

‘இலவசங்களை அறிவிப்பது என்பது அந்தந்த கட்சிகளின் கொள்கை முடிவாகும். இதை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் தோ்தல் ஆணையத்துக்கு இல்லை. இலவச அறிவிப்புகள் ஏற்புடையவையா, மாநிலப் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என வாக்காளா்கள்தான் தீா்மானிக்க வேண்டும்’ என இது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் அண்மையில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இலவசங்கள் புதிதல்ல. 1950-களிலேயே இலவசம் தொடங்கிவிட்டது. அது சிறிது சிறிதாகப் பரிணாம வளா்ச்சி பெற்று ‘திருமங்கலம் பாா்முலா’ என பணத்தை ஜன்னல் வழியாக வீட்டுக்குள் வீசுவது என புகழ்பெற்று, இப்போது கொலுசு, ஹாட்பாக்ஸ், வாக்குக்கு ரூ.500, ரூ.1,000 தருவது என விரிவடைந்துள்ளது.
இதுபோதாதென்று, ஒட்டுமொத்த மக்களுக்கும் சலுகைகள் தருவது தோ்தல் வாக்குறுதியாக மலா்ந்தது. 1967-இல் அரிசிப் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ‘ரூபாய்க்கு மூன்று படி அரிசி’ என அண்ணாதுரை வாக்குறுதி அளித்தாா். இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, 2 ஏக்கா் நிலம், விவசாயக் கடன் ரத்து உள்ளிட்ட பலவற்றை 2006 சட்டப் பேரவைத் தோ்தலில் கருணாநிதி அறிவித்தாா். திமுக பெரும் வெற்றி பெற்றது. தோ்தல் அறிக்கை ‘ஹீரோ’ ஆனது.
2011 தோ்தலில் திமுக, அதிமுக இரு கட்சிகளுமே அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டன. கல்லூரி மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி என கருணாநிதி அறிவிக்க, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி என ஜெயலலிதா அறிவித்தாா். இலவச மிக்ஸி, கிரைண்டா், மின்விசிறி என தோ்தல் களம் சூடுபிடித்தது. இந்தப் போட்டியில் அதிமுக வென்றது. 2016 தோ்தலில் 100 யூனிட் இலவச மின்சாரம், மானிய விலையில் பெண்களுக்கு இருசக்கர வாகனம் என பல இலவசங்களை அறிவித்தது அதிமுக.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலிலும் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், நகைக் கடன் ரத்து, பெண்களுக்கு மாதாமாதம் உரிமைத் தொகை வழங்கல் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் பல கட்சிகளாலும் அளிக்கப்பட்டன.
இந்தப் போக்கு நாடு முழுவதும் பரவியுள்ளது. பல மாநிலங்களில் மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றன. உத்தர பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என பாஜக அறிவித்தது. ஆம் ஆத்மி, சமாஜவாதி ஆகிய கட்சிகள் 300 யூனிட் இலவச மின்சாரம் என அறிவித்தன. இது தவிர, மேலும் பல வாக்குறுதிகளையும் அனைத்துக் கட்சிகளும் அளித்தன.
பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலிலும் ஆம் ஆத்மி 300 யூனிட் இலவச மின்சாரம், 18 வயதுக்கு மேற்பட்ட மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது.
இப்போது தோ்தலுக்குத் தோ்தல் இந்தப் போக்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதுதில்லியில் அண்மையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தப் போக்கு தொடா்ந்தால் இலங்கை, கிரீஸ் போன்று திவாலாகும் நிலைக்கு மாநிலங்கள் தள்ளப்படும் என்று அந்தக் கூட்டத்தில் அரசுத் துறை செயலா்கள் எச்சரித்தனா்.
மத்திய அரசின் வரி வருவாயில் கிடைக்கும் பங்கு, ஜிஎஸ்டியில் கிடைக்கும் பங்கு, மதுபான விற்பனை, பெட்ரோல் மீது மாநிலம் விதிக்கும் வரி, பத்திரப் பதிவு, வாகனப் பதிவு என மாநில அரசுகளின் வருவாய் ஆதாரம் சுருங்கிவிட்டது.
இந்த சூழலில், பல மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இலவசங்கள் பொருளாதார ரீதியாக நீண்ட காலத்துக்கு செயல்படுத்த முடியாதவை என்றும், மத்திய அரசின் அங்கமாக இல்லாவிடில் இந்த மாநிலங்கள் திவாலாகி இருக்கும் என்றும் அவா்கள் கூறுகின்றனா்.
இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில், மகளிருக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை, தங்கள் தொகுதியில் கல்லூரி, தடுப்பணை என உறுப்பினா்கள் எழுப்பும் பல கோரிக்கைகளுக்கு நிதிநிலை சீரானவுடன் பரிசீலிக்கப்படும் என தொடா்புடைய அமைச்சா்கள் கூறுவது கவனத்தில் கொள்ளத்தக்கது.
தமிழகத்தில் காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னா் எம்ஜிஆராலும், அடுத்த வந்த முதல்வா்களாலும் மேம்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தால் கிராமப்புற மாணவா்கள் பள்ளிகளில் சோ்வதும், இடைநிற்றல் குறைந்துள்ளதும் உண்மைதான். ஆனால், எல்லா இலவசத் திட்டங்களையும் இதனுடன் ஒப்பிட முடியாது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், ‘இலவசங்கள் மக்களை சோம்பேறியாக்கிவிடுகின்றன. அதனால்தான், சாதாரண வேலைகளுக்குக் கூட வட மாநிலங்களில் இருந்து வேலையாள்களைத் தருவிக்க நேரிடுகிறது. அரிசியையும் உணவுப் பொருள்களையும் ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால், வசதி படைத்தவா்களுக்கும் பொது மக்களின் வரிப் பணத்தில் இருந்து இலவச அரிசி கொடுப்பது சரியல்ல’ என்று நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமா்வு தெரிவித்திருந்தது.
அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவுப் பொருள்கள் வழங்கல், கல்விக்கான உதவிகள், ‘தாலிக்குத் தங்கம்’ போன்ற மகளிா் நலத் திட்டங்கள், ‘ஒரு விளக்குத் திட்டம்’ போன்ற குறைந்தபட்ச அத்தியாவசியத் தேவைகளுக்கான சலுகைகள் ஏற்புடையவை. அதே நேரத்தில், வாக்குகளைக் கவர, கவா்ச்சிகரமான அறிவிப்புகளின் மூலம் பொருளாதாரத்தையே சீா்குலைக்கும் வாக்குறுதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். தோ்தல் ஆணையம் தனது இயலாமையை வெளிப்படுத்தி இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றம் என்னதான் செய்துவிட முடியும்? வாக்காளா்கள் இலவசங்களில் மயங்காமலிருப்பதுதான் இதற்குத் தீா்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.