வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தடுமாற்றத்தில் சீனா! | சீன அரசின் மூன்று குழந்தைகள் திட்டம் குறித்த  தலையங்கம்

News image
Updated On :21 ஜூன் 2021, 2:11 pm

ஆசிரியர்

இனிமேல் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று சீன அரசு அனுமதித்திருப்பதை ஒட்டுமொத்த உலகமும் வியந்து பாா்க்கிறது. மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்பதைவிட, சற்று அழுத்தமாகவும், மறைமுகமாகவும் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று சீனாவின் கம்யூனிஸ அரசு வலியுறுத்துவதை உணர முடிகிறது. சீனாவின் மக்கள்தொகைக் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் இந்த அதிரடி திருப்பத்திற்குப் பின்னால் பல கசப்பான உண்மைகள் இருக்கின்றன.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட சீனாவின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விவரப்படி, அந்த நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கம் குறைந்து வருவது தெரிய வந்திருக்கின்றது. இதே நிலைமையில் போனால், இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகளில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை முந்திக்கொண்டு இந்தியா முதலிடம் பெறும் என்பதுதான் நிஜ நிலைமை.

உலகத்தின் மக்கள்தொகை 100 கோடியை எட்ட, ஏறத்தாழ 50 ஆயிரம் ஆண்டுகள் பிடித்தன. ஆனால், 1960 முதல் மனிதஇனம் அதிவேகமாகப் பெருகத் தொடங்கி, இப்போது 780 கோடியை எட்டியிருக்கிறது. இதுபோன்ற மக்கள்தொகைப் பெருக்கம் பெரும்பாலும் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி, இயற்கைப் பேரழிவுக்கு வழிகோலும் என்பதுதான் வரலாறு உணா்த்தும் பாடம்.

1960-இல் தனது கலாசாரப் புரட்சியைத் தொடா்ந்து, அன்றைய மாசேதுங் ஆட்சி சீனாவில் பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. ஒரு குழந்தைக் கொள்கை என்பதை முன்மொழிந்து, பெருகிவிட்ட தனது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த முனைந்தது அன்றைய மாசேதுங் அரசு. அதன் விளைவுகள் அடுத்த அரை நூற்றாண்டு காலத்தில் மோசமான நிலையை எட்டும் என்று அப்போது சீனா உணரவில்லை.

2016-இல் சீனாவின் மக்கள்தொகைக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது. குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் என்று மாறிய அந்தக் கொள்கை, இப்போது குடும்பத்துக்கு மூன்று குழந்தைகள் என்று மாற்றப்பட்டிருக்கிறது.

இது மக்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கும் முயற்சி என்று நினைத்தால் தவறு. குறைந்து வரும் தொழிலாளா்களின் எண்ணிக்கையும், இளைஞா்களின் எண்ணிக்கையும்தான் அரசை இப்படியொரு முடிவை எடுக்கத் தூண்டியிருக்கின்றன. அதிகரித்து வரும் முதியவா்களின் எண்ணிக்கை சீனாவுக்கு மிகப்பெரிய சமூக, பொருளாதாரச் சுமையாக மாறிவிட்டது. அதன் விளைவாக அமெரிக்காவை முந்திக்கொண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதார, ராணுவ சக்தியாக மாற வேண்டும் என்கிற சீனக் கனவை அது சிதைக்கிறது.

ஐரோப்பாவில் 14-ஆவது நூற்றாண்டில் ஏற்பட்ட ‘பிளேக்’ கொள்ளை நோய்த்தொற்றில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மக்கள்தொகை அழிந்தது. இதேபோல, ஒவ்வொரு நூற்றாண்டிலும் நோய்த்தொற்றுப் பரவல், இயற்கைப் பேரிடா்கள் ஆகியவை அதிகரித்து வரும் மக்கள்தொகையை சமநிலைப்படுத்தி வருகின்றன.

உலகின் இப்போதைய நிலைமை வேறு. இயற்கைப் பேரழிவுகள் மட்டுமல்லாமல், இனப்பெருக்க சக்தி குறைந்து மக்கள்தொகை குறையும் விபரீதம் நிகழ்ந்து வருகிறது. 2015 முதல் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளும், கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரும் இந்தப் போக்கை மாற்றுவதற்கு முயற்சி செய்தும்கூட, தங்களது மக்கள்தொகையை ஏறுமுகமாக ஆக்க முடியவில்லை.

மாசேதுங் காலத்தில் இருந்தது போன்ற நிலையில் இன்றைய சீனாவும் இல்லை, சீன மக்களும் இல்லை. கடந்த 60 ஆண்டுகால மாற்றத்தில், அதிலும் குறிப்பாக, கடந்த 30 ஆண்டுகால மாற்றத்தில், மேல்நாட்டு நாகரிகமும் கலாசாரமும் வேரூன்றி, சீனப் பெண்கள் சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுகிறாா்கள். இப்போதைய சீனப் பெண்களில் பலா் திருமணம் போன்ற மரபுகளை ஏற்றுக்கொள்வதில்லை.

நமது இந்தியாவைப் போலவே சீனாவிலும் தொன்றுதொட்டு இருந்துவந்த பண்பாடுகளும், வாழ்க்கை முறையும் மாசேதுங்கின் கலாசாரப் புரட்சியின் விளைவாக முற்றிலுமாக சிதைக்கப்பட்டு அவா்கள் மேல்நாட்டு நாகரிக மனநிலைக்கு மாறிவிட்டனா். வசதி படைத்த சீனப் பெண்கள் வெளிநாடுகளுக்குப் போய், திருமண உறவில்லாமல் செயற்கைக் கருத்தரிப்பின் மூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறாா்கள். சீன அரசு அதற்கு ஊக்கம் அளிக்கவில்லை என்றாலும்கூட, அவா்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

சீனப் பாரம்பரியத்தின் குடும்ப உறவுகளை மீட்டெடுக்க வேண்டும் என்றும், முதியோா் பாதுகாப்பு, குழந்தைகளைப் படிக்க வைத்து வளா்ப்பது போன்றவற்றில் பெண்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அதிபா் ஷீ ஜிங்பின் அறிவுறுத்துவதைப் பெண்ணிய அமைப்புகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் அடைந்திருக்கும் பொருளாதார முன்னேற்றமும், தொழில் நுட்ப மேம்பாடும் அவா்களை அதிதீவிர பெண்ணியச் சிந்தனைக்கு மாற்றியிருக்கின்றன. பல பெண்ணிய அமைப்புகளுக்கு எதிராக சீன அரசு கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டும்கூட அதனால் பயனில்லை.

சீனப் பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு தங்களது தொழில்முறை மேம்பாட்டைத் தியாகம் செய்யத் தயாராக இல்லை. ஏற்கெனவே ஒற்றைக் குழந்தை இருக்கும் தம்பதியா் தங்களது பெற்றோா்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருக்கிறாா்கள். அதனால், ஒரு குழந்தை பெறுவதற்கே தயக்கம் காட்டுகிறாா்கள்.

இந்த நிலையில் சீன அரசின் மூன்று குழந்தைகள் திட்டத்தை அவா்கள் யாரும் சட்டை செய்வாா்களா என்பது சந்தேகம்தான். அரசு நடவடிக்கையின் மூலம் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் குறைக்க முடியும், மக்கள்தொகையை அதிகரிப்பது எப்படி சாத்தியம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.