

தமிழகத்திலுள்ள ஒன்பது மாநகராட்சிகள், மூன்று நகராட்சிகளில் ரூ. 420 கோடி செலவில் 24 மணி நேர குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்திருக்கிறார். திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர், கடலூர், தாம்பரம், ஈரோடு, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகளும், காரைக்குடி, புதுக்கோட்டை, ராஜபாளையம் நகராட்சிகளும் இந்தத் திட்டத்தால் பயனடைய இருக்கின்றன.
தமிழ்நாட்டிலுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட முக்கியமான பல மாநகராட்சிகள் ஏற்கெனவே குடிநீர் குழாய் வசதி பெற்றிருக்கின்றன. மாநகராட்சிகள், நகராட்சிகள் அளவுக்கு குடிநீர் இணைப்புகள் கிராமங்கள் வரை சென்றடையவில்லை என்றாலும்கூட, பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் பல பஞ்சாயத்து ஒன்றியங்களில் பொதுக் குழாய்களின் மூலம் நடைபெறாமல் இல்லை.
குழாய் அமைத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது என்பது அரசின் அடிப்படை கடமை. ஆனால், சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாடி மகிழும் வேளையில், அனைவருக்கும் குடிநீர் என்பது இப்போது வரை கானல் நீர் கனவாகத்தான் இருக்கிறது என்பதுதான் நிதர்சன உண்மை.
அனைவருக்கும் குடிநீர் என்பதில் மத்திய அரசும் முனைப்பு காட்டாமல் இல்லை. நரேந்திர மோடி அரசு "உயிர் நீர் திட்டம்' (ஜல் ஜீவன் மிஷன்) என்கிற திட்டத்தை அறிவித்து இந்தியாவின் கிராமங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் 2024-க்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது என்பதில் முனைப்பு காட்டுகிறது. நீர் மேலாண்மை திட்டங்கள், மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் புத்தாக்கம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் "உயிர் நீர் திட்டம்' வெற்றிகரமாக செயல்படுவதை உறுதிப்படுத்த ஊக்குவிக்கிறது.
"உயிர் நீர் திட்டம்' என்பது உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளும், மத்திய - மாநில அரசுகளும் மட்டுமே செயல்படுத்தும் திட்டமாக இல்லாமல், பரவலான விழிப்புணர்வின் மூலம் சமுதாயப் பங்களிப்புடன் செயல்படுத்துவது என்பதும்கூட அந்தத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று. இந்தியா முழுவதும் "அனைவருக்கும் குடிநீர்' என்கிற குறிக்கோளுடன் மத்திய - மாநில அரசுகள் முனைப்புடன் திட்டங்களை வகுத்து செயல்படுகின்றன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஏப்ரல் 3, 2023 புள்ளிவிவரப்படி இந்தியாவில் 19,43,60,951 ஊரகப்புறங்களில் வாழும் குடும்பங்கள் இருக்கின்றன. அவற்றில் 11,65,43,091 குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது 59.96%. "இல்லந்தோறும் குடிநீர் இணைப்பு' திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் (2023-24) மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.70,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, கிராமங்களில் ஐந்தில் ஒரு வீட்டுக்கு மட்டும்தான் குடிநீர் குழாய் இணைப்பு இருக்கிறது. அதிலும்கூட மாநிலத்துக்கு மாநிலம் மிகப் பெரிய வேறுபாடு காணப்படுகிறது. ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், பிகார் மாநிலங்கள் கிராமப்புறங்களில் குடிநீர் இணைப்பு வழங்குவதில் மிகவும் பின்தங்கியிருக்கின்றன.
குடிநீர் குழாய்களை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதும், குழாய்கள் வழங்குவதும் நிர்வாக ரீதியிலான செயல்பாடுகள்; அவற்றை நிறைவேற்றிவிட முடியும். ஆனால், குழாய்களின் மூலம் குடிநீர் வழங்க இயற்கையின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. பெரும்பாலான மாநிலங்களில் உள்ள நகரங்களில்கூட குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டும், முறையாக குடிநீர் வழங்குவது இல்லாமல் இருக்கும் நிலைமை இந்தியாவில் காணப்படுகிறது.
உலகளாவிய நிலையில் அதிகமான தண்ணீர் பற்றாக்குறை காணப்படும் 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த 17 நாடுகளில் இந்தியாவையும் பாகிஸ்தானையும் தவிர ஏனைய 15 நாடுகளும் மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க பகுதியிலுள்ள பாலைவன நாடுகள் என்பதுதான் வேடிக்கை. அந்தப் பட்டியலில் இந்தியா இடம்பெறுவதற்கான காரணமே இல்லை என்பது அதைவிட வேடிக்கை.
உலகின் சராசரி மழைப்பொழிவு 1,000 மி.மீ. என்றால், இந்தியாவின் மழைப்பொழிவு 1,070 மி.மீ. இந்தியா முழுவதும் பல ஜீவநதிகள் பாய்கின்றன. ஆனாலும்கூட 700 மாவட்டங்களில் 256 மாவட்டங்கள் மிக அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி தண்ணீர் தேவையை ஈடுகட்டுகின்றன. தலைநகர் தில்லி, நமது சென்னை உள்பட 21 முக்கிய இந்திய நகரங்களில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலத்தடி நீர் வற்றும் அபாயம் காணப்படுகிறது.
மத்திய நிலத்தடி நீர் வாரியப் புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் 7,083 பகுதிகள் மழைநீர் கிடைக்கும் அளவைவிட, அதிகமான நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. இந்தியாவின் 67% விவசாயத் தேவையையும், 80% கிராமப்புற குடிநீர் தேவையையும் நிலத்தடி நீர்தான் ஈடுகட்டுகிறது. பஞ்சாப், ஹரியாணா, தமிழ்நாடு மூன்று விவசாயம் சார்ந்த மாநிலங்களும் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன என்கிறது அந்தப் புள்ளிவிவரம்.
நிலத்தடி நீர் குறித்த நாடாளுமன்ற குழு அறிக்கை இரண்டு வாரங்களுக்கு முன் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. விவசாயத் தேவைகளுக்கான நிலத்தடி நீர் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம்தான் வருங்காலத்தில் மிகப் பெரிய தட்டுப்பாடு வராமல் பாதுகாக்க முடியும். நீர்வளம் என்பது மாநிலப் பட்டியலில் இருப்பதால், மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படாத பயிர்களை ஊக்குவிப்பது ஓரளவுக்குத் தீர்வாக இருக்கும். இலவச மின்சாரம் என்பதால் நிலத்தடி நீர் வீணாவதும் தடுக்கப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.