புள்ளிவிவரம் இல்லாத தேசம்! | மத்திய அரசை முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் செய்தது குறித்த தலையங்கம்

புள்ளிவிவரம் இல்லாத தேசம்! | மத்திய அரசை முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம் செய்தது குறித்த தலையங்கம்
Updated on
2 min read

நரேந்திர மோடி அரசை "புள்ளிவிவரங்கள் இல்லாத அரசு' என்று, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் நாடாளுமன்றத்தில் பகடி செய்ததில் தவறொன்றும் இல்லை. அவர் பட்டியலிட்டதுபோல, பல்வேறு பிரச்னைகளில் மத்திய அரசால் போதிய புள்ளிவிவரங்களும், தகவல்களும் தர முடியவில்லை. ஆனால், இது ஏதோ இப்போதைய நரேந்திர மோடி அரசிடம் மட்டுமே காணப்படும் குறைபாடு அல்ல. முந்தைய ஆட்சிகளிலும் இதேதான் நிலைமை.
 சுதந்திர இந்தியாவில் ஆட்சிகள் பல மாறினாலும்கூட, போதுமான தரவுகளைத் திரட்டுவதில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். மத்திய அரசில் புள்ளிவிவரம் சேகரிப்பதற்காகவே ஒரு துறை இருக்கிறது. மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு துறைகள் புள்ளிவிவரங்களைச் சேகரித்துப் பாதுகாக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது. ஆனாலும்கூட முறையான கண்காணிப்பும், சரியான வழிகாட்டுதலும், முனைப்பும் இல்லாததால் நமது அரசுகள் அனைத்துமே புள்ளிவிவரம் இல்லாத அரசுகளாகத்தான் இருந்து வருகின்றன.
 தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு இரண்டுமே எந்தவொரு நாட்டுக்கும் அடிப்படை அத்தியாவசியங்கள் என்பது எல்லோருக்குமே தெரியும். மதவாரியாக, ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதிலும் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், மொழிவாரிக் கணக்கெடுப்பும்கூட தேவையானதுதான். தரவுகளின் அடிப்படையில்தான் கொள்கைகளை வகுத்து, திட்டமிட்டு நிர்வாகத்தை செம்மையாக நடத்த முடியும்.
 உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்த இரண்டு வெவ்வேறு வழக்குகள் இந்தியாவின் பலவீனமான புள்ளிவிவரப் பின்புலத்தை வெளிச்சம் போட்டன. கொள்ளை நோய்த்தொற்று உயிரிழப்புக்கான இழப்பீடு பிரச்னையும், இந்தியாவின் பட்டினிச் சாவுகள் குறித்த கேள்வியும் உச்சநீதிமன்றம் அரசிடம் சில கேள்விகளை எழுப்பக் காரணமாயின.
 பல மாநிலங்களில் கொள்ளை நோய்த்தொற்று தொடர்பான உயிரிழப்பு குறித்த புள்ளிவிவரங்கள் முறையாகச் சேகரிக்கப்படவில்லை. அதிகாரபூர்வமாக மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட கொவைட் 19 உயிரிழப்புகளைவிட, அதற்கான இழப்பீடு கோருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. அப்படியானால், முறையான கணக்கெடுப்பு மாநில அரசுகளால் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
 அரசுக்கு அவப்பெயர் வராமல் இருப்பதற்காகவும், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தாமல் இருப்பதற்காகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசுகள் குறைத்துக் காட்டின. கொவைட் 19 உயிரிழப்புகளை இயற்கை மரணங்களாகவும், இதய அடைப்பு மரணங்களாகவும் வகைப்படுத்த மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் முனைந்தன. அதனால் சரியான புள்ளிவிவரம் திரட்டப்படவில்லை.
 இந்தியா முழுவதும் சமுதாய உணவகங்கள் நிறுவுவதற்கான தேசியக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்கிற பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. அது தொடர்பான விசாரணையின்போது, இந்தியாவில் பட்டினிச் சாவுகள் குறித்த புள்ளிவிவரம் அரசிடம் இருக்கிறதா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அது குறித்தத் தரவுகள் அரசிடம் இல்லை என்கிற அவலநிலை அந்த விசாரணை மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.
 இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு முயற்சி அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. 1872-இல் அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் லார்டு மேயோவால் அறிமுகப்படுத்தப்பட்டு முதலாவது மக்கள்தொகை கணக்கெடுப்பு 1881-இல் நிறைவு பெற்றது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிற வழிமுறையும் அப்போது முதல் தொடங்கியது.
 சுதந்திர இந்தியாவில் 1951 முதல், "இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948'-இன் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அது தொடர்ந்தது. 2021-இல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு கொள்ளை நோய்த்தொற்று காரணமாக தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.
 அதேபோல பிறப்பு, இறப்பு குறித்த புள்ளிவிவரங்கள் மாநிலங்களால் திரட்டப்பட்டு மத்திய அரசால் தொகுக்கப்படுகிறது. கடைசியாக 2019-இல் எடுக்கப்பட்ட புள்ளிவிவரப்படி, அந்த ஆண்டு இந்தியாவில் 83 லட்சம் மரணங்கள் காணப்பட்டன. அவற்றில் 92% மட்டுமே முறையாக பதிவு செய்யப்பட்டவை. இந்த மரணங்களில் மருத்துவச் சான்றிதழுடன் பதிவு செய்யப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. 2019-இல் 20.7% மரணங்கள் மட்டுமே சான்றிதழுடனானவை. அதற்கு முந்தைய ஆண்டுகளில் காணப்பட்டதைவிட இந்த விகிதம் குறைந்து வருகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
 மாநிலங்களுக்கு மாநிலம் இறப்புகள் பதிவு செய்யப்படுவது வேறுபடுகிறது. கோவாவில் அனைத்து மரணங்களும் மருத்துவச் சான்றிதழுடனானவை என்றால், பிகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேச மாநிலங்களில் 10% கூட மருத்துவச் சான்றிதழுடனானவை அல்ல. பிறப்பு சான்றிதழும்கூட 100% பதிவு செய்யப்படுவதில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், முறையான புள்ளிவிவரங்கள் திரட்டுவது என்பது சாத்தியமல்ல.
 அரசியல் தலையீடு எதுவும் இல்லாமல் புள்ளிவிவர சேகரிப்பு கட்டாயமாக்கப்படுவது உறுதிப்பட்டால் மட்டுமே முறையான திட்டமிடல் சாத்தியம். தரவுகளின் அடிப்படையில் அல்லாத கொள்கைகளும், திட்டங்களும் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லாது. புள்ளிவிவரம் இல்லாத நிர்வாகம் என்பது இலக்கு இல்லாத பயணம் போன்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com