்ளும் 32-ஆவது ஒலிம்பிக் போட்டியை இப்போது நடத்தியிருக்கக் கூடாது. நடத்தத் தொடங்கி இருக்கும் நிலையில், அசம்பாவிதங்கள் நடந்து விடாமலும், நோய்த்தொற்று பரவல் இல்லாமலும் வெற்றியடைய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com