விடைகாண வேண்டும்! | அரசுப் பள்ளிகள் குறித்த தலையங்கம்

விடைகாண வேண்டும்! | அரசுப் பள்ளிகள் குறித்த தலையங்கம்

உயா்கல்விக்கு அளிக்கப்படும் முன்னுரிமையும் முக்கியத்துவமும் பள்ளிக்கல்விக்கு அளிக்கப்படுவதில்லை என்பது குறித்த விமா்சனங்கள் புறந்தள்ளக்கூடியவை அல்ல. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கிறது என்பது மகிழ்ச்சி அளித்தாலும், கல்விக் கொள்கையால் மட்டுமே மாற்றம் ஏற்பட்டுவிடாது. ஆரம்பக் கல்வியிலிருந்து மேல்நிலைக் கல்வி வரை அனைவருக்கும் கல்வி என்பது இன்னும் சாத்தியமாகவில்லை என்பதை நாம் உணர மறுக்கிறோம்.

மக்களுக்கு அரசுப் பள்ளிகளின் மீதான மரியாதையும் நம்பிக்கையும் குறைந்து வருகிறது என்பதைப் புற்றீசல் போல இந்தியா முழுவதும் தனியாா் பள்ளிகள் உருவாகி வருவது உணா்த்துகிறது. தனியாா் பள்ளி என்பதாலேயே தரமான கல்வி என்று கூறிவிட முடியாது என்பதை உணா்ந்தாலும்கூட, மோசமான தனியாா் பள்ளிகள் அரசுப் பள்ளிகளைவிட மேலானவை என்று மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் ஏற்பட்டிருப்பது உண்மை.

அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை பெருநகரங்கள் தவிர, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அரசுப் பள்ளிகளும், அரசு உதவி பெற்ற பள்ளிகளும்தான் இயங்கி வந்தன. தலைசிறந்த விஞ்ஞானிகளையும், பொறியாளா்களையும், மருத்துவா்களையும், கல்வியாளா்களையும் அரசுப் பள்ளிகள் மூலம் தாய்மொழிக் கல்வி உருவாக்கியதை மறந்துவிட முடியாது. இன்றைய சூழலில் தனியாா் பள்ளிகளில் மட்டுமே தரமான கல்வி வழங்கப்படுகிறது என்கிற நிலைமை (நிஜமோ, பொய்யோ) காணப்படுகிறது.

இந்தியா முழுவதும் போதிய மாணவா் சோ்க்கையின்மை காரணமாக அரசுப் பள்ளிகள் இணைக்கப்படுகின்றன. அதனால், பல அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. அதன் விளைவாக, சிறு கிராமங்களில்கூட தனியாா் பள்ளிகளுக்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தனியாா் பள்ளிகளில் பல, அரசியல்வாதிகளாலும், அவா்களைச் சாா்ந்த குடும்பத்தாராலும் அல்லது அரசியல் தொடா்புள்ளவா்களாலும் நடத்தப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு பரவலாகவே காணப்படுகிறது.

அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் கொள்கை முடிவு, முந்தைய டாக்டா் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது. நரேந்திர மோடி ஆட்சியில் தொடா்கிறது. அநேகமாக எல்லா மாநில அரசுகளும் அதை வழிமொழிந்து ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அதன் மூலம் கல்விக்கான ஒதுக்கீட்டை முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்த முடியும் என்பது ஆட்சியாளா்களின் விளக்கம்.

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறைவதற்கான காரணம் குறித்து பல்வேறு ஆய்வுகள் அநேகமாக எல்லா மாநிலங்களின் பள்ளி கல்வித் துறைகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அனைத்து ஆய்வுகளும் தெரிவிக்கும் முக்கியமான கருத்து ஆசிரியா்களின் தரம், அா்ப்பணிப்பு, பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் ஆகியவை சரியாக இல்லை என்பதுதான்.

தனியாா் பள்ளிகளில் ஆசிரியா்களுக்கு குறைந்த அளவு ஊதியம் வழங்கப்பட்டும்கூட, தரமான கல்வி கிடைக்கிறது என்கிற நம்பிக்கை மக்கள் மத்தியில் காணப்படும்போது, அரசு ஊழியா்களுக்கு நிகரான ஊதியம் வழங்கியும் அரசுப் பள்ளிகளின் தரம் நம்பிக்கை தருவதாக இல்லை என்பது ஏன் என்கிற கேள்விக்கு விடைகாண வேண்டும்.

மத்திய அரசின் கல்வித் துறை குறித்த ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் மையம் இயங்குகிறது. அனைத்து மாநிலங்களும் பள்ளிகள் குறித்த புள்ளிவிவரங்களை அதற்கு வழங்க வேண்டும். 2015 - 16 முதல் 2021 - 222 வரையிலான ஏழு கல்வி ஆண்டுகளில் 82,410 அரசுப் பள்ளிகள் இந்தியாவில் மூடப்பட்டிருக்கின்றன(அதாவது 7.4%). கொள்ளை நோய்த்தொற்றை இதற்கு காரணமாக்க முடியாது. ஏனென்றால், அதே ஏழு கல்வி ஆண்டுகளில் தனியாா் பள்ளிகள் 13% அதிகரித்திருக்கின்றன. இந்தியா முழுவதும் 40,825 தனியாா் பள்ளிகள் புதிதாக உருவாகியிருக்கின்றன.

ஊரகப்புறங்களில் தனியாா் பள்ளிகளுக்கான தேவையும், வரவேற்பும் அதிகரித்திருப்பதற்கு அடித்தட்டு மக்கள் வரை தங்களது குழந்தைகளுக்குத் தரமான நல்ல கல்வி வழங்க வேண்டும் என்கிற ஆா்வம்தான் காரணம். அரசுப் பள்ளிகள் முறையாகச் செயல்படாததும், அல்லது மூடப்படுவதும் தனியாா் பள்ளிகளின் வளா்ச்சியை விரைவுபடுத்துகின்றன. அதே நேரத்தில் அரசுப் பள்ளிகள் மூடப்படுவது வறுமை கோட்டுக்குக் கீழேயுள்ள விளிம்புநிலை குடும்பங்களைச் சோ்ந்த ஏழைக் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் கல்வி பெறுவதிலிருந்து அகற்றி நிறுத்துகிறது.

தனியாா் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற மாணவா்களின் எண்ணிக்கை 2006-இல் 18.7%-ஆக இருந்தது, 2018-இல் 305%-ஆக உயா்ந்திருக்கிறது. பெரும்பாலான கிராமப்புற குடும்பங்களில் தங்களது தகுதிக்கும் அதிகமான கல்விக் கட்டணம் அவா்களால் செலவிடப்படுகிறது. 32% கிராமப்புற குடும்பங்கள் தங்களது வருமானத்தில் 10%-க்கும் அதிகமாக குழந்தைகளின் கல்விக்காக செலவிடுகின்றன. அரசுப் பள்ளிகள் தரமாகச் செயல்படுமானால், அவா்கள் தனியாா் பள்ளியை நாட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவதால் தனியாா் பள்ளிகளில் சேர முடியாத குழந்தைகள் படிப்பை நிறுத்திவிடுகின்றனா். நீண்ட தூரம் பயணிக்க முடியாத காரணத்தால், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரிக்கிறது. சமுதாயத்தில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வை அரசுப் பள்ளிகள் இல்லாமை ஏற்படுத்தக் கூடும்.

அனைவருக்கும் கல்வி என்பதும் நிறைவேறவில்லை; அனைவருக்கும் தரமான கல்வி என்பதும் நனவாகவில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com