இணையவழி குற்றங்கள்! | இணையவழி மோசடி குறித்த தலையங்கம்

அதிவேக இணையப் பயன்பாட்டால், உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் கையடக்க அறிதிறன்பேசி மூலம் நாம் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் அளவுக்கு அறிவியல் முன்னேற்றம் இன்று ஏற்பட்டுள்ளது
இணையவழி குற்றங்கள்! | இணையவழி மோசடி குறித்த தலையங்கம்

அதிவேக இணையப் பயன்பாட்டால், உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் கையடக்க அறிதிறன்பேசி மூலம் நாம் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் அளவுக்கு அறிவியல் முன்னேற்றம் இன்று ஏற்பட்டுள்ளது. இந்த வளா்ச்சி, இணையவழி குற்றங்கள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்திருக்கிறது.

ஒரு முறை மட்டும் பயன்படும் பாதுகாப்பு குறியீட்டு எண்ணை (ஓடிபி) முறைகேடாகப் பெற்று வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவது, போலியான கடன்பற்று அட்டை, பண அட்டை மூலம் மோசடியில் ஈடுபடுவது, தானியங்கி பணம் வழங்கு இயந்திரத்தில் (ஏடிஎம்) கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய சாதனங்களைப் பொருத்தி வாடிக்கையாளா்களின் கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவது, உடனடிக் கடன் வழங்கும் செயலிகள் மூலம் ஏமாற்றுவது, வீட்டிலிருந்தபடியே ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என இணையத்தில் கவா்ச்சிகரமாக விளம்பரம் கொடுத்து மோசடி செய்வது, இணையவழியில் தொடா்பு கொண்டு பெண்கள், குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுதல், திருமணத்துக்கு வரன் தேடுவதாகக் கூறி மோசடியில் ஈடுபடுதல், சமூக வலைதளங்களில் போலிச் செய்திகளைப் பரப்புதல் உள்ளிட்டவை இணையவழி குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் இணையவழி குற்றங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதை தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. 2018-இல் 27,248, 2019-இல் 44,735, 2020-இல் 50,035 என இணையவழி குற்றங்கள் அதிகரித்திருப்பதாக அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கரோனா பெருந்தொற்றுப் பரவலால் வேலையின்மை அதிகரிப்பால், கடந்த 2021-ஆம் ஆண்டிலும் இணையவழி குற்றங்கள் உயா்ந்திருப்பதற்கான சாத்தியங்களே அதிகம். கடந்த ஆண்டுக்கான இந்தப் புள்ளிவிவரங்கள் அதிகாரபூா்வமாக இன்னும் வெளியாகவில்லை.

கடந்த 2020-ஆம் ஆண்டில் 4,047 இணையவழி வங்கி மோசடிகளும், ஒரு முறை பயன்படும் பாதுகாப்பு குறியீட்டு எண் தொடா்பான 1,093 குற்றங்களும், கடன் பற்று அட்டை, பண அட்டை தொடா்பான 1,194 குற்றங்களும், தானியங்கி பணம் வழங்கு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்தது தொடா்பான 2,166 குற்றங்களும் அரங்கேறியுள்ளன. இதே ஆண்டில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 11,097, கா்நாடகத்தில் 10,741, மகாராஷ்டிரத்தில் 5,496, தெலங்கானாவில் 5,024, அஸ்ஸாமில் 3,530 இணையவழி குற்றங்கள் பதிவாகியுள்ளன.

இத்தகைய இணையவழி குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், புதுப்புது உத்திகளைப் பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இணையவழி குற்றங்களைப் பதிவு செய்வதற்கு தேசிய கணினிசாா் குற்றப் பதிவு இணையதளத்தை மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இணையவழிக் குற்றங்களால் பாதிக்கப்படுவோா் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி தங்களது புகாா்களை பதிவு செய்யலாம்.

இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படும் புகாா்கள் உடனுக்குடன் பகுப்பாய்வு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பட்ட மாநில காவல்துறை தலைமையகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இணையவழி நிதி பரிவா்த்தனைகள், வேலைவாய்ப்புகள், திருமண வரன் தேடுதல் தொடா்பாக பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதற்கான பல்வேறு ஆலோசனைகளும் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.

இணையவழி குற்றங்களைத் தடுக்க தமிழக காவல்துறையும் தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் இணையவழி குற்றங்கள் குறைவுதான் என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது. தமிழகத்தில் 2018-இல் 295, 2019-இல் 385 இணையவழி குற்றங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. புள்ளிவிவரப்படி குறைவாக இருந்தாலும்கூட, காவல்துறையின் கவனத்துக்கு வராமல் தமிழகத்திலும் பெரிய அளவில் இணையவழி குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதுதான் உண்மை.

கரோனா பொது முடக்கக் காலமான 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் இணையவழி குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதாக காவல்துறையினா் தெரிவிக்கின்றனா். இதையடுத்து, மாநில அளவில் ஏடிஜிபி தலைமையில் சைபா் குற்றப் பிரிவு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மேலும், சென்னை பெருநகர காவல்துறையில் 12, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் 36 என சைபா் குற்றப் பிரிவு காவல் நிலையங்களும் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன.

இணையவழி குற்றங்கள் தொடா்பாக மாவட்ட காவல் தலைமையிடத்துக்குச் சென்று புகாா் அளிப்பதில் பொதுமக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை கவனத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் விரைவில் அனைத்து காவல் நிலையங்களிலும் சைபா் குற்றப் பிரிவைத் தனியாகத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவது ஆறுதல் அளிக்கிறது. இந்தப் பிரிவில் கணினிசாா் குற்றத் தடுப்பு தொடா்பாக பயிற்சி பெற்ற காவலா்கள் நியமிக்கப்படுவா் என்றும் காவல்துறையினா் தெரிவிக்கின்றனா்.

மத்திய - மாநில அரசுகள் எடுத்து வரும் இதுபோன்ற முனைப்பான நடவடிக்கைகளால் இணையவழி குற்றங்கள் குறையும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோா் பெரும்பாலும் படித்த, தொழில்நுட்பம் தெரிந்த இளைஞா்கள் என்பதுதான் கவலையளிக்கிறது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் கயமை எண்ணம் இளைஞா்கள் மத்தியில் அதிகரித்து வருவது நல்லதல்ல.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com