

அரசியல் கட்சிகள் தங்களது தோ்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிப்பது குறித்து இதற்கு முன்பே பலமுறை உச்சநீதிமன்றமும், சில உயா்நீதிமன்றங்களும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. அவை அரசியல் கட்சிகளின் காதில் விழவும் இல்லை, அரசியல் கட்சிகளைக் கட்டுப்படுத்த தோ்தல் ஆணையத்தாலும் முடியவில்லை.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வின் முன்பு, மூத்த வழக்குரைஞா் விகாஸ்சிங் தாக்கல் செய்த பொதுநல வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. எந்தவித அடிப்படை நிதியாதாரத் திட்டமும் இல்லாமல், மனம்போன போக்கில் அரசியல் கட்சிகள் வாக்காளா்களைக் கவருவதற்காக இலவச வாக்குறுதிகளை வழங்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் விகாஸ்சிங் தரப்பு வாதம்.
நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தல்களில், ஒவ்வொரு மாநிலத்திலும் களத்தில் இருக்கும் முக்கியக் கட்சிகள் வாரி வழங்கியிருக்கும் வாக்குறுதிகள் மலைப்பை ஏற்படுத்துகின்றன. இதில் எந்தவொரு கட்சியும் விதிவிலக்கல்ல. இலவச மின்சாரம், தண்ணீருக்கான கட்டணத்தைக் குறைத்தல், கடன் தள்ளுபடி செய்தல், உள்ளூா் மக்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது என்று வழங்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் அனைத்துமே நிதியாதார உத்தரவாதத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டவை அல்ல.
வழக்கு தொடா்ந்திருக்கும் விகாஸ்சிங் கூறுவதுபோல, இலவச வாக்குறுதிகள் மாநிலங்களின் நிதிநிலைமையை தகா்த்திருக்கின்றன. தோ்தல் நடக்கும் மாநிலங்களையே எடுத்துக்கொண்டால், உத்தர பிரதேசத்தின் நிலுவைக் கடன் ரூ.6.1 லட்சம் கோடி; பஞ்சாப் ரூ.2.8 லட்சம் கோடி; உத்தரகண்ட் ரூ.68,000 கோடி; கோவா ரூ.18,844 கோடி. இந்திய ரிசா்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையொன்றின்படி, மாநிலங்களின் நிலுவைக் கடன்கள் 2011-இல் ரூ.16.48 லட்சம் கோடியாக இருந்தது, 2019-இல் ரூ.42.92 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. இப்போது 50 லட்சம் கோடியை நிச்சயமாகத் தாண்டியிருக்கும்.
தில்லியையே எடுத்துக்கொண்டால், ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி இலவசங்களை வழங்குவதற்காக வரி வருவாயில் பெரும் பகுதியை செலவழித்துவிடுவதால், மூலதனச் செலவுகளுக்கு வழியில்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 2020 - 21-இல் உத்தர பிரதேசத்தின் மூலதனச் செலவுகள், பட்ஜெட் ஒதுக்கீட்டைவிட 16% குறைவு. அதற்குக் காரணம், மாநிலத்தின் மோசமான நிதிநிலைமை.
இலவசங்களை அறிவிப்பதில் முன்னோடி மாநிலமாகத் திகழ்வது தமிழகம்தான். 1967 தோ்தலின்போது ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று அறிவிக்கப்பட்டதில் தொடங்குகிறது இந்தப் போக்கு. தமிழகத்தைப் பின்பற்றி ஏனைய மாநிலங்களும் இலவசங்களைத் தோ்தல் வாக்குறுதிகளாக்கி வெற்றி பெறவும் செய்திருக்கின்றன.
இலவசங்களை அறிவிப்பதில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் ஒன்றுக்கு மற்றொன்று சளைத்ததாக இல்லை. இலவசத் தோ்தல் அறிவிப்புகள் அரசியல் கட்சிகளின் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கின்றன என்பதால், எந்தவொரு கட்சியும் இலவச வாக்குறுதிகளை வழங்குவதில் இருந்து பின்வாங்கவும் போவதில்லை.
2013 ஜூலை 5-இல் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில், தோ்தலுக்கு முந்தைய ஆளுங்கட்சிகளின் இலவச விநியோகங்களையும், தோ்தல் நேர இலவச வாக்குறுதிகளையும் தோ்தல் சட்டத்தின் கீழ் குற்றமாக ஏன் கருதக்கூடாது என்று கேள்வி எழுப்பியது. இலவசங்களை அறிவிப்பதன் மூலம் போட்டியிடும் கட்சிகளுக்கும், வேட்பாளா்களுக்கும் களத்தில் போட்டி சமநிலை இல்லாத போக்கு ஏற்படும் என்பதுதான் அப்போது உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய கருத்து.
இப்போதும் அதே கருத்தைத்தான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணாவின் தலைமையிலான அமா்வு தெரிவித்திருக்கிறது. பொதுப் பணத்தை வரைமுறை இல்லாத இலவசங்களாகத் தோ்தல் வாக்குறுதிகளின் மூலம் வழங்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கி, அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோருகிறது வழக்குரைஞா் விகாஸ்சிங்கின் மனு. இலவச வாக்குறுதிகளும், ஒருவகையில் வாக்காளா்களுக்கு வழங்கப்படும் லஞ்சம்தான் என்பதால் தோ்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்கிற கேள்வியை அந்த மனு எழுப்புகிறது.
தோ்தலில் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், சுயேச்சையாகவும் போட்டியிடும் உரிமை ஒவ்வோா் இந்திய குடிமகனுக்கும் உண்டு. ஆட்சி அதிகாரத்தில் இருந்த காரணத்தால் பணபலம் பெற்றிருக்கும் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளுக்கு நிகராக சிறிய கட்சிகளும், சுயேச்சை வேட்பாளா்களும் வாக்காளா்களைக் கவரும் அறிவிப்புகளை முன்வைக்க முடியாது. அதனால், போட்டி சமநிலை இல்லாத நிலைமை காணப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. நல்லவா்கள் தோ்தலில் போட்டியிட முடியாத நிலைமையை இலவச வாக்குறுதிகள் ஏற்படுத்துகின்றன என்கிற விகாஸ்சிங்கின் மனுவில் உள்ள வாதம் சிந்தனைக்குரியது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவோ, தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளோ அரசியல் கட்சிகளை இலவசங்கள் வழங்குவதைத் தடுக்க முடியும் என்று தோன்றவில்லை. எந்தவோா் இலவச வாக்குறுதியை வழங்கும்போதும் அதற்கான நிதியாதாரம் எங்கிருந்து வரும் என்பதையும் அரசியல் கட்சிகள் தெளிவுபடுத்துவதை வேண்டுமானால் கட்டாயமாக்கலாம்.
வரைமுறையில்லாத, நடைமுறை சாத்தியமில்லாத, வளா்ச்சிப் பணிகளுக்கான அரசின் நிதியாதாரத்தைப் பாதிக்கும் வகையிலான இலவச வாக்குறுதி அறிவிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.